Advertisment

மத்திய அமைச்சருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அதிகாரி இடம் மாற்றம்... ஐ.ஜி. அசோக் யாதவ் தலைமையில் புதிய பாதுகாப்புக் குழு நியமனம்

ஐ.ஜி. அசோக் யாதவ் தலைமையில் புதிய பாதுகாப்பு படையினர் நிலக்கல் பகுதியில் பாதுகாப்பிற்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPS Yathish Chandra, ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா

IPS Yathish Chandra transferred

ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா : சபரிமலை என்றாலே இப்போது நம்முடைய ஞாபகத்திற்கு முதலில் வரும் மனிதன் ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா தான். யாராப்பா இவர்? அமைச்சர் என்றாலும் விதிமுறைகள் என்றால் விதிமுறைகள் தான்.

Advertisment

அதை மீறுதல் கூடாது என்று சொல்லும் அளவிற்கு திறன் மிக்க காவலர் யார் என்று தான் அனைவரும் யோசித்துக் கொண்டிருப்போம். நிச்சயமாக கூகுள் போட்டு அவர் யார், எந்த ஊர், எப்படி ஐபிஎஸ் அதிகாரியானார் என்று சல்லடை போட்டு சலித்தெடுத்து இருப்போம் என்பது தான் உண்மை.

உச்ச நீதிமன்றம் சபரிமலையில் பெண்கள் வருகைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஒவ்வொரு முறையும் சபரிமலை நடை திறக்கும் போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சபரிமலை சீசனை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பம்பையில் இருந்து சபரிமலைக்கு தனியார் வாகனங்கள் மறுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பாஜக எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய சென்றபோது, அவர் தடுத்து நிறுத்தப்பட்டு கேரளா அரசு பேருந்தில் மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரை தடுத்து நிறுத்தி, அவரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு நிலைமையை புரிய வைத்தவர் தான் ஐ.பி.எஸ். யதீஷ் சந்திரா. மேலும் படிக்க : கேரள அரசு பேருந்தில் பயணித்த பொன்னார். 

நிலக்கல் பகுதியில் நடந்தது என்ன ? பொன்னார் - யதீஷ் சந்திரா உரையாடல்

திருச்சூர் மாவட்டத்தில் எஸ்.பியாக பணியாற்றும் யதீஷ் சந்திரா சபரிமலையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வந்தார். அப்போது பொன். ராதாகிருஷ்ணன், தனியார் வாகனங்களை சபரிமலைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது யதீஷ் சந்திரா “ஒவ்வொரு வாகனத்தையும் உள்ளே அனுப்பினால், அங்கு ட்ராஃபிக் ஏற்படும். நிலைமை மோசமடையும். அதற்கான பொறுப்புகளை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? “ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பொன். ராதாகிருஷ்ணன் “என்னால் அதற்கான பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள இயலாது” என்று கூறிவிட்டார்.

அது தான் இப்போது பிரச்சனையே... யாரும் இங்கு பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள விரும்புவது கிடையாது.. என்று யதீஷ் கூறவும் அங்கு மீண்டும் குழப்பங்கள் ஏற்பட்டது.

அப்போது நான் நிலைமையை விளக்கிக் கூறுகிறேன். எல்லா வாகனங்களும் அங்கு சென்றால் நிலைமை மோசமடையும். அங்கு சென்று திரும்ப பக்தர்கள் கஷ்டப்படுவார்கள். அதனால் தான் இந்த ஏற்பாடு என்று கூறினார் யதீஷ்.

எந்த வாகனங்களையும் அனுமதிக்கவில்லை. ஆனால் கேரள மாநில பேருந்துகளை மட்டும் அனுமதிப்பு ஏன் என்று கேள்வி எழுப்பினார் பொன்னார். மேலும் ட்ராபிக்கை கிளியர் செய்ய உங்களிடம் ஃபோர்ஸ் இல்லையா என்றும் கேட்டார் பொன்னார்.

எங்களிடம் போதுமான போர்ஸ் இருக்கிறது. ஆனால் ஆகஸ்ட் மாதம் பெய்த மழையின் காரணமாக அங்கு சாலைகள் ஏதும் சரியாக இல்லை. அதனால் தான் தனியார் வாகனங்களை அனுமதிக்கவில்லை என்று விளக்கம் கொடுத்தார் யதீஷ்.

அப்போது என்னுடைய வாகனத்திற்கு அனுமதி இல்லையா என்று பொன்னார் கேள்வி எழுப்பிய போது, உங்களின் வாகனத்திற்கு எப்படி அனுமதி மறுப்பது, நீங்கள் ஒரு எம்.பி.. விஐபிக்கு என்று அங்கு பார்க்கிங் லாட் இருக்கிறது என்று அவர் கூறினார்.

அனைவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று பொன்னார் கேட்ட போது, நீங்கள் அனுமதி அளித்தால் நான் அனைத்து வாகனங்களையும் உள்ளே அனுப்புவேன் என்று யதீஷ் கூற, எனக்கு அந்த அதிகாரம் இல்லை என்று பொன்னார் மறுத்துவிட்டார்.

யாரிந்த ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா ?

கர்நாடகா மாநிலத்தின் தாவனகரே மாவட்டத்தில் பிறந்த யதீஷ் பாபுஜி எஞ்சினியரிங் கல்லூரியில் பட்டப்படிப்பினை முடித்தார். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர் 2010ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அகில இந்திய அளவில் 211வது இடம் பிடித்தவர் யதீஷ்.

2015ம் ஆண்டு முதல் கேரள மாநிலத்தில் பணி புரிந்து வருகிறார். 2015ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் தடியடி நடத்தியவர் யதீஷ். அன்றைய முதல்வர் யதீஷை பைத்தியக்காரர் என்று குறிப்பிட்டார். பினராயி விஜயன் அவரை வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த சமயத்தில் பாஜவும் சங் பரிவாரும் அவரை கொண்டாடினார்கள்.  2016ல் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு வந்த போது அவருக்கு வேறு இலாகா கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எர்ணாக்குளம் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

ஜூன் மாதம் நடைபெற்ற எல்ஜிபி குழாய் பதிப்பிற்கு எதிரான போராட்டத்திலும் மக்கள் மீது தடியடி நடத்தியவர் யதீஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போராட்டத்தில் 7 வயது சிறுவன் ஆலனும் கலந்து கொண்டார்.

அந்த சிறுவனை தாக்கியதாக யதீஷ் மீது இன்று வரை புகார் இருக்கிறது. இந்நிலையில்தான் அவர் கடந்த ஆண்டு பத்தனம்திட்டா மாவட்டத்தின் எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். இவருடைய ரோல் மாடல் ரூபா திவாகர் எனும் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். சபரிமலை விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பிய போது, எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை தான் நாங்கள் மேற்கொண்டோம் என்று அவர் கூறியிருக்கிறார்.

ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா இடம் மாற்றம்

சபரிமலையில் நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த யதீஷ் சந்திரா இடம் மாற்றம் செய்யப்பட்டார்.  ஐ.ஜி. அசோக் யாதவ் தலைமையில் புதிய பாதுகாப்பு படையினர் நிலக்கல் பகுதியில் பாதுகாப்பிற்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க : சபரிமலையில்  போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை

Sabarimala Kerala Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment