கேன்ஸ் திரைப்பட திருவிழாவே பிரம்மாண்டம் என்றால், அந்நிகழ்வில் இசைப்புயல் ஏ.ஆர்,ரஹ்மானை சந்தித்தது என் வாழ்க்கையில் பெரிய கனவு நனவான திருப்தியில் இருப்பதாக தமிழ் திரையுலகின் இளம் இயக்குனரும், நடிகை நயன்தாராவின் ஆண் நண்பருமான விக்னேஷ் சிவன், இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில், சர்வதேச திரைப்பட விழா, கடந்த 14ம் தேதி கோலாகலமாக துவங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மாண்ட திரைப்பட விழாவில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து முன்னணி திரைநட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர். ஹாலிவுட் பிரபலங்களான எல்லே ஃபானிங், செலினா கோம்ஸ், ஈவா லங்கோரியா, ஜூலியானா மூரே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்திய திரைநட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய் பச்சன், தீபிகா படுகோனே, சோனம் கபூர் உள்ளிட்டோருடன் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான், தமிழ் திரையுலகின் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் ( நயன்தாராவோடு இல்லாமல், தனியாக) பங்கேற்றுள்ளனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் தான் சேர்ந்து இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த மனிதருடன் இணைந்து நிற்பதில் பெரும்மகிழ்ச்சி அடைவதோடு மட்டுமல்லாது, இதனை பெரும்பாக்கியமாகவே கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
திரைநட்சத்திரங்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக அமைக்கப்பட்டுள்ள சிவப்பு கம்பள வரவேற்பு வீடியோவை வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், அதில் , இனிய தருணங்களால் நிறைந்த இந்த வாழ்க்கை நம்முள் பல்வேறு ஆச்சரியங்களை வாரிவழங்குகிறது. என்னுடைய பெருங்கனவுகளில் ஒரு கனவு ( ஆஸ்கார் நாயகனுடன் சந்திப்பு, கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பு) நனவான திருப்தியில் உள்ளேன். நான் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவன் அதில் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.