Advertisment

நம்பிக்கையின் ஊற்றுக்கண்: ஆங்கிலத்தில் ஒருவரி கூட பேச முடியாமல் அவமானப்பட்ட சுரபி, ஐஏஎஸ் ஆன கதை

ஆங்கிலத்தில் ஒருவரி கூட முழுமையாக சொல்ல தெரியாத சுரபி கௌதம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக சாதனைப் படைத்த எடுத்துக்கொண்ட கடின முயற்சியும், அவமானங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நம்பிக்கையின் ஊற்றுக்கண்: ஆங்கிலத்தில் ஒருவரி கூட பேச முடியாமல் அவமானப்பட்ட சுரபி, ஐஏஎஸ் ஆன கதை

மத்திய பிரதேசத்தில் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, இந்தி மொழியில் பள்ளிப்படிப்பை முடித்து, ஆங்கிலத்தில் ஒருவரி கூட முழுமையாக சொல்ல தெரியாத சுரபி கௌதம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக சாதனைப் படைத்த எடுத்துக்கொண்ட கடின முயற்சியும், எதிர்கொண்ட அவமானங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால், இவர்தான் தன் கிராம பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறி முன்னேற பாதை அமைத்துக் கொடுத்தவர்.

Advertisment

மத்தியபிரதேசத்தில் ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே இருக்கும் குக்கிராமத்தில், ஒரு கூட்டுக்குடும்பத்தில் பெண்ணாய் பிறந்த சுரபியின் பிறப்பு குடும்பத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்டோருக்கும் மகிழ்ச்சியை தரவில்லை. இரண்டு பேருக்குத்தான் மகிழ்ச்சியை தந்தது. ஆம், சுரபியின் பெற்றோருக்கு மட்டுமே.

சிறு வயதில் பாராட்டு என்பதை சற்றும் கேள்விப்படாதவர், அதனை ருசிக்காதவராகத்தான் சுரபி இருந்தார். பள்ளியில் இந்தி மொழிதான் பயிற்று மொழி. 5-ஆம் வகுப்பு படிக்கும்போது, கணிதத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். அப்போது ஆசிரியர் ஒருவர் சுரபியை அழைத்து வெகுவாக பாராட்டியிருக்கிறார். அப்போதுதான், முதன்முறையாக பாராட்டையும், அது தரும் உந்துதலையும் உணர்ந்தார் சுரபி.

அதனால், மற்றவர்களின் பாராட்டை பெற வேண்டும் என்பதற்காகவே நன்றாக படிக்க ஆரம்பித்து, புத்திசாலியாக வளர்ந்தார். ஆனால், இடையில் படுத்த படுக்கையாகும் அளவுக்கு காய்ச்சலால் துவண்டார். பல்வேறு உடல் நல கோளாறுகளுக்கு பின் மீண்டு எழுந்து, 10-ஆம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் சாதனை படைத்தார். ஊடகங்கள் அவரை எழுதித்தீர்த்தன.

அப்போது, பத்திரிக்கையாளர் ஒருவர் “நீ வளர்ந்து என்னவாக போகிறாய்?”, என கேட்டிருக்கிறார். அதற்கு என்ன பதில் சொல்வதென்று சுரபிக்கு தெரியவில்லை. திடீரென வாய் வார்த்தையாக ‘கலெக்டர் ஆகப்போகிறேன்”, என கூறியிருக்கிறார். உண்மையில், கலெக்டரின் முக்கியத்துவம் இந்த சமூகத்தில் என்ன, பின்தங்கிய கிராமங்களில் மாற்றத்தை உருவாக்க அவர்களின் பங்கு என்ன என்பதை சுரபி அறிந்திருக்கவில்லை.

12-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று போபால் நகரத்திற்கு பொறியியல் படிக்க செல்கிறார். தன் கிராமத்தில் முதலாவதாக வெளியூருக்கு சென்று படிக்கும் பெண் சுரபிதான். மற்ற பெண்களுக்கான பாதையை திறந்துவைத்திருக்கிறார் சுரபி.

கல்லூரியில் ஒற்றை வரியை கூட ஆங்கிலத்தில் பேச முடியாமல் அவமானப்படுத்தப்பட்டார். அழுதார். படிப்பை மூட்டைக்கட்டிவிட்டு ஊருக்கு போய்விடலாம் என நினைத்திருக்கிறார். அப்போது, அவருடைய அம்மா, “நினைவில் வைத்துக்கொள் உன் கிராமத்தின் எல்லா பெண்களுக்குமான கதவை நீ அடைத்துவிடுவாய் என”, என்று கூறியிருக்கிறார்.

ஆங்கிலத்தை தானே கற்க முயற்சி எடுத்தார். அதில் வென்றும் காட்டினார். அந்த ஆண்டில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவியாக முன்னேறினார்.

பாபா அணு ஆராய்ச்சி மையம், ரயில்வே துறை என நாட்டின் உயர் பதவிக்கான போட்டித் தேர்வுகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றார். ரயில்வேயில் உயர்பதவியில் அமர்ந்து கைநிறைய சம்பளம் வாங்கினார். ஆனால், அதில் திருப்தி அடையவில்லை. மகிழ்ச்சி கொள்ளவில்லை.

அப்போது, “இவ்வளவு இருந்தும் ஏன் என்னால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை?”, என தன் அம்மாவிடம் கேட்டார் சுரபி. அவருடைய அம்மா, 10-ஆம் வகுப்பில் கலெக்டர் ஆவேன் எனக்கூறியதை நினைவுப்படுத்தியிருக்கிறார். மீண்டும் யு.பி.எஸ்.சி தேர்வுக்காக கடினப்பட்டு உழைத்தார்.

இப்போது, கடந்த 2016-ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி. தேர்வில் இந்தியாவிலேயே 50-வது இடத்தை பெற்று ஐ.ஏ.எஸ். ஆகியிருக்கிறார்.

சுரபியின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் நமக்கு சொல்வது இதைத்தான்.

“கடின உழைப்புக்கு மாற்று ஏதும் இல்லை, வெற்றிக்கு குறுக்கு வழி இல்லை”.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment