Advertisment

இலங்கைப் போரில் கீனி மீனி நிறுவனத்தின் பங்கு என்ன? ஸ்காட்லாந்து யார்டு விசாரணை

பரிந்துரையை அடுத்து, ஸ்கோப்பிங் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு, தற்போது ஒரு முழுமையான விசாரணையாக உயர்த்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
இலங்கைப் போரில் கீனி மீனி நிறுவனத்தின் பங்கு என்ன? ஸ்காட்லாந்து யார்டு விசாரணை

1980 கால கட்டங்களில் இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையேயான சண்டையில் பிரிட்டிஷ் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பங்கு குறித்து ஸ்காட்லாந்து யார்டு போர் குற்றக் குழு தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Advertisment

கீனி மீனி சர்வீசஸ் (கே.எம்.எஸ்) என்பது இரகசிய தனியார் அமைப்புகளில் ஒன்றாகும். 1980-களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு  (எல்.டி.டி.இ) எதிரான போராட்டத்தின் போது இலங்கை காவல்துறையின் சிறப்பு பணிக்குழுவுக்கு இந்த அமைப்பு ரகசியமாக பயிற்சி அளித்தது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட புலனாய்வு பத்திரிகையாளர் பில் மில்லர் எழுதிய புத்தகத்தில், இலங்கையில் இராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் கிளர்ச்சியாளர்கள் மீது கீனி மீனி படை தாக்குததல் நடத்தியதையும், இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி அளித்ததையும் குறிப்பிட்டிருந்தார்.

இங்கிலாந்தின் முக்கிய புலனாய்வு ஊடகவியலாளர் என அறியப்படும் பில் மில்லர் கடந்த ஏழு ஆண்டுகளாக தான் செய்த ஆய்வின் சுருக்கமாக  புத்தகத்தை வெளியிட்டிருந்தார்.

"1980 களில் இலங்கையில் பிரிட்டிஷ் ரகசிய அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து ஆராய, லண்டன்  பயங்கரவாத எதிர்ப்பு படையின் ஒரு பகுதியான போர் குற்றக் குழுவுக்கு கடந்த மார்ச் மாதம் பரிந்துரை அளிக்கப்பட்டது" என்று லண்டன் காவல்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

"பரிந்துரையை அடுத்து, ஸ்கோப்பிங் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு, தற்போது ஒரு முழுமையான விசாரணையாக உயர்த்தப்பட்டுள்ளது. தீவிர விசராணை  நடைபெற்று வருவதால் கூடுதல் விவரங்களை விவாதிக்க நாங்கள் தயாராக இல்லை, ”என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

கீனி மீனி என்பது இரகசிய நடவடிக்கைகளுக்கான ஒரு அரபு பேச்சு வழக்கில் மிகப் பரவலாகக் காணப்படும் முறைசாராச் சொற்களாகும். இங்கிலாந்தின் முன்னாள் சிறப்பு கடற்படை தளபதியான ஜிம் ஜான்சன் ( கர்னல் - ஓய்வு) யேமன், ஓமன் நாடுகளில் இரகசிய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டார் .

1983 ஆம் ஆண்டில் இலங்கையில் நவ தாராளவாத கொள்கைகளை முன்னெடுத்த  ஜூனியஸ் ரிச்சட் (ஜே ஆர் ) ஜெயவர்தனா, தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க பிரிட்டிஷ் அரசின் உதவியை நாடினார் .

இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையேயான "பாதுகாப்பு மற்றும் பொருளாதார" ஒத்துழைப்பில் கணிசமான  தாக்கங்கள் ஏற்படக் கூடும் என்று அஞ்சிய பிரிட்டன், இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக  துருப்புக்களை அனுப்ப மறுத்துவிட்டது.

"இந்த விசாரணையை நான் வரவேற்கிறேன். இது, தாமாதமாக எடுக்கப்பட்ட முடிவு. கடந்த, 30 ஆண்டுகளாக  இங்கிலாந்து வெளியுறவு அலுவலகப் பதிவுகளில் கீனி மீனி நிறுவனத்தின் இரகசிய ராணுவ நடவடிக்கைக்கு எதிரான பெரும்பாலான சான்றுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.  நிறுவனத்தின் முக்கிய பிரமுகர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை,”என்று பில் மில்லர் தெரிவித்தார்.

"இலங்கையில் தமிழ் சிறுபான்மை சமுதாய மக்களைத் தாண்டி , சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள்  குறித்த கூடுதல் சான்றுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. எனவே, இலங்கையின் போர் வரலாற்றில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு  குறித்த விளக்கங்கள் தேவைப்படுகிறது.” என்றும் தெரிவித்தார்.

லண்டனில் உள்ள தமிழ் தகவல் மையம் (டி.ஐ.சி) இந்த ஆண்டு தொடக்கத்தில் லண்டன் காவல்துறைக்கு போர்க் குற்றங்கள் குறித்த விரிவான ஆதாரங்களை அனுப்பியிருந்தது.

"பிரிட்டிஷ் ரகசிய நிறுவனமும், சிங்கள இராணுவமும்  பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது. அப்பாவி, பொது மக்கள் பாரிய துன்பங்களை அனுபவித்தன. போர்க்குற்றவாளிகள் நீதிக்கு முன் கொண்டு வரப்பட வேண்டும் ,”என்று தமிழ் தகவல் மையத்தின் இயக்குனர் அனுராஜ் சின்னா கூறினார்.

இலங்கைத் தமிழகர்கள் மீது நேரடி ஹெலிகாப்டர் தாக்குதல்களை கீனி மீனி நிறுவனம் முன்னெடுத்தது. போர்த் தந்திரங்கள் குறித்து இலங்கை துணை ராணுவத்தினர், கமாண்டோக்களுக்கு பயிற்சியளித்ததோடு, உயர் மட்ட ஆலோசனைகளை வழங்கியது.

தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மக்கள் மத்தியில் பிளவை உண்டு பண்ணும் இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதை எல்லா அதிகார சக்திகளும் செய்து வருகின்றன. பிரித்தாளும் முறையின் நிபுணர்களான பிரித்தானிய அரசு அந்த பயிற்சியையும் இலங்கை அரசுக்கு வழங்கி உள்ளது. கிழக்கு இலங்கையில் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் எவ்வாறு பிளவுகளை உருவாக்குவது என்ற திட்டமிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இந்த நிறுவனம் உதவி உள்ளது என்று மில்லர் தனது புத்தகத்தில் தெரிவித்தார்.

இலங்கையில் ரகசியப் படைகள் செயல்பட்டு வருவதை இந்தியா பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும்,  இந்திய அமைதி காக்கும் படைக்கு  பிரிட்டிஷ் விமானிகளைப் பெற இந்நிறுவனத்தின் உதவியை இந்தியா கோரியதாக  நம்பப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் ஜெயவர்த்தனே ஆகியோருக்கு இடையே இந்திய-இலங்கை ஒப்பந்தம் (1987) ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்பு, நான்கு மாதங்கள் வரை  பிரிட்டிஷ் நிறுவனத்தின் இரகசிய சேவையை இந்தியா பெற்றுவந்ததாக புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதி கட்ட ஈழப்போரின் இறுதி கட்டத்தில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

இலங்கை அரசின் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரணை செய்ய, ஜெனிவாவில் உள்ள 47 உறுப்பு நாடுகள் கொண்ட, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக வாக்கெடுப்பின்றி 2015ல் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்படி மகிந்த ராஜபட்சே அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத் தகுந்த நீதி விசாரணையை இலங்கையில் வைத்து, வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்ளைக் கொண்டு நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளது.

Srilanka Ltte
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment