காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் திருமணம் நடக்க இருப்பதாக வெளியான தகவல்கள் வதந்தி என்று உத்தரப்பிரதேச காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. அதிதி சிங் மறுத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் சோனியாகாந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலியில் சதார் என்ற சட்டமன்ற தொகுதி உள்ளது. இங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக 29 வயதான அதிதி சிங் இருந்து வருகிறார். இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அதிதியின் தந்தை அகிலேஷ்சிங், இதே தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிதி சிங்கிற்கு சீட் கொடுக்கப்பட்டது. அதில் சுமார் 90 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் அதிதி மேலாண்மை பட்டம் படித்துள்ளார்.

இந்த நிலையில், அதிதி சிங்கை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திருமணம் செய்ய இருப்பதாக சமூக தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. அதில் ராகுல்காந்தியும், அதிதி சிங்கும் அருகருகே நின்று கொண்டிருக்கும் படமும் இடம் பெற்றுள்ளது. மேலும் அதிதி சிங்கின் குடும்பத்தினர் ராகுல்காந்தியுடன் இருக்கும் படமும் அதில் இடம் பெற்றுள்ளது.

இந்த செய்திக்கு ராகுல்காந்தி கடைசியாக தனது ஜோடியை கண்டு பிடித்துள்ளார் என்று தலைப்பிட்டு உள்ளனர். மேலும், சோனியாகாந்தி, அதிதி குடும்பத்தினருடன் திருமணம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த தகவலை அதிதி சிங் எம்.எல்.ஏ. மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. இந்த தகவல் வெளியானதும் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். என்னை மிகவும் கவலைக்கொள்ள செய்துவிட்டது. ராகுல்காந்தி எனது மூத்த சகோதரர் போன்றவர். அவருக்கு நான் சகோதரர் என்ற முறையில் ராக்கி கயிறு கட்டி இருக்கிறேன். இந்த தகவல் முற்றிலும் தவறானது.

எனது மற்றும் ராகுல் காந்தியின் கவுரவத்தை சீர்குலைக்கும் வகையில் தீய எண்ணத்தோடு இதை யாரோ வெளியிட்டுள்ளனர். கர்நாடகாவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இதுபோல தவறான தகவல்களை பரப்பி காங்கிரஸ் தலைவர்களையும், கட்சி பணியாற்றும் தொண்டர்களையும் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ராகுல்காந்தி குடும்பத்தினரை எங்களுக்கு பல ஆண்டுகளாக தெரியும். நான் ராகுல்காந்தியுடன் நிற்கும் படம் சமீபத்தில் சோனியா காந்தி ரேபரேலி வந்தபோது எடுக்கப்பட்டதாகும். இந்த வதந்தியை பரப்பியவர்கள் மனநிலை பாதித்தவர்களாக இருப்பார்கள்.” என்று காட்டமாக அதிதி பதில் அளித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close