Advertisment

சென்னையில் ஒரு 'சுவை'யான செய்தி... 20 ஆண்டுகளாக 2 ரூபாய் ஐஸ் கிரீம்!

வினு'ஸ் இக்லூ, 1995 இல் எஸ் விஜயனால் நிறுவப்பட்ட இந்த ஐஸ்கிரீம் கடை, மேற்கு மாம்பலத்தின் ஃபைவ் லைட்ஸ் அருகில் அமைந்துள்ள ஒரு பிரபலமான கடையாகும்.

author-image
Janani Nagarajan
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னையில் ஒரு 'சுவை'யான செய்தி... 20 ஆண்டுகளாக 2 ரூபாய் ஐஸ் கிரீம்!

13 ஆண்டுகளாக இயங்கி வந்த கடை, தொழிலாளர் பிரச்னையால் 2008ல் மூடப்பட்டது. அதன்பிறகு பிப்ரவரி 2022இல் திறக்கப்பட்டது. (Express Photo)

'மாற்றம் மட்டுமே மாறாதது' என்ற பழமொழியை பின்பற்றி இயங்கும் நம் சமூகத்தில், இந்த கடை அதனின் அவசியம் இல்லை என்பதை உணர்த்துகிறது.

Advertisment

வினு'ஸ் இக்லூ, 1995 இல் எஸ் விஜயனால் நிறுவப்பட்ட இந்த ஐஸ்கிரீம் கடை, மேற்கு மாம்பலத்தின் ஃபைவ் லைட்ஸ் அருகில் அமைந்துள்ள ஒரு பிரபலமான கடையாகும். ரெண்டு ரூபா ஐஸ்கிரீம் கடை (ரூ. 2 ஐஸ்கிரீம் கடை) பற்றி அவ்விடத்தில் இருக்கும் யாரை கேட்டாலும் வழி காட்ட கூடிய அளவிற்கு பிரபலமான கடையாக விளங்குகிறது.

மேலும் கடைக்கு வெளியே பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பலர் ஐஸ்கிரீமுக்காகக் காத்திருப்பதைக் காணலாம்.

13 ஆண்டுகளாக இயங்கி வந்த கடை, தொழிலாளர் பிரச்னையால் 2008ல் மூடப்பட்டது. அதன்பிறகு பிப்ரவரி 2022இல் திறக்கப்பட்டது. தனது 17 வயது மகனின் ஆலோசனையின் அடிப்படையில் மீண்டும் ஐஸ்கிரீம் கடையை திறந்ததாக கடையின் உரிமையாளர் வி. வினோத் கூறுகிறார்.

தலைமுறைக்கு தொடரும் வியாபாரம்:

வினோத் ஆறு உடன்பிறப்புகளில் இளையவர். அரிசி கடை வைத்திருந்த அவரது தந்தை எஸ்.விஜயன், தியேட்டர்களில் விற்கப்படும் கோன் ஐஸ்கிரீம்கள் போல தானும் ஒரு ஐஸ்கிரீம் கடை திறக்க வேண்டும் என  நினைத்தார்.

"நான் கடை திறந்த காலத்தில், பால்வழி நிறுவனம் மிகவும் பிரபலமாக இருந்தது. சென்னையில் அப்போது தனது தொழிலை வளர்த்துக்கொண்டு இருந்தது. அதனால், என் தந்தை இத்தாலியன் ஐஸ்கிரீம் வெண்டிங் மெஷினை கொண்டு வந்து விற்பனையை ஆரம்பித்தார். இந்த ஐஸ்கிரீம்களை அதிக விலைக்கு விற்கப் போவதில்லை என்றும், பொருளாதாரத்தின் மிகக் குறைந்த வட்டங்களில் உள்ள மக்களையும் இது சென்றடைய வேண்டும் என்பதில் அவர் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருந்தார். 

publive-image

ஐஸ்கிரீம் கடையின் உரிமையாளர் வி.வினோத் (Express Photo)

100 பேருக்கு ஒரு பொருளை 100 ரூபாய்க்கு விற்பதை விட, 1 ரூபாய்க்கு விற்பதே வெற்றி என்று அவர் அடிக்கடி கூறுவார். ஏனென்றால் அதிக விலை குடுத்து வாங்கும் மக்கள் மற்ற கடைகளைத் தேடி சுலபமாக சென்று விடுவார்கள், ஆனால் குறைவான விலைக்கு விற்கும் பொழுது வாடிக்கையாளர்களின் வழக்கம் அதிகரிக்கும். இதுவே அவரின் நம்பிக்கை” என்கிறார் வினோத்.

“எனக்கு ஒரு எதிர்காலத்தை உருவாக்க, நான் 16 வயதில் இருக்கும்போதே என் தந்தை இந்த ஐஸ்கிரீம் கடை வியாபாரத்தை ஒப்படைத்தார். இப்போது, ​​11ம் வகுப்பு படித்து, பல பணிகளில் சிறந்து விளங்கும் என் மகன் அனிருத் விஜயன், கடையின் கணக்குகளை கவனித்து வருகிறார். என் தந்தை கடையை என்னிடம் கொடுத்தார், இப்போது அதை என் மகனிடம் ஒப்படைக்கிறேன், ”என்று அவர் மேலும் கூறுகிறார்.

சிறுவயதில் வினு'ஸ் இக்லூவுக்கு வந்தவர்கள், இப்போது தங்கள் குழந்தைகளை ஐஸ்கிரீம் வாங்குவதற்காக கடைக்கு அழைத்து வருவதாக கூறுகிறார்கள்.

publive-image

(Express Photo)

“எனது மகளின் விருப்பத்தின் காரணமாக நான் இந்த இடத்திற்கு அடிக்கடி வருகிறேன். ஒவ்வொரு முறை இந்த கடைக்கு வருகை தரும்பொழுதும் என்னுடைய சிறுவயது காலம் எனக்கு நினைவுறுகிறது. என் அப்பா நான் குழந்தையாக இருக்கும்பொழுது இங்கு அழைத்து வருவார்” என்று லீலாவதி இந்தியன் எஸ்பிரஸிடம் கூறுகிறார். 

கடையின் வாசலில் வ்லாகர்களின் கருத்துக்களை ஒழிப்பறைப்பிக்கொண்டிருக்கும் வினு'ஸ் இக்லூ, நிலையான கூட்டத்தைப் பெற கடையின் உரிமையாளர் நான்கு வருடங்கள் எடுத்ததாகவும், இது வாய்வழியாக நடந்ததாகவும் கூறுகிறார்.

“இன்றைய தொழில்நுட்பத்தில் வளர்ச்சி போல கடை ஆரம்பித்த காலத்தில் இல்லை. வழக்கமான வாடிக்கையாளர்களைப் பெற எங்களுக்கு நான்கு ஆண்டுகள் ஆனது. நாங்கள் தொடங்கும் போது, ​​மற்ற பல ஐஸ்கிரீம் கடைகள் எங்களை இழிவாகப் பார்த்தன. வெறும் 2 ரூபாய்க்கு ஒரு தரமான பொருளை எப்படி விற்க முடியும் என்று அவர்கள் கேலி செய்தனர். மலிவு விலைக்கு ஐஸ்கிரீமை விற்பது அதனின் தரத்தை குறைப்பது போன்றது என்று கூட நினைத்தார்கள்,” என்கிறார் வினோத்.

தொழிலாளர்கள், "கடையில் மட்டும் 15 வகையான கோன் ஐஸ்கிரீம் உள்ளது, ஒவ்வொன்றும் ரூ.2 முதல் ரூ.25 வரை உள்ளது. பால் கோவா ஐஸ்கிரீமுடன், குலாப் ஜாமூன் ஐஸ்கிரீம், ஐஸ்கிரீமுடன் ஜெல்லி, ஐஸ்கிரீமுடன் கேக் விற்கப்படுகிறது. , ஐஸ்கிரீமுடன் ஓரியோ, மற்றும் ஐஸ்கிரீமுடன் வாழைப்பழம்/மாம்பழங்கள் ஆகிய பிளவர்களிலும் கிடைக்கும்" என்று கூறுகின்றனர்.

“பொதுமக்கள் வழக்கமாக சாப்பிட விரும்புவதை நான் வழங்குகிறேன். உதாரணமாக, நான் ஒரு திருமணத்திற்கு அல்லது எந்த விழாவிற்கும் சென்றால், நான் ஒரு குலாப் ஜாமூன் மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புகிறேன், எனவே அவற்றை இணைத்து வழங்கி பார்க்கலாம் என்று யோசித்து வழங்க ஆரம்பித்தோம். ஸ்ட்ராபெரி, மாம்பழம், பிஸ்தா மற்றும் வெண்ணிலா ஆகியவை எங்கள் கடையில் உள்ள நான்கு முக்கிய சுவைகள், ஏனெனில் இது குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் பிடிக்கும், ”என்கிறார் வினோத்.

மக்களை கடைக்குள் கவரும் ரகசியம் 

இந்த ஆண்டு வியாபாரத்தை மீண்டும் தொடங்கிய பிறகு, சில வாரத்தில் அடிப்படை விலையை 8 ரூபாயாக உயர்த்த நினைத்ததாக வினோத் கூறுகிறார். ஆனால் ரூ.2 ஐஸ்கிரீமுக்கு கிடைத்த பதில் அவர்களை மறுபரிசீலனை செய்ய வைத்தது.

publive-image

ஐஸ்கிரீமுக்காக இளைஞர்கள் கடைக்கு வெளியே கூடுகிறார்கள் (Express Photo)

“பள்ளிக் குழந்தைகளின் பாக்கெட்டில் 2 அல்லது 5 ரூபாய் இருக்கலாம், அவர்கள் அதை ஐஸ்கிரீம் வாங்க பயன்படுத்துவார்கள். நான் விலையை உயர்த்தினால் அவர்கள் ஏமாற்றமடைவார்கள். அவர்கள் இந்த ஐஸ்கிரீமை சாப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள், பின்னர் அவர்கள் மற்ற நண்பர்களையும் குடும்பத்தினரையும் இந்தக் கடைக்கு அழைத்து வருவார்கள். நான் 2 ரூபாய் ஐஸ்கிரீம் மூலம் பெரிய லாபம் ஈட்டவில்லை ஆனால் அது வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. எங்களுக்கு 7 வயது முதல் 70 வயது வரையிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர்,” என்று அவர் கூறுகிறார்.

தரத்தில் சமரசம் செய்வதில்லை என்றும் வினோத் கூறுகிறார். “ஒரு பொருள் மலிவானது என்பதற்காக யாரும் அதை வாங்க விரும்பவில்லை என்று கூறிவிட முடியாது. எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் சுத்தமான பாலில் தயாரிக்கப்படுகின்றன, நாங்கள் தண்ணீரை கலக்கவில்லை. எனது தயாரிப்புகளின் தரம் வெளியில் 50 அல்லது 60 ரூபாய்க்கு விற்கப்படும் பொருட்களுக்கு இணையாக இருக்கும்,” என்கிறார்.

“தற்போதைய காலகட்டத்தில் ஒரு கடையில் ரூ.2க்கு ஐஸ்கிரீம் எப்படி விற்கப்படுகிறது என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர். எனக்கு புதுச்சேரி போன்ற பிற இடங்களிலிருந்தும், இலங்கை போன்ற வெளிநாடுகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இத்தனை வருடங்களாக எங்களால் எப்படி இதைச் செய்ய முடிந்தது என்று ஆச்சரியமும் ஆர்வமும் கொண்டுள்ளனர். மக்கள் ரூ.2 ஐஸ்கிரீமுக்கு வந்து எங்களுடைய மற்ற ஐஸ்கிரீம் வகைகளை வாங்குகிறார்கள். ஒரு இரண்டு ரூபாய் கோன் ஐஸ்கிரீமுக்கு யாரும் செலவு பார்ப்பதில்லை, அதனால்தான் வியாபாரம் நடக்கிறது, ”என்று அவர் மேலும் கூறுகிறார்.

அவரது கடைக்கு தினமும் சுமார் 3,000 பேர் வந்து செல்கின்றனர் என்கிறார் வினோத். அவர் ஐஸ்கிரீம் கடை ஆரம்பிக்கும் வேளையில் ஒரு தொழிலாளி மட்டுமே இருந்தார், இப்போது எட்டு பேர் அவரிடம் வேலை செய்கிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார்.

எதிர்கால திட்டங்கள்

வினோத்தும் 2 ரூபாய்க்கு டீ விற்கத் தொடங்கினார், மேலும் தனது வாடிக்கையாளர்கள் நல்ல கருத்துக்களைத் தெரிவித்ததாக கூறுகிறார். மற்ற இடங்களில் வழங்கப்படுவதை விட பெரிய கோப்பைகளில் டீயை ரூ.8 மற்றும் ரூ.10க்கு விற்பனை செய்து வருகின்றனர், என்கிறார் அவர்.

“எனது பிராண்டை மேம்படுத்துவதற்காக இக்கடையை விரிவுபடுத்த நினைக்கிறேன். சிலருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களிலும் இந்த ஐஸ்கிரீம் கடையை அமைக்க இலக்கு வைத்துள்ளேன். அடுத்த ஆண்டுக்குள் இது நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment