இந்திய வீரர்கள் தலை துண்டிப்பு! 'ஒருபோதும் இந்த கீழ்த்தரமான செயலை செய்ய மாட்டோம்': பாக்.,

இந்தியராக இருந்தாலும் கூட, ஒரு ராணுவ வீரரை இந்தளவிற்கு நடத்தமாட்டோம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டினை தாண்டி வந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த இந்திய வீரர்கள் மீது, பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை குழு (BAT) தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு வீரர்களின் தலையை பாகிஸ்தான் துண்டித்துள்ளது.

அந்த இரு வீரர்களின் உடல்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒருவரது பெயர், நைப் சுபேந்தர் பரம்ஜித் சிங் என்றும் மற்றொருவர், பிஎஸ்எஃப் 300-வது பட்டாலியனைச் சேர்ந்த தலைமைக் காவலர் பிரேம் சாகர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி அளித்த பேட்டியில், பாகிஸ்தானின் இந்த செயல் மிகவும் ‘கண்டிக்கத்தக்கது’ என்றும் ‘மனிதத் தன்மையற்ற செயல்’ என்று கூறிய அவர், ‘இந்த வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது’ என்றார். மேலும், இந்த இரு ராணுவ வீரர்களின் உடல்கள் மிக மோசமாக சிதைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது எனவும், ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் தங்களது ராணுவம் மீது நம்பிக்கை உள்ளதென்றும், இந்த மனித தன்மையற்ற செயலுக்கு, தக்க பதிலடியை இந்தியா கொடுக்கும் என்றும் கூறினார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த ராணுவத் தளபதி பிபின் ராவத், ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், எல்லைகளில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவரித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத் தலைமை ஜெனரல் குமர் ஜாவத் பஜ்வா, நேற்று காலையில் எல்லை பாதுகாப்பு பகுதிக்கு வந்துச் சென்ற பின்புதான், எல்லையில் உள்ள கிருஷ்ண காதி பகுதியில் இத்தாக்குதல் நத்தப்பட்டுள்ளது. ஆனால், இதனை பாகிஸ்தான் முற்றிலும் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பாகிஸ்தான் ராணுவம் சிறந்த தொழில்முறை கொண்ட படையாகும். இந்தியராக இருந்தாலும் கூட, ஒரு ராணுவ வீரரை இந்தளவிற்கு நடத்தமாட்டோம்” என குறிப்பிட்டுள்ளது.

×Close
×Close