Advertisment

'இறைச்சி சாப்பிட்டு கோயிலுக்கு சென்ற சித்தராமையா?: பாஜக விமர்சனம், காங்கிரஸ் பதிலடி

கோயிலுக்கு செல்லும் முன் இறைச்சி சாப்பிடக் கூடாது என்று கடவுள் யாரிடமாவது கூறியிருக்கிறாரா? - சித்தராமையா

author-image
WebDesk
New Update
'இறைச்சி சாப்பிட்டு கோயிலுக்கு சென்ற சித்தராமையா?: பாஜக விமர்சனம், காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, கோயிலுக்கு இறைச்சி சாப்பிட்டு சென்றதாக கூறப்படும் விவகாரம் சமூகவலைதளங்களில் பாஜக, காங்கிரஸ் இடையே கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மற்றம் காங்கிரஸ் மூத்த தலைவராக இருப்பவர் சித்தராமையா.

Advertisment

இவர் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி மழையால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தை பார்வையிட சென்றார். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு, மாலை கோயிலுக்கு சென்றுள்ளார். கோயிலுக்கு செல்லும் முன் சித்தராமையா இறைச்சி சாப்பிட்டதாக கூறி குற்றச்சாட்டு எழுந்தது. இதை பாஜக கையில் எடுத்து விமர்சனம் செய்து வருகிறது.

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோயிலுக்கு செல்லும் முன்பாக அசைவ உணவு உட்கொண்டீர்களா? என செய்தியாளர் ஒருவர் சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சித்தராமையா, "அதை கேட்க நீங்கள் யார்? என காட்டமாக பதிலளித்தார்.

தொடர்ந்து பதிலளித்த அவர், "நான் அசைவம் சாப்பிடுபவன். அதனால் இறைச்சி சாப்பிடுகிறேன். நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், நீங்கள் சாப்பிட மாட்டீர்கள். உங்கள் பழக்கம் உங்களுடையது, என்னுடைய பழக்கம் என்னுடையது. கோயிலுக்கு செல்லும் முன் இறைச்சி சாப்பிடக் கூடாது என்று கடவுள் யாரிடமாவது கூறியிருக்கிறாரா?" என்றார்.

கர்நாடகா பாஜக மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் உள்பட பாஜக தலைவர்கள் கடந்த திங்களன்று இந்த விவகாரம் குறித்து விமர்சித்தனர். "முன்னாள் காங்கிரஸ் முதல்வர் அசைவ உணவு சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு சென்றுள்ளார். அவர் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. மதியம் இறைச்சி சாப்பிட்டு, மாலை கோயிலுக்கு செல்வது என்ன தவறு என்று கேட்டதன் மூலம், சித்தராமையா மீண்டும் இந்துக்களின் நம்பிக்கைகளை அலட்சியப்படுத்தியுள்ளார். கோயில்கள் மீது இந்துக்கள் கொண்டுள்ள மத உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்று கட்டீல் கூறினார்.

சித்தராமையா இவ்வாறான பிரச்சனைகளை கடந்த ஆண்டுகளிலும் எதிர்கொண்டுள்ளார். பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, சித்தராமையா, கடந்த 2017ஆம் ஆண்டு தசரா பண்டிகையின் போது இறைச்சி சாப்பிட்டுவிட்டு சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதாக குற்றஞ்சாட்டினார். பாஜக எம்எல்ஏ பசங்கவுடா பாட்டீல் யத்னால் கூறுகையில், "தேர்தல் வருவதால் கோயிலுக்கு செல்வதுபோல நாடகம் நடத்துகிறார் சித்தராமையா. தைரியம் இருந்தால் பன்றி இறைச்சி சாப்பிட்டுவிட்டு பள்ளிவாசலுக்குச் செல்ல சொல்லுங்கள்" எனக் கூறினார்.

சித்தராமையா இந்து மதத்தை பின்பற்றுபவர் அல்ல, இந்து மதத்திற்கு எதிரானவர், தேர்தல் நேரங்களில் மட்டும் கோயிலுக்கு செல்பவர் என்பதை பாஜக முன்னிறுத்த முயற்சிக்கிறது. பாஜக சமீப காலங்களில் அதன் செயல்பாடுகளால் பின் தங்கி மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தை வாய்ப்பாக பயன்படுத்த முயற்சிக்கிறது என்றும் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் பாஜக, காங்கிரஸ் இடையே கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பழக்கத்தை ஒருவர் மீது திணிப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செவ்வாயன்று, சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளர்களான எச்.எம். ரேவண்ணா (முன்னாள் எம்.எல்.சி.) மற்றும் வி.எஸ். உக்ரப்பா (முன்னாள் எம்.பி.) ஆகியோர்," பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு தைரியம் இருந்தால் அசைவ உணவு சாப்பிடுபவர்களின் வாக்குகள் தங்களுக்கு வேண்டாம் என அறிவிக்க வேண்டும். நாட்டில் 80 சதவீதம் பேர் இறைச்சி உண்பவர்கள் உள்ளனர்" என்றனர்.

"பாஜக அரசின் தோல்விகளை காங்கிரஸ் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்புகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவது என பாஜக அரசின் தோல்விகளை காங்கிரஸ் கேள்ளி கேட்கிறது. இவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப சித்தராமையா குறித்து பாஜக பேசி வருகிறது" என முன்னாள் முதல்வருக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இறுதியில் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சித்தராமையா விளக்கமளித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்குச் செல்வதற்கு முன்பு தான் எந்த அசைவ உணவையும் உட்கொள்ளவில்லை எனக் கூறினார். ஆனால் இரண்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka Karnataka Election Congress Vs Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment