’வந்தே மாதரம்’ பாடலை பாடுவதை கட்டாயமாக்க மஹாராஷ்டிரா பாஜக வலியுறுத்தல்

மகராஷ்டிராவிலும் கல்வி நிலையங்களில் ’வந்தே மாதரம்’ பாடலை பாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என, பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தினார்.

’வந்தே மாதரம்’ பாடலை அனைத்துக் கல்வி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒலிபரப்பி பாட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மஹாராஷ்டிரா கல்வி நிலையங்களில் ’வந்தே மாதரம்’ பாடலை பாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என, பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, அரசு உயர் நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய எழுத்து தேர்வில், வந்தே மாதரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பாட புத்தகத்தில் குறிப்பிட்ட வங்கமொழியை தான் குறிப்பிட்டதால், தனக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், செவ்வாய் கிழமை தீர்ப்பு வழங்கிய நீதிபதி முரளிதரன், தன்னுடைய உத்தரவில்,
வந்தே மாதரம் பாடல் பக்கிம் சந்திர சாட்டர்ஜி 1882-ஆம் ஆண்டு எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் உள்ளது.
சுதந்திர போராட்டத்தின் போது மக்களை எழுச்சியடைய செய்த இந்த பாடலின் மகத்துவத்தையும், வரும் இளம் தலைமுறையினருக்கு நாட்டுப்பற்றை வளர்க்க வந்தே மாதரம் பாடலை வாரம் ஒருமுறை திங்கள் அல்லது வெள்ளிக்கிழமை பள்ளிகள், கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களில் ஒலிபரப்பி பாட வேண்டும். மேலும் அரசு அலுவலகம், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மாதம் ஒரு முறை பாட வேண்டும் என உத்தரவிட்டனர். அதேபோல அரசு இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் வந்தேமாதரம் பாடலை மொழிபெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் இந்த பாடலை பட சங்கடப்படுபவர்களை அவர்களின் கருத்தை அறிந்து அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதி, இது தொடர்பாக தலைமை செயலாளர் சம்மந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார்.

இதற்கு, தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ‘வந்தே மாதரம்’ பாடலை முஸ்லிம்களால் பாட முடியாது என, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்துக் கல்வி நிலையங்களிலும் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜ் புரோஹித் என்பவர் வலியுறுத்தினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, மகராஷ்டிராவிலும் இதைக்கட்டாயமாக்க வேண்டும் என தான் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்-க்கு கடிதம் எழுத உள்ளதாகவும், சட்டசபையிலும் இதுகுறித்து தான் குரல் எழுப்ப உள்ளதாகவும் ராஜ் புரோஹித் தெரிவித்தார்.

ஆனால், “வந்தே மாதரம் பாடலை பாடுவது முஸ்லிம் மதத்திற்கு எதிரானது”, என ஏ.ஐ.எம்.ஐ.எம். (அகில இந்திய மஜ்லிஸ்–இ–இத்திஹாதுல் முஸ்லிமீன்) கட்சியை சேர்ந்த வாரிஸ் பதான் மற்றும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அபும் ஆசிம் ஆஸ்மி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“அல்லாவைத் தவிர வேறு யாரையும் வணங்குவதை எங்கள் மதம் அனுமதிக்காது. நாங்கள் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கிறோம். இந்த பாடலை கட்டாயமாக பாட வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் சொல்லவில்லை”, என கூறியுள்ள வாரிஸ் பதான், துப்பாக்கி முனையில் ‘வந்தே மாதரம்’ பாடலை தன்னை பாடச் சொன்னால் கூட தான் பாட மாட்டேன் என தெரிவித்தார்.

ஆனால், இதனை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் திவாகர் ரௌட்டே கூறினார்.

×Close
×Close