’லவ் ஜிகாத்’ பெயரில் முஸ்லிம் நபர் அடித்து, தீயிட்டுக் கொடூரமாக கொலை: வைரலாகும் வீடியோ

ராஜஸ்தானில் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் 47 வயது முஸ்லிம் நபரை அடித்து, தீயிட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் 47 வயது முஸ்லிம் நபரை அடித்து, தீயிட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த கொலை சம்பவத்தின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அஃப்ரசூல் (வயது 47) என்பவர்தான் கொலையுண்டவர். அந்த சம்பவத்தின் வீடியோவில், ஒரு நபர் கோடாரியால் அஃப்ரசூலை சரமாரியாக தாக்குகிறார். அதன்பின் பெட்ரோலை ஊற்றி தீயிட்டு கொளுத்தி கொலை செய்கிறார். மிகவும் கொடூரமான இச்சம்பவத்தை அந்நபர் தன் உறவினரான 14 வயது சிறுவனை வைத்தே வீடியோவாக எடுக்கிறார்.

அந்த வீடியோவில், “ஜிஹாதிகளே எங்கள் நாட்டிலிருந்து வெளியேறுங்கள். லவ் ஜிகாத்திலிருந்து ஒரு பெண்ணை காப்பாற்றவே இவனை கொலை செய்தேன்”, என ஆக்ரோஷமாக கூறுகிறார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் முக்கிய குற்றவாளியான ஷம்புலால் ரேகர் மற்றும் 14 வயது சிறுவனையும் கைது செய்தனர்.

இவ்வளவு கொடுமையான முறையில் தன் கணவரை கொலை செய்தவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், முஸ்லிம் என்பதாலேயே அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அஃப்ரசூலின் மனைவி தெரிவித்துள்ளார்.

கொலையுண்ட அஃப்ரசூலுக்கு 3 பெண்கள் உள்ளனர். ஏற்கனவே இரண்டு மகள்களுக்கு திருமணமான நிலையில், கடைசி மகளுக்கு திருமணம் செய்துவைக்கும் முடிவில் இருந்தார் அஃப்ரசூல். கடந்த 12 ஆண்டுகளாக அவர் ராஜஸ்தானில் வேலை செய்துவருகிறார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மேற்கு வங்கத்தில் உள்ள தனது குடும்பத்தினரை சந்தித்து வருவார்.

அவரது கொலையில் சதி இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

×Close
×Close