உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால், அங்கு அழிந்து வரும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலே வெளியிட்ட அறிக்கையில், ” கலாச்சார பாரம்பரிய தளங்கள், நினைவுச்சின்னங்களைக் குறிப்பதும், சர்வதேச சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அவற்றின் சிறப்பு அந்தஸ்தை நினைவுபடுத்துவதும் முதல் சவாலாகும் என்றார்.
போரின் போது, கலாச்சார பாரம்பரிய இடங்கள் நினைவுச்சின்னங்களை பாதுகாப்பதற்கான 1954 ஹேக் மாநாட்டின் தனித்துவமான “ப்ளூ ஷீல்ட்” சின்னத்துடன் அந்த பகுதிகள் அடையாளப்படுத்துகிறது
மேலும் பேசிய அவர், “ரஷ்யாவும் உக்ரைனும் இந்த முக்கியமான மாநாட்டை அங்கீகரித்த இரண்டு நாடுகள் என்பதால், அப்பகுதிகளில் மாநாட்டின் சின்னம் குறிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மரபுகளை நாம் அங்கீகரிக்கும்போது, அதனை மதிக்க உறுதியளிக்கிறோம்” என்றார்.
உக்ரைனில் உள்ள ஆபத்தில் இருக்கக்கூடிய அனைத்து கலாச்சார பாரம்பரிய தளங்களையும் யுனெஸ்கோ கண்காணித்து வருகிறது. ஐக்கிய நாடுகளின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (UNITAR) இணைந்து, ஆபத்தான பகுதிகளில் உள்ள தளங்கள் அல்லது ஏற்கனவே சேதமடைந்த தளங்களின் செயற்கைக்கோள் படங்களை பகுப்பாய்வு செய்து மதீப்பிடுகிறது.
யுனெஸ்கோ அறிக்கையின்படி, இதுபோன்ற ஒரு டஜன் தளங்கள் ஏற்கனவே கண்காணிப்பு வட்டத்தில் உள்ளது. உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சொத்துக்களில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள செயின்ட் சோபியா கதீட்ரல் மற்றும் அது தொடர்பான மொனஸ்டிக் கட்டிடங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறுகிறது. இதுதவிர, தெற்கு உக்ரைனில் உள்ள ஒடெசா நகரத்தையும் யுனெஸ்கோ கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ புதன், வியாழன் ஆகிய 2 நாள்களும் உக்ரைன் கலாச்சார நிபுணர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளது. இச்சந்திப்பின் போது உலக பாரம்பரிய தள மேலாளர்கள், அருங்காட்சியக இயக்குனர்கள் இடம்பெறுவார்கள். அப்போது, கலாச்சார தளங்களை பாதுகாக்க உக்ரைனுக்கு தொழில்நுட்ப உதவி அல்லது நிதியுதவி தேவையா என்பதை குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil