ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்கா

உள்நாட்டு மற்றும் உலகளவிலான பிரச்சனைகளில் ராம்நாத் கோவிந்துடன் ஒன்றாக இணைந்து செயல்பட தாங்கள் எதிர்நோக்கியுள்ளதாகவும் ஹீதர் நவ்ரட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 14-வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்துக்கு அமெரிக்கா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள் கிழமை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், பாஜக சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் 65 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் வரும் 25-ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

பாஜகவை சேர்ந்த ஒருவர் குடியரசு தலைவராவது இதுவே முதல்முறை. மேலும் தலித் சமூகத்திலிருந்து குடியரசு தலைவர் பதவிக்கு தேர்வாகும் இரண்டாவது நபர் ராம்நாத். வெற்றிபெற்ற பின்னர் பேசிய ராம்நாத் கோவிந்த், “உத்தரபிரதேசத்தில் உள்ள சிறிய கிராமத்தில் ஒழுகும் கூரை வீட்டில் வாழ்ந்தேன். என்னைப்போன்று வறுமையான நிலையில் கஷ்டப்படும் அத்தனை பேரின் பிரதிநிதியாக ராஜ்பவன் உள்ளே செல்கிறேன். குடியரசு தலைவராக வேண்டும் என நான் என்றுமே நினைத்ததில்லை. நேர்மையாக உழைக்கும் அத்தனை பேருக்குமான செய்திதான் என்னுடைய வெற்றி.”, என கூறினார்.

அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பரவலாக வாழ்த்துக்கூறிய நிலையில், அமெரிக்காவும் ராம்நாத் கோவிந்துக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நவ்ரட், “இந்தியாவின் குடியரசு தலைவராக வெற்றிபெற்ற ராம்நாத் கோவிந்துக்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.”, என கூறினார்.

மேலும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் நல்ல உறவு இருப்பதாகவும், உள்நாட்டு மற்றும் உலகளவிலான பிரச்சனைகளில் ராம்நாத் கோவிந்துடன் ஒன்றாக இணைந்து செயல்பட தாங்கள் எதிர்நோக்கியுள்ளதாகவும் ஹீதர் நவ்ரட் தெரிவித்துள்ளார்.

×Close
×Close