India sending humanitarian assistance to drought-hit Madagascar : ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் கடும் வறட்சி மற்றும் பஞ்சம் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் அந்நாட்டிற்கு 1,000 மெட்ரிக் டன் அரிசியையும், 1 லட்சம் ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மருந்துகளையும் அனுப்பி வைத்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் திங்கள் கிழமை அன்று அறிவித்தது.
இந்திய கப்பற்படை கப்பலான ஜலஷ்வா மூலம் இந்த மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்கள் அனுப்பப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மார்ச் 3ம் தேதி இந்தியாவில் இருந்து கிளம்பும் இந்த கப்பல் மடகாஸ்கரின் எஹோலா துறைமுகத்தை மார்ச் 21-24க்கு இடைப்பட்ட நேரத்தில் சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.
மடகாஸ்கரின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெஹிண்ட்ர்ஜனரிவேலோ ஜெக்கப்போவிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், அது தொடர்பாக தகவல்களை அதிகாரப்பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இதற்கு முன்பும் இது போன்ற மனிதநேய உதவிகளை இந்தியா மடகாஸ்கருக்கு செய்துள்ளது. 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் டையான் புயலால் பாதிக்கப்பட்ட அந்நாட்டிற்கு இந்தியா உதவியது. அன்றைய சூழலில் மடகாஸ்கருக்கு உதவிய முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil