அக்கா-தம்பி உறவு என்பது எப்போதும், சண்டைகளுடனேயே இருக்காது. சின்ன சின்ன விஷயங்களில் அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொள்வார்கள். தம்பி என்றால், எப்போதுமே தன் மூத்தவர்களுக்காக எதையுமே செய்யமாட்டான், மூத்தவர்கள்தான் இளையவர்களுக்காக உழைத்து எல்லாவற்றையும் வாங்கித் தருவார்கள் என்றுதானே நினைத்திருப்பீர்கள். ஆனால், ஜெய்ப்பூரை சேர்ந்த 13 வயது சிறுவன் யாஷ், தன் அக்காவுக்காக செய்த காரியத்தை படித்தீர்கள் என்றால், அப்படி நினைக்க மாட்டீர்கள்.
ஜெய்ப்பூரை சேர்ந்த சிறுவன் யாஷ், தன் அக்கா ரூபால்-ஐ அழைத்துக்கொண்டு, கடந்த தீபாவளி பண்டிகையன்று மாலையில் அருகிலுள்ள ஹோண்டா ஷோரூமுக்கு சென்றிருக்கிறான். ஆனால், அப்போது ஷோரூமை மூட வேண்டிய நேரமாகிவிட்டது. அப்போது, சிறுவன் ரூபால், தன் அக்காவுக்கு டூ வீலர் (ஹோண்டா ஆக்டிவா) வாங்கி பரிசளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறான்.
இதைக்கேட்டு நெகிழ்ந்த ஊழியர்கள், சிறுவனையும், அவனது சகோதரி ரூபாலையும் உள்ளே அழைத்துச் சென்று அவர்களுக்கு விரும்பிய டூ வீலரை வழங்கியிருக்கின்றனர். 13 வயது சிறுவன் தன் அக்காவுக்கு டூ வீலர் வாங்கித் தருவதே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால், அந்த பணத்தை அச்சிறுவன் எப்படி கொடுத்தான் என்பதை கேள்விப்பட்டால், அவன் தன் அக்கா மீது வைத்திருக்கும் பாசத்தை எண்ணி வியப்பீர்கள்.
தனக்கு வீட்டில் பெற்றோர் கொடுக்கும் ரூ.10 நாணயங்களை சிறுக சிறுக சேமித்து ரூ.62,000 வரை சேமித்து தன் அக்காவுக்கு அதனை வாங்கி பரிசளித்திருக்கிறான் சிறுவன் யாஷ்.
இச்சிறுவனின் அன்பை கண்டு நெகிழ்ந்து போயுள்ளனர் ஹோண்டா ஊழியர்கள். அதுமட்டுமா, அவன் கொடுத்த பணத்தை எண்ணி முடிக்க அவர்களுக்கு 2 மணிநேரம் செலவானது.