மருத்துவமனை கட்டணம் செலுத்த ரூ.7,500-க்கு பிறந்த குழந்தையை விற்ற தம்பதியர்

ஒடிஷாவில் மருத்துவமனை கட்டணம் செலுத்த பணமில்லாததால் பிறந்த பெண் குழந்தையை, குழந்தையில்லாத தம்பதியினருக்கு 7,500 ரூபாய்க்கு பெற்றோர் விற்பனை செய்தனர்.

ஒடிஷா மாநிலத்தில் மருத்துவமனை கட்டணம் செலுத்த பணமில்லாததால் பிறந்த பெண் குழந்தையை, குழந்தையில்லாத தம்பதியினருக்கு 7,500 ரூபாய்க்கு பெற்றோர் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒடிஷா மாநிலம் ராஜ்நகர் பகுதியிலுள்ள ரிஹாகதா கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் நிராகர் மோஹரன்னா மற்றும் கீதாஞ்சலி. கீதாஞ்சலி பிரசவத்திற்காக கேந்திரபாரா மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, ஆஷா எனும் சமூக நல அமைப்பை சேர்ந்த பணியாளர் ஒருவர், கீதாஞ்சலியை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தால், சிறப்பான சிகிச்சை கிடைக்கும் என நம்ப வைத்து அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த தனியார் மருத்துவமனையில் கடந்த 1-ஆம் தேதி கீதாஞ்சலிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தினசரி கூலியான நிராகர் மோஹரன்னாவால் மருத்துவ செலவு 7,500 ரூபாயை செலுத்த முடியவில்லை. இதனால், அந்த தனியார் மருத்துவமனை ஏற்பாடு செய்த தரகர் மூலமாக பிறந்த பெண் குழந்தையை, குழந்தையில்லாத தம்பதியருக்கு ரூ.7,500–க்கு விற்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கேந்திரபாரா காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை இதுதொடர்பாக புகார் அளித்தார். அந்த புகாரில், “ஆஷா அமைப்பின் பணியாளர் ஒருவர் எங்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அரசு மருத்துவமனையில் கட்டணமில்லாமல் இலவச சிகிச்சை அளிப்பதுபோலவே, தனியார் மருத்துவமனையிலும் இலவச சிகிச்சை அளிப்பர் என நினைத்தேன். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் ரூ.7,500-ஐ செலுத்த வேண்டும் என கூறியது. என்னிடம் அப்போது 1,000 ரூபாய் மட்டுமே இருந்தது. ஆனால், கட்டணம் செலுத்தினால் தான் எங்களை வெளியே அனுப்ப மாட்டோம் என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால், மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை விற்று கட்டணத்தை செலுத்துமாறு கூறியது. அதன்பின்பு, மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்த தரகர் மூலம் குழந்தையில்லாத தம்பதியருக்கு எங்கள் குழந்தையை விற்றனர்.”, என தெரிவித்தார்.

மேலும், “ஆஷா அமைப்பின் பணியாளர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு எங்களை தவறாக வழிநடத்தினார். இச்சம்பவத்தால் நான் மிகவும் காயமடைந்துள்ளேன். குழந்தை விற்பனையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்”, என குறிப்பிட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குழந்தையை வாங்கியதாக கூறப்படும் தம்பதியினரை அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

×Close
×Close