”பெண்களைவிட ஆண்களுக்கு அதிக சம்பளம் வழங்கினால் தண்டனை”: சட்டம் இயற்றிய ஐஸ்லாந்து

உலகிலேயே முதன்முறையாக ஐஸ்லாந்து நாடு, பெண்களைவிட ஆண்களுக்கு அதிக ஊதியம் வழங்குவது தண்டனைக்குரிய குற்றம் என சட்டம் இயற்றியுள்ளது.

பெண்கள் எல்லா இடங்களிலும் பாலின பாகுபாட்டை சந்திக்கின்றனர் என்பது பொதுப்படை வாதமாக இருந்தாலும் அதுதான் உண்மை. நன்றாக படித்து வேலைக்கு சென்றாலும், ஆண்களைவிட பெண்களுக்குன் குறைவாகவே உள்ளது. அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகளிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.

இந்நிலையில், உலகிலேயே முதன்முறையாக ஐஸ்லாந்து நாடு, பெண்களைவிட ஆண்களுக்கு அதிக ஊதியம் வழங்குவது தண்டனைக்குரிய குற்றம் என சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டம் ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு ஐஸ்லாந்தில் இந்த ஊதிய வித்தியாசத்தை எதிர்த்து பெண்கள் மாபெரும் பேரணியை நிகழ்த்தினர்.

இதையடுத்து, கடந்த மார்ச் 8-ஆம் தேதி, சர்வதேச பெண்கள் தினத்தன்று, அலுவலகங்களில் பெண்களைவிட ஆண்களுக்கு அதிக சம்பளம் தருவது தண்டனைக்குரிய குற்றமாகும் என ஐஸ்லாந்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் ஜனவரி 1, 2018 முதல் நடைமுறைக்கு வந்தது.

இச்சட்டத்தின்படி, 25 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் பெண்களுக்கும், ஆண்களுக்கு சம ஊதியத்தை வழங்குகிறோம் என்ற உறுதிச்சான்றிதழை அரசிடமிருந்து பெற வேண்டும். இல்லையெனில், அந்நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த சட்டத்தை பலரும் வரவேற்றுள்ளனர்.

உலக பொருளாதார அமைப்பின் தரவுகள்படி, கடந்த 9 ஆண்டுகளாக ஆண்-பெண் பாலின சமத்துவத்தில் ஐஸ்லாந்து சிறந்து விளங்குகிறது. அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் 50 சதவீத உறுப்பினர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2020-ஆம் ஆண்டுக்குள் ஆண், பெண்ணுக்கிடையே நிலவும் ஊதிய வேறுபாட்டை களைய ஐஸ்லாந்து அரசு உறுதிகொண்டுள்ளது.

×Close
×Close