கென்யாவில் மனித கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிப்பு

மனிதக் கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ள கென்ய நாட்டு நிறுவனம், இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்துள்ளது.

தேவைகள் இருக்கும் வரை கழிவுகள் என்பது இருக்காது என்ற தாரக மந்திரத்துடன் செயல்படும் இந்த கென்ய நாட்டு நிறுவனம் மனிதக் கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

கென்ய நாட்டின் நாகுருவில் செயல்படும் நீர் மற்றும் சுத்திகரிப்பு சேவை நிறுவனம் ஒன்று மனிதக் கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. மனித கழிவுகளை சேகரித்து, முதலில் உலர வைக்கின்றனர். பின்னர் சூளையில் வைத்து சுடுகின்றனர். தொடர்ந்து, மரத்தூள் மூலம் 300 டிகிரி செல்சியல் வெப்பநிலையில், அதனை கார்பனாக மாற்றுகின்றனர். மேலும், பந்து போல் அதனை மாற்றி கிலோ கணக்கில் விற்பனை செய்கின்றனர்.

தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகள், துர்நாற்றமும் போன்றவைகள் இந்த தயாரிப்பு பணிகளின் போது நீக்கப்படுகிறது. நாகுருவில் வசிக்கும் நான்கில் ஒரு பங்கு குடும்பத்தினர் மட்டும் தான் கழிவு நீர் செல்லும் சாக்கடை அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளனர். அங்கு, கழிவுகள் பெரும்பாலும் வடிகால்கள் மற்றும் ஆறுகளில் கொட்டப்படுகிறது. அல்லது, வருவாய் குறைவான பகுதிகளில் புதைக்கப்படுகிறது.

மனிதக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் உருண்டைகளுக்கு முதலில் மக்களிடம் மவுசு இல்லாமல் இருந்தது. அதனை மக்கள் விரும்பவில்லை. நாளடைவில் மக்களிடம் இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என இந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல்,”இந்த உருண்டைகளில் துர் நாற்றம் வீசுவதில்லை. இதனைக் கொண்டு நீங்கள் விரைவாக சமைக்கலாம். இதன் மூலம் வெளிப்படும் தீ நன்றாக எரியும்” என இந்த உருண்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மனித உருண்டைகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் இத்திட்டதிற்கு எஸ்என்வி நெதர்லாந்து வளர்ச்சி அமைப்பு, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவைகள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. எரிபொருள் மட்டும் அல்லாமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

×Close
×Close