பெரும்பான்மையை இழந்த ஆளுங்கட்சி; பதவியை விட மாட்டேன் - தெரசா மே

தற்போது வெளிவந்துக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள், பிரதமரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 44 ஆண்டுகளாக இருந்துவந்த பிரிட்டன், லிஸ்பன் உடன்படிக்கை (EU’s Lisbon Treaty ) 50-வது விதியின் சட்டப்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, வலிமை வாய்ந்த நாடாக நிலையான தலைமையுடன் தனித்து இயங்குவதற்காக பிரிட்டன் பிரதமர் தெரசா மே பொதுத் தேர்தலை அறிவித்தார்.

இங்கிலாந்து பாராளுமன்றத்தின் ஆட்சிக் காலம் 2020-ஆம் ஆண்டுதான் முடிகிறது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் தெரசா மே-யின் அதிரடி அறிவிப்பால் இந்த பொதுத்தேர்தல் நடைபெற்றது. தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் தொழிற்கட்சிகள் போட்டியிட்டன.

அதன்படி, இங்கிலாந்தின் 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நேற்று நடந்தது. வாக்குப் பதிவு முடிந்த உடனேயே, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தொடக்கத்தில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி பெரும் சரிவை சந்தித்தது. அக்கட்சி 242 தொகுதிகளிலும், தொழிற்கட்சி 256 இடங்களிலும் முன்னிலை வகித்தன. ஆனால், பெரும்பான்மைக்கு 326 இடங்கள் வேண்டும். இதனிடையே, தெரசா தேர்தலை அறிவித்தது தவறான முடிவு என்றும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில், முன்னிலை பெற்றும் தெரசா மே பெரும்பான்மையை இழக்கிறார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புக்கள் தெரிவித்தன.

அதன்படி, பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை எண்ணிக்கைக்குச் சற்றுக் குறைவான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. மொத்தம் உள்ள 648 தொகுதிகளுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 317 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

தொழிலாளர் கட்சி 261இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி வெறும் 35 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து பேட்டியளித்த கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரும் இப்போதைய பிரதமருமான தெரசா மே, தான் பதவி விலகப் போவதில்லை என்றும் தொடர்ந்து ஆட்சியமைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close