Advertisment

விகாஷ் துபே வழக்கு: என்கவுன்டரில் சிக்கிய கார்த்திகேயி 16 வயது மைனர்?

author-image
salan raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
விகாஸ் துபே என்கவுண்டர் விவகாரம்

விகாஸ் துபே என்கவுண்டர் விவகாரம்

உத்தரபிரதேசத்தில் விகாஸ் துபே மற்றும் அவரின் கூட்டாளிகளை தேடும் பணியில் நடத்தப்பட்ட  காவல்துறையினர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பிரபாத் மிஸ்ரா (கார்த்திகேய மிஸ்ரா ) ஒரு மைனர் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Advertisment

கொல்லப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர்  தான் (அதாவது,ஜூன் 29) 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் தேர்ச்சிப்பெற்றார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். கார்த்திகேய மிஸ்ராவின் பிறந்த தேதி மே 27, 2004 என்று 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் இறக்கும் தருவாயில் அவரின் வயது 16 என்று அறியமுடிகிறது.

ஜூலை 3 ம் தேதி கான்பூரின் பிக்ரு கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்திர மிஸ்ரா உள்பட எட்டு காவல்துறை அதிகாரிகள் துபேயின் ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். விகாஸ் துபேயின் வீட்டிற்கு அருகில்  கார்த்திகேய மிஸ்ராவின் குடும்பம் வசித்து வருகிறது.

அவரின் வயது குறித்து தன்னிடம்  எந்த தகவலும் இல்லை. ஜூலை 8 ம் தேதி அவர் கைதி  செய்யப்பட்ட நேரத்தில் பிக்ரு துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கிகளை ஹரியானா காவல்துறையினர் கைப்பற்றினர் என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் மோஹித் அகர்வால் தெரிவித்தார்.

"ஹரியானா மாநில ஃபரிதாபாத்தில் தான் அவர் முதலில் கைது செய்யப்பட்டார். அங்கு, அவரின் வயதை 19 என்று பதிவு செய்யப்பட்டது. விகாஸ் துபே தனது கும்பல் செயல்பாடுகளில் இளம் வயதினரை ஈடுபடுத்தினார்”என்று அகர்வால் கூறினார்.

கடந்த ஜூலை 9 ம் தேதி ஃபரிதாபாத்தில் இருந்து கான்பூருக்கு அழைத்து வரும் வழியில்,சப்-இன்ஸ்பெக்டரின் கைத்துப்பாக்கியைப் பறித்து சுட ஆர்மபித்தார். காவல்துறையினர், தங்களின் தற்காப்புக்காக அவரை நோக்கி சுட்டனர்  என்று உ.பி. போலீசார் தெரிவித்தனர்.

தாயார் கீதா மிஸ்ரா கூறுகையில்,"ஜூலை 3 ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு  அலறியடித்து எழுந்தோம்.என் கணவர் அப்போது கிராமத்தில் இல்லை,உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். என் மாமியார் (ராஜ்காலி, 72), கார்த்திகேய என நாங்கள் மூன்று பேர் மட்டுமே வீட்டில் இருந்தோம். துப்பாக்கிச் சூடு சத்தம் ஓய்ந்த பிறகு, நான் வீட்டை விட்டு வெளியே வந்து  பார்த்தேன். தாங்கள் சுற்றி வளைக்கப்பட போகிறோம்  என்று அஞ்சி ஆண்கள் அனைவரும் தப்பி ஓட ஆரம்பித்தனர். என் மகனை சில நாட்கள் வெளியூர் சென்று தங்குமாறு நான் தான் நிர்பந்தித்தேன்” என்று தெரவித்தார்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தன் மகன் மிஸ்ரா செல்போன் வைத்திருந்ததாக கூறிய    கீதா, “அன்று இரவு காவல்துறையினர் எனது செல்போனை எடுத்துச் சென்றனர். எனது மகனின் தொலைபேசி எண் எனக்கு மனப்பாடமாக தெரியாது. அதனால், அவர் வீட்டை விட்டு சென்ற பின் நான் அவனை தொடர்பு கொள்ளவில்லை” என்றும் தெரிவித்தார்.

தனது மகன் கைது செய்யப்பட்டதை ஜூலை 9 ம் தேதி அறிந்ததாக குறிப்பிட்ட கீதா கூறினார், " கைது செய்யப்பட்ட நேரத்தில் என் மகனுடன் இருந்ததாக கூறப்படும்  இருவரைப் பற்றி நான் கேள்விப்பட்டது இல்லை. “எங்களுக்கு ஃபரிதாபாத்தில் உறவினர்கள் கூட இல்லை. சில மணி நேரங்கள் கழித்து, எனது மகன் போலீஸ் என்கவுண்டரில் சுடப்பட்டதாக  ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர். இது ஒரு கொலை என்றும் தெரிவித்தார்.

ஜூலை 3 ம் தேதி, தனது வீட்டு மொட்டை மாடியில் இருந்து காவல்துறையினர் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிப்பதாக கூறிய கீதா, “ இது உண்மையா என்று கூட எனக்கு தெரியாது. என் வீட்டிற்குள் நான் யாரையும் அனுமதிக்கவில்லை. கொலையாளிகள் எங்கள் வீட்டு மொட்டை மாடியை பயன்படுத்தியதாக நினைத்து காவல்துறையினர் எனது மகனைக் கொன்றிருக்கலாம்  என நினைக்கிறேன். என் கணவரின் உயிரைப் பற்றிய பயம் என்னுள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது" என்று தெரிவித்தார்.

கான்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார்த்திகேய மிஸ்ராவின் தந்தை ராஜேந்திர குமார் மிஸ்ரா(49) பணியாற்றி வருகிறார். காவல்துறையின் அழுத்தம் காரணமாக, துப்பாக்கிச் சூடு நடைபெற்றதில் இருந்து, அவர் வீட்டுக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.

78%-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற மிஸ்ராவின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை காண்பிக்கும் கீதா,"  இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் 12 ஆம் வகுப்பு வாரிய்த் தேர்வில் 61% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தான். “கார்த்திகே தனது பள்ளியிலிருந்து (ஸ்ரீ பஜாரங் மேல்நிலைப்பள்ளி) அந்த மதிப்பெண் சான்றிதழை கூட இன்னும் வாங்கவில்லை… இந்தியா விமானப்படையில் சேர வேண்டும் என்பது அவனின் கனவு. நல்ல மதிப்பெண்களும், எதிர்கால கனவுகளும் கொண்ட  குழந்தை ஒருபோதும் குற்றச் செயல்களில் பங்கேற்காது, ”என்று கீதா கூறினார்.

கார்த்திகேய மிஸ்ரா, ஹிமான்ஷியின் (அவரின் மூத்த சகோதரி) கல்வித் தகுதிகள் உட்பட அனைத்து அரசு ஆவணங்களையும் வீட்டிலிருந்து அகற்றிவிட்டோம். உ.பி காவல்துறை இந்த ஆவணங்களை அழிக்க முயற்சி மேற்கொள்ளல்லாம் என்ற பயம் தங்களிடம் இருப்பதாக      கீதா மிஸ்ரா தெரிவித்தார்.

பிக்ரு துப்பாக்கிச் சூடு வழக்கில், விகாஸ் துபே, கார்த்திகேய மிஸ்ரா உட்பட 6 பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பதினொருவர் தலைமறைவாக உள்ளனர்.

Uttar Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment