கர்நாடக மாநிலத்தில் கொண்டாடப்பட உள்ள திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள தன்னை அழைக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் ஹெக்டே அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் எங்குபார்த்தாலும் ‘மெர்சல்’ பட விவகாரத்தின் பேச்சு மெர்சலாக உள்ளது. தணிக்கை குழு பார்த்து அனுமதி அளித்த ஒரு படத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து, அதில் உள்ள காட்சிகள் தவறாக உள்ளதாகவும், அதனை மாற்றாவிட்டால் வழக்கு தொடரப்படும் எனவும் பாஜகவினர் எச்சரித்து வருகின்றனர்.
ஒரு ஜனநாயக நாட்டில், அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ள நிலையில், ஒரு படைப்பாளியின் படைப்பை குறை சொல்லி, அதை மாற்றவேண்டும் என எச்சரிப்பதை எந்த வகையில் ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை. பாஜகவினர் தெரிந்துதான் இதுபோன்று நடந்து கொள்கிறார்களா என்றும் புரியவில்லை. எவ்வளவு நாட்களுக்கு தான் மிரட்டியே காரியத்தை சாதிக்க முடியும்?
தமிழகத்தில் நிலைமை இப்படியிருக்க, கர்நாடக மாநிலத்தில் இப்போது பாஜகவினர் மற்றொரு விஷயத்தை வைரல் ஆக்கி வருகின்றனர். அதாவது, இந்த ஆண்டு நடக்க இருக்கும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவிற்கு என்னை அழைக்காதீர்கள் என்று பா.ஜ.கவின் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தென்னிந்தியாவில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தியவர் திப்பு சுல்தான். இவரது பிறந்த நாளான நவம்பர் 10ம் தேதியை ஆண்டுதோறும் கர்நாடக அரசு திப்பு ஜெயந்தி விழாவாகக் கொண்டாடி வருகிறது.
இந்தவிழாவைக் கொண்டாடக்கூடாது என பா.ஜ.க., விஷ்வ ஹிந்து பரிஷத் உட்பட பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திப்பு சுல்தான் இந்துக்கொள்கைகளுக்கு எதிரானவர். பல மக்கள் அவரால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது.
இந்நிலையில் பா.ஜ.கவின் மத்திய அமைச்சர், முதல்வருக்கு சித்தராமையாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “திப்பு சுல்தான் இந்துக்களுக்கு எதிரானவர். அவரது விழாவிற்கு என்னை அழைக்க வேண்டாம். அழைப்புக்கடிதத்திலும் என் பெயரை போட வேண்டாம். என்னால் விழாவில் கலந்து கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இதற்கு வேதனை தெரிவித்துள்ள சித்தராமையா, “அமைச்சர் ஆனந்த குமார் முதலில் திப்புசுல்தான் குறித்து படிக்க வேண்டும். அவர் இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கக் கூடாது. இந்த நிகழ்வை கூட அரசியலாக்க முயற்சிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.