லண்டன் குண்டு வெடிப்பு: 18 வயது இளைஞர் கைது

லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக 18 வயது இளைஞர் ஒருவரை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்துள்ளனர்.

லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக 18 வயது இளைஞர் ஒருவரை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்துள்ளனர்.

தென் மேற்கு லண்டனில் பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தில், அந்நாட்டு நேரப்படி நேற்று காலை 8.20 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி சுமார் 29 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் தெரசா மே உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு தீவிரவாதிகள் ஐஇடி குண்டை பயன்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள், ஐஇடி வெடிகுண்டு பாதிதான் வெடித்துள்ளது, முழுதும் வெடித்திருந்தால் சேதம் மோசமாக இருந்திருக்கும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

குண்டு வெடிப்பு குறித்து பிரிட்டிஷ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள், ஐஇடி வெடிகுண்டின் மீதமுள்ள பகுதிகளை போலீஸார் தீவிர ஆய்வுக்குட்படுத்தி வருகின்றனர். அதேபோல், ரயில் உள்ளேயிருந்த கேமிராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், டோவர் துறைமுகப் பகுதியில் 18 வயது இளைஞர் ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். “எங்கள் விசாரணையில் சந்தேகத்திற்கு ஆளான முக்கியமான கைதை நாங்கள் மேற்கொண்டுளோம்” என இந்த கைது குறித்து தெரிவித்த, பயங்கரவாத அச்சுறுத்தல் பிரிவு மூத்த தேசிய ஒருங்கிணைப்பாளர் நீல் பாசு, மற்றுமொருவர் தலைமறைவாக இருப்பதாக தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close