Abhiyum Naanum Actress Vidya Vinu Mohan Lifestyle Tamil News : வள்ளி நெடுந்தொடர் மூலம் அறிமுகமாகி, பல ரசிகர்களை தன் வசமாக்கிக்கொண்டவர் வித்யா மோகன். பார்வையற்ற பெண், ஆண் வேடம் என வித்தியாச கெட்-அப்புகளில் வள்ளி தொடரில் நடித்தவர், தற்போது அபியும் நாணயம் சீரியல் மூலம் தினம் தினம் மக்களை சந்தித்து வருகிறார். தன்னுடைய தாத்தா முதல் கணவர் வரை அனைவருமே மலையாள திரையுலகின் கலைஞர்கள் என்றாலும், வித்யாவுக்குப் பிடித்த இடம் தமிழ்நாடு.

வித்யாவோடு பேசினாலே, அவருடைய திருமண வாழ்க்கையைப் பற்றி எப்போதுமே பூரிப்பது உண்டு. ஷூட்டிங்கின் போது, ஒவ்வொரு ஷாட் இடைவெளியிலும் தன் கணவருக்கு போன் செய்து, அப்டேட் செய்வது இவருடைய வழக்கம். மேலும், திரைப்படம் பற்றிய உரையாடல்கள் இவர்களுக்குள் அதிகம் இருக்குமாம். தொடர்ந்து 10 ஆண்டுகள் திரையுலகில் அதிலும் சின்னத்திரை உலகில் பயணித்து வரும் வித்யாவின் அம்மாதான் அவரை முதல் முதலில் ஆடிஷன் செய்தது.

தன் சிறு வயதில், ரஸ்னா விளம்பரத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு வந்தபோது, அவருடைய அம்மா வித்யாவை விடவில்லையாம். அதே ஒரு மிகப் பெரிய குறையாக மாறி, எப்படியாவது திரையில் தோன்றிவிடவேண்டும் என்று கனவு காண ஆரம்பித்திருக்கிறார் வித்யா. பதின்பருவம் எட்டியது, திரைத்துறையில் நடிக்கவேண்டும் என்று தன் பெற்றோரிடம் சொன்னபோது, ஸ்ட்ரிக்ட்டாக ‘நோ’ சொல்லிவிட்டனர்.

பிறகு, ‘நான் நடித்துக் காட்டுகிறேன். சூழ்நிலை சொல்லுங்கள்’ என்று வித்யா தன் அம்மாவிடம் கேட்க, அவரும், ‘விருப்பமான ஒருவர் இறந்துவிட்டால் எப்படி நடிப்பாய்’ என்று கேட்டதும், உடனே அழுது மிக உருக்கமாக நடித்திக்காட்டியிருக்கிறார். இந்த நடிப்பைப் பார்த்து வியந்த வித்யாவின் தந்தை, அவரை ஆடிஷனுக்கு சில கண்டிஷன்களோடு கூட்டிச் சென்றிருக்கிறார். இப்படிதான் வித்யா திரையுலகிற்கு அறிமுகமானார்.

ஆரம்பத்தில் திரைப்படங்களில் நடித்தவர், திருமணத்திற்குப் பிறகு மெகா தொடர்களில் அதிலும் தமிழில் நடிக்க ஆரம்பித்தார். வள்ளி தொடரில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்ததால், அபியும் நானும் தொடரில் ஸ்வீட் அம்மா கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் வித்யா. முன்பு போல தன்னுடைய அம்மா, அப்பா இப்போது ஸ்ட்ரிக்ட்டாக இல்லை என்றும், அனைவரும் குழந்தைபோலவே மாறிவிட்டதாகவும் கூறி பூரிக்கிறார் வித்யா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil