Advertisment

பைடன்-புதின் விரைவில் சந்திப்பு.. சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸி., அனுமதி.. மேலும் செய்திகள்

கடந்த ஆண்டு கொரோனா தொற்று குறைய தொடங்கியதும் ஆஸ்திரேலிய அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

author-image
WebDesk
New Update
பைடன்-புதின் விரைவில் சந்திப்பு.. சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸி., அனுமதி.. மேலும் செய்திகள்

உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ளனர்.

Advertisment

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே மோதல் போக்கில் உள்ளன. 

உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக் கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சமடைந்துள்ளது.

உக்ரைனில் தாக்குதல் நடத்த ஏதுவாக ரஷிய போர் படைகள் பெருமளவில் உக்ரைன் எல்லை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  அழைப்பு விடுத்துள்ளார். ஆனால்,  இதற்கு உடனடியான எந்தவிதமான பதிலையும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், இன்னும் காலம் கடந்து போகவில்லை, ரஷியா போரை தவிர்த்துவிட்டு அதிபர் புதின் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்து, உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினை சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சம்மதம் தெரிவித்துள்ளார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உக்ரைன் விவகாரம் தொடர்பாக புதினுடன் ஒரே நாளில் 2 முறை தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் அவர் அமெரிக்க அதிபர் பைடன் உடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், அவருடைய முயற்சியின் பலனாக இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு நிகழ இருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷிய அதிபர் புதின் நேற்று அறிவித்தார். 

இந்த அறிவிப்பு காரணமாக பதற்றம் இன்னும் அதிகரித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாகாணங்களை "சுதந்திரமானவை" என்று அங்கீகரிக்கும் ரஷ்ய அதிபர் புதினின் முடிவை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ஜே பிளிங்கன் ஒரு அறிக்கை வெளியிட்டார். 

ரஷியாவின் அறிவிப்பை தொடர்ந்து, உக்ரைன் விவகாரம் தொடர்பாக  ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்த அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்தன.இதைத் தொடர்ந்து, உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்த உள்ளது.

ரஷியாவில் இருந்து வெளியேறுங்கள்:

அமெரிக்கர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

உக்ரைன்-ரஷியா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ரஷியாவில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா எல்லையில் படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா ஆரம்பத்தில் இருந்தே எச்சரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் உலக நாடுகளை ரஷியாவுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே, எந்த நேரத்திலும் ரஷியா படையெடுப்பை தொடங்கலாம் என்பதால் உக்ரைனில் வசிக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் அறிவித்தார்.

இதனால் பதற்றம் மேலும் அதிகரித்தது. அதை தொடர்ந்து 15-க்கும் மேற்பட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறும்படி தங்கள் நாட்டு குடிமக்களை அறிவுறுத்தின.

ஒரு சில நாடுகள் உக்ரைனில் உள்ள தங்கள் தூதரகத்தை உடனடியாக காலி செய்தன. இந்தநிலையில், ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் உக்ரைனுடனான எல்லை பதற்றத்தை சுட்டிக்காட்டி ரஷியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஊடக ஆதாரங்களின்படி, மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட முக்கிய நகர்ப்புறங்களில் வணிக வளாகங்கள், ரெயில் மற்றும் மெட்ரோ நிலையங்கள், பொதுமக்கள் கூடும் பிற இடங்கள் மற்றும் ரஷிய எல்லையில் பதற்றம் அதிகரித்த பகுதிகளில் தாக்குதல் அச்சுறுத்தல்கள் உள்ளன. எனவே சீக்கிரம் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் விவகாரம் முதல் கொரோனா நிலவரம் வரை.. டாப் 5 உலக நிகழ்வுகள்

பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம்’

அபுதாபியில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் அனைத்து விமான நிலையங்களில் இருந்தும் இந்தியாவுக்கு செல்லும் பயணிகள், இந்தியாவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு பி.சி.ஆர். பரிசோதனை செய்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு அபுதாபி விமான நிலையத்தில் இருந்து செல்லும் பயணிகளுக்கு பொருந்தாது. அபுதாபி அரசுத் துறை வழிகாட்டுதல் அடிப்படையில், அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்துக்குள் செய்துள்ள பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை வைத்திருக்க வேண்டும். இதேபோல் அல் அய்ன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளும் பி.சி.ஆர். பரிசோதனைகளை செய்திருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈரானில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து விபத்து: 3 பேர் பலி

ஈரானின் வடமேற்கு மாகாணமான கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில், தப்ரிஸ் நகரில் இருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான எப்-5 ரக போர் விமானம் ஒன்று பள்ளியின் மீது விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

பயிற்சிக்காக பறந்த விமானத்தில் 2 விமானிகள் மட்டும் இருந்தனர்.

கிளம்பிய சிறிது நேரத்தில், தப்ரிஸ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு மேலே பறந்து கொண்டிந்தபோது விமானம் திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதை தொடர்ந்து, விமானம் குடியிருப்பு பகுதியில் விழுவதை தவிர்க்க அங்குள்ள ஒரு பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானிகள் முயற்சித்தனர்.

எனினும், பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்க கட்டிடத்தின் மீது எதிர்பாராதவிதமாக விமானம் விழுந்தது.

இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும், விபத்து நடந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரும் பலியாகினர்.

கொரோனா காரணமாக பள்ளிக்கூடம் மூடப்பட்டு, மாணவர்கள் யாரும் இல்லாதததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தது ஆஸ்திரேலியா

சர்வதேச எல்லையை ஆஸ்திரேலியா திறந்தது. இதன்மூலம் வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது எல்லைகள் அனைத்தையும் மூடிய ஆஸ்திரேலியா, சர்வதேச பயணிகளின் வருகைக்கு தடை விதித்தது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று குறைய தொடங்கியதும் ஆஸ்திரேலிய அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

எனினும், சுற்றுலா உள்ளிட்ட பிற தேவைகளுக்காக வரும் சர்வதேச பயணிகளுக்கான தடை தொடர்ந்தது. இதனால் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சந்திக்க முடியாமல் பலரும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினர் பிப்ரவரி 21-ந் தேதி முதல் ஆஸ்திரேலியா வரலாம் என்று பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்த மாத தொடக்கத்தல் அறிவித்தார்.

அதன்படி, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று ஆஸ்திரேலியா சென்றனர். சிட்னி விமான நிலையத்தில் வந்திறங்கிய சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் இனிப்புகள் வழங்கியும், கோலா கரடி பொம்மைகளை பரிசளித்தும் வரவேற்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment