அமெரிக்காவில் இந்திய மாணவர் கொடூரமாக சுட்டுக் கொலை! வீடியோ வெளியீடு!

அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர் ஹோட்டல் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத் கோபு (26). இவர் அமெரிக்காவின் மிசவ்ரி-கான்சாஸ் பல்கலைக்கழகத்தில் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு சரத் கான்சாஸில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற போது, மர்ம நபர் ஒருவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சரத்தின் உறவினர் சந்தீப் கூறுகையில், “மிசவ்ரி – கான்சாஸ் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக சரத்திற்கு ஃபுல் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. இதனால், இந்த வருடம் ஜனவரி மாதம் சரத் அமெரிக்கா சென்றார். நேற்று இரவு, அமெரிக்க நேரப்படி இரவு எட்டு மணிக்கு, அடையாளம் தெரியாத நபரால், சரத் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. இச்செய்தி எங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” என்றார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கான்சாஸ் போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த சரத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், சரத்திடம் கொள்ளை அடிக்கப்பட்டு அவரை சுட்டுக் கொன்று இருப்பது தெரியவந்துள்ளது. ஐந்து குண்டுகள் சரத்தின் உடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சரத்தை சுட்டுக் கொன்ற நபர் குறித்த வீடியோ ஒன்றை , கான்சாஸ் போலீசார் வெளியிட்டுள்ளார். வீடியோவில் இருக்கும் அந்த நபரை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அளிக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

சரத்தின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய தூதரகம் உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்னர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close