எங்கள் பூமியில் வேறு நாட்டின் போர் நடவடிக்கைக்கு இடமில்லை! - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

எங்களது துறைமுகங்கள், எங்களது பூமி வேறு நாடுகளின் போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த இடம் தராது

இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகம், போர் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாது எனவும், அதனை சீனாவிற்கு தெளிவுப்படுத்தி உள்ளதாகவும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றிய போது, ”மகிந்த ராஜபக்ஷே அரசாங்கத்தினால் பல மில்லியன் டாலர் கடன்பட்டு, கப்பல்கள் வராத துறைமுகமொன்று அமைக்கப்பட்டது. எனினும், கடனில் இருந்து மீண்டு, கப்பல்கள் வரும் துறைமுகமாக ஹம்பன்தோட்டா துறைமுகத்தை மாற்ற எங்களால் முடிந்தது. இத்துறைமுகம் சீனாவிற்கு விற்கப்படவில்லை. இந்தத் துறைமுகம் சீனாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்தத் துறைமுகம் போர் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாது. எங்களது துறைமுகங்கள், எங்களது பூமி வேறு நாடுகளின் போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த இடம் தராது.

இதுகுறித்து சீனா மெர்சண்ட்ஸ் போர்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சீன அதிபருடன் நடந்த பேச்சுவார்த்தையின்போதும், எங்களது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தோம். அதனை சீன அதிபர் ஏற்றுக் கொண்டார்.

கப்பல் வராத துறைமுகத்தைப் போன்றே விமானம் வராத விமான நிலையம் ஒன்று மத்தலயில் இருக்கிறது. இதுவும் மகிந்த ராஜபக்ஷே அரசாங்கத்தின் கடன் தான். மத்தல விமான நிலையம் குறித்து, சீனா நிறுவனம் ஒன்றுடன் நாம் பேச்சு நடத்தினோம். எனினும், சாதகமான பதில் கிடைக்கவில்லை. எனவே, இந்தியாவுடன் பேச்சு நடத்தி வருகிறோம். மத்தல விமான நிலையக் கடனில் இருந்தும் விடுபட்டு, விமானங்கள் வரும் விமான நிலையமாக அதனை மாற்றுவோம் என நம்புகிறோம். சீனா நமக்கு அழுத்தம் கொடுத்திருந்தால், துறைமுகத்தையும், விமான நிலையத்தையும் வழங்கியிருக்கலாம். எனினும், சீனாவுடனும், இந்தியாவுடனும் இறையாண்மையுள்ள நாடாகவே நாம் கொடுக்கல், வாங்கல் செய்கிறோம்” என்று ரணில் தெரிவித்தார்.

×Close
×Close