Advertisment

ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை.. அதிகரிக்கும் கொரோனா.. மேலும் செய்திகள்

ஊடுருவல்கள் தொடர்ந்தால் இன்னும் அதிகமாக தடைகள் விதிக்கப்படும். மிகக் கடுமையான விளைவுகளை ரஷியா சந்திக்க நேரிடும்.

author-image
WebDesk
New Update
ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை.. அதிகரிக்கும் கொரோனா..  மேலும் செய்திகள்

ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை: அதிபர் பைடன் நடவடிக்கை

Advertisment

உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கிவிட்டது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைத் தொடங்கியதற்காக ரஷியாவிற்கு எதிராக அமெரிக்கா முதல் கட்டத் தடைகள் விதிக்க முடிவு செய்துள்ளது. மேலும் ஊடுருவல்கள் தொடர்ந்தால் இன்னும் அதிகமாக தடைகள் விதிக்கப்படும். மிகக் கடுமையான விளைவுகளை ரஷியா சந்திக்க நேரிடும்.

புதிய தடையால் மேற்கத்திய நிதியுதவி பெறுவதில் இருந்து ரஷியா துண்டிக்கப்படும். ரஷியாவின் உயரதிகாரிகள் மீதும் பொருளாதார தடைகளை விதிப்போம். வி.இ.பி (VEB) மற்றும் ரஷியாவின் ராணுவ வங்கி ஆகிய இரண்டு பெரிய நிதி நிறுவனங்களின் மீது நாங்கள் தடைகளை அமல்படுத்துகிறோம். 

இது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பம். உக்ரைனில் போராடிவரும் பிரிவினைவாதிகளின் பகுதிகளை சுதந்திர நாடுகளாக அறிவித்ததன் மூலம் ரஷியா இப்போது மறுக்க முடியாத வகையில் உக்ரைனுக்கு எதிராக போர் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது வெட்ட வெளிச்சமாகிறது.

ரஷியாவின் ஒவ்வொரு நகர்வுக்கும் அமெரிக்கா பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்கும் என்றார் அதிபர் பைடன்.

ரஷிய  வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்பு ரத்து:

அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைன் விவகாரத்தில் ரஷியா வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டிருந்த அமெரிக்கா திடீரென அந்த சந்திப்பை ரத்து செய்ததுள்ளது.

உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் நிறுத்தியுள்ளதால் கடந்த சில வாரங்களாகவே போர் பதற்றம் நீடித்து வருகிறது.

உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என கூறும் ரஷியா, பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காகவே படைகளை குவித்துள்ளதாக கூறி வருகிறது.

அதே நேரம் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டு, அவர்கள் மூலம் உக்ரைனுக்குள் ஊடுருவதற்கான வேலைகளை ரஷியா செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் 2 பிராந்தியங்களை தனிநாடுகளாக அங்கீகரித்து ரஷிய அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். 

இதனிடையே உக்ரைன் மீது போர் தொடுக்காமல் இருந்தால் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்கா கடந்த வாரம் தெரிவித்தது.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஜெனீவாவில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் சர்ஜி லவ்ரோவை, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்ஆண்டனி பிளிங்கன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ஜெனீவாவில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் சர்ஜி லாவ்ரோ உடனான சந்திப்பை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.

உலகில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

அங்கு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 8 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதே போல் அங்கு 9.50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 54,809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், ஒரே நாளில் 1,443 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கொரோனா பாதிப்பால் இதுவரை மொத்தம் 9.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மொத்தம் இதுவரை 9,63,185 பேர் உயிரிழந்தனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  8.02 கோடியை கடந்தது. 

உலகின் பிற நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

ஜெர்மனியில் 1.58 லட்சம் பேர், ரஷியாவில் 1.35 லட்சம் பேர், பிரேஸிலில் 1 லட்சத்து  ஆயிரத்து 285 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42.79 கோடியாக உயர்ந்தது.

உலக அளவில் 59.23 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 35.57 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்துள்ளனர்.

ரஷியாவுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம்

உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவின் முடிவுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளின் எல்லையில் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த சூழலில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகான்ஸ்க் மற்றும் டன்ட்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷிய அதிபர் புதின் நேற்று அறிவித்தார்.

அதை தொடர்ந்து, அங்கு ரஷிய படைகள் நுழைவதற்கும் புதின் உத்தரவிட்டார். இதனால் அங்கு போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் உக்ரைனுக்குள் ரஷிய படைகள் நுழைய உத்தரவிட்ட அந்த நாட்டின் அதிபர் புதினுக்கு உலக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறுகையில், ‘’உக்ரைன் பிரதேசத்தில் இருந்து ரஷியா நிபந்தனையின்றி வெளியேற வேண்டும். மேலும் ரஷியா தனது அண்டை நாடுகளை அச்சுறுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ரஷியாவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை’’ என்றார்.

உக்ரைனின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும். சர்வதேச சமூகத்தின் விருப்பத்துக்கு எதிரான ஒரு ராணுவ மோதல், ஐரோப்பாவின் அரசியல் மற்றும் பொருளாதாரங்களில் மட்டுமல்ல, முழு உலகிலும் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரும் என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்தார்.

உக்ரைன் பிரிவினைவாத பிராந்தியங்களை புதின் அங்கீகரிக்க சர்வதேச சட்டத்தின் கீழ் எந்த அடிப்படையும் இல்லை. இது ஒரு தெளிவான ஆக்கிரமிப்பு செயலாகும். இது, படையெடுப்புக்கு ஒரு சாக்குப்போக்கை உருவாக்குவதற்கான புதினின் திட்டமிட்ட செயல். அமைதியான தீர்வைக் காண அவசர தூதரக முயற்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறோம் என்று நியூசிலாந்து வெளியுறவு மந்திரி நனாயா மகுதா கூறினார்.

துபாய்  செல்பவர்களுக்கு ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை தேவையில்லை - ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் இருந்து துபாய் வரும் பயணிகளுக்கு இந்திய விமான நிலையத்தில், பயணத்தின் 6 மணி நேரத்துக்கு முன்னர் எடுக்கப்படும் ஆர்டி பி.சி.ஆர் பரிசோதனை தேவையில்லை என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பைடன்-புதின் விரைவில் சந்திப்பு.. சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸி., அனுமதி.. மேலும் செய்திகள்

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியாவில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, ராசல் கைமா உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் துபாய் குடியிருப்பு விசா பெற்றிருந்தால் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகார பொது இயக்குனரகத்தின் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

துபாய் தவிர பிற குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள், சுற்றுலா மற்றும் இ-விசா பெற்றிருப்பவர்கள் மத்திய அடையாளம் மற்றும் குடியுரிமை ஆணையத்தின் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

இந்தியாவில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா ராசல் கைமா விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் அனைவரும் தாங்கள் விமான பயணம் செய்யும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்துகொண்ட சான்றிதழ் முடிவுகளை உடன் கொண்டு வர வேண்டும்.

இந்த பயணிகளுக்கு இந்திய விமான நிலையத்தில் 6 மணி நேரத்துக்கு முன்பாக ஆர்டி பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும். தற்போது இதில் துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு மட்டும் இந்த ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை தேவையில்லை.

இதற்கு பதிலாக பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்கியதும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த பரிசோதனை முடிவுகளில் கொரோனா பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அவர்கள் துபாய் சுகாதார ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக மற்ற நாடுகளுக்கு செல்லும் பயணிகள் அந்தந்த நாடுகளில் உள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment