நான் ஒன்றும் குரங்கின் குட்டியல்ல - மத்திய அமைச்சர் சத்தியபால் சிங்

எனக்கு அறிவியல் பற்றிய புரிதல்கள் இருக்கின்றது. இதை இன்று மறுத்தாலும் 20 வருடங்கள் கழித்து ஒப்புக் கொள்வீர்கள்.

அமைச்சர்களில் அவரைப் போல் படித்தவர்கள் யாருமில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்க மீண்டும் முயற்சித்திருக்கின்றார் சத்தியபால். உத்திரப்பிரதேச மாநிலத்தின் பிரதிநிதியாக இருக்கும் மக்களவை உறுப்பினர், சார்லஸ் டார்வின் அவரின் கூற்றை தவறு என்று கடந்த ஜனவரி அன்று கூறியிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில், புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், “நான் முன்பே கூறியிருந்த கூற்றில் மாற்றம் ஒன்றும் இல்லை. நான் அறிவியல் துறை மாணவன். மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றேன். என்னால் அறிவியலை புரிந்து கொள்ள இயலும். என்னைப் பற்றி பேசுபவர்கள் பேசிக் கொண்டே போகட்டும்” என்று கூறினார்.

உத்திரப் பிரதேச மாநிலம் பாக்பத் தொகுதி பாஜக எம்.பி. சத்தியபால் சிங், மாநில கல்வித்திட்டம் பற்றி பேசுகையில் “மாநில அரசு, அதன் கல்வித்திட்டத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகின்றது. அதில், குழந்தைகள் எல்லாம் மனிதர்களிடம் இருந்து வந்தவர்கள் தானே தவிர, குரங்கில் இருந்து வந்தவர்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

“நான் சொல்வதை பலராலும் இன்று ஏற்றுக் கொள்ள முடியாது தான். ஆனால் 20 வருடங்கள் கழித்து ஏற்றுக் கொள்ளலாம். ஒரு உண்மையை மக்களுக்குச் சொல்ல யாரவது ஒருவருக்கு தைரியம் வேண்டும் தானே” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். “நம்முடைய கலாச்சாரம் தொடர்பான பல்வேறு தெளிவுகள் இன்றைய புத்தகங்களில் இல்லை. அதற்காக யாரும் அரசியல்வாதிகளை குறை சொல்லக் கூடாது. அவர்கள் யாரும் என்னைப் போல் அதிகம் படித்தவர்கள் அல்ல” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close