பனீருக்காக இளைஞர் வாயில் ஆசிட்டை ஊற்றிய கொடூரம்

டெல்லியில் தங்களுடைய கடையில் ’பனீர்’ இல்லை என கூறிய இளைஞரை சிலர் கட்டாயப்படுத்தி, அவரது வாயில் ஆசிட்டை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டெல்லியில் தங்களுடைய கடையில் ’பனீர்’ இல்லை என கூறிய இளைஞரை சிலர் கட்டாயப்படுத்தி, அவரது வாயில் ஆசிட்டை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட இளைஞர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக, காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது: யோகேஷ் சாகர் என்ற 18 வயது இளைஞர், தனது தந்தையுடன் சேர்ந்து சங்கம் விஹார் பகுதியில் பால் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 24-ஆம் தேதி அக்கம்பக்கத்தை சேர்ந்த கோலு என்ற 24 வயது இளைஞர் ஒருவர், அந்தக் கடைக்கு வந்து ’பனீர்’ வேண்டுமென கேட்டார். அதற்கு யோகேஷ் கடையில் ’பனீர்’ இல்லை என தெரிவித்தார்.

இதனால், அந்த இளைஞர் ஆத்திரமடைந்து கத்தியால் யோகேஷை தாக்க முயன்றதாக யோகேஷின் தந்தை தரப்பில் கூறப்படுகிறது. மறுநாள் இரவு 11 மணியளவில், அந்த இளைஞர் சில நபர்களுடன் யோகேஷின் கடைக்கு வந்து மீண்டும் அவரை தாக்க முயன்றனர். அப்போது ஒருவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மற்றவர்கள் யோகேஷை பிடித்துக்கொள்ள கோலு, மற்றவர்களுடன் சேர்ந்து வலுக்கட்டாயமாக யோகேஷின் வாயில் ஆசிட்டை ஊற்றினார்.

இதையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது தங்கை வெளியே வந்து கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து யோகேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன்பின் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் யோகேஷின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

×Close
×Close