உலகம் தோன்றலின் ரகசியம்: 80 வருட வேட்டைக்கு பிறகு கண்டறியப்பட்ட "தேவதை துகள்"!

ஒரு நொடியின் நூறு கோடியின் ஒரு பகுதியின் நூறு கோடியில் ஒரு பகுதி எனும் நேர பரப்பை நம்மால் கற்பனை செய்து பார்த்தாலே தலை சுற்றிவிடும்....

தேனி மாவட்டம், உத்தம பாளையம் வட்டம், பொட்டிபுரம் கிராமத்தில் மத்திய அரசின் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது ‘நியூட்ரினோ’ ஆய்வு மைய திட்டம். ஆனால், மக்கள் மத்தியில் எழுந்த பலத்த எதிர்ப்பால், இந்த திட்டம் ஆந்திராவுக்கு மாற்றப்பட்டது. இந்த நியூட்ரினோவைத் தான் தமிழில் ‘கடவுள் துகள்’ என்று சொல்கிறார்கள். இந்த கடவுள் துகள் கடந்த 2012-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், அறிவியல் உலகில் 80 ஆண்டுகளாக வெறும் கருத்தாக மட்டும் இருந்த “தேவதை துகள்” என்ற ஒன்றை தற்போது ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த தேவதை துகள் தனக்குள்ளேயே எதிர் துகளை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாம் பிரபஞ்ச தோன்றலின் ரகசியத்தை கண்டறிய முடியும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அணுக்களின் ஒன்றிணைவே ஆகும். அந்த அணுவுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் தவிர கண்டுபிடிக்கப்படாத பல துகள்கள் உள்ளன. குறிப்பாக கடவுள் துகள் என்று கூறப்படக்கூடிய துகள் சில வருடங்களுக்கு முன்புதான் கண்டறியப்பட்டது.

கடவுள் துகள் என்றால் என்ன?

பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. அறிவியலின் கூற்றுப்படி சுமார் 13,750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு `பிக்-பேங்க்’ எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகின. பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக கூறப்படுகிறது.

எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் நாம் வாழுகிற பூமி, நம்மைச் சுற்றிலும் இருக்கிற அனைத்தும். இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான். இந்நிலையில், அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது. அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால், பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின்போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதற்காக கனடாவில் சட்பரி (Sudbury ) எனும் இடத்தில் 2 ஆயிரம் மீட்டர் ஆழத்திலும், பிரான்ஸில் அண்டேர்ஸ் (Antares) என்கிற இடத்தில், கடலுக்கடியில் 2500 மீட்டர் ஆழத்திலும், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் 2 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து ஆராய்ச்சி செய்து வருகிறது அமெரிக்கா.

இதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன. 12-வது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ஹிக்ஸ் பாசன் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தாலும், அது கடவுள் துகள் என்று கூறப்படுகிறது. இந்த கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற பிரசித்தி பெற்ற அணு விஞ்ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியின் முடிவில் ‘கடவுள் துகள்’ எனப்படும் ஹிக்ஸ் பாசன் துகள் கண்டறியப்பட்டது.

கடவுள் துகளை பிடிக்க முடியுமா?

இந்த இடத்தில் கொஞ்சம் கவனம் தேவை. துகள் என்னும் போதே ஏதோ கண்ணுக்கு தெரியாத அளவில் நுண்ணிய ஒரு வஸ்து என்பதை அணுமானித்து கொள்ளலாம். ஆனால் இந்த கடவுள் துகளோ அதனினும் நுண்ணியது. புரோட்டான் போன்றவற்றை கூட ஆய்வு கூடத்தில் பிடித்து நிறுத்து விடலாம். ஆனால் கடவுள் துகளை பிடிப்பது என்பது சாத்தியமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

காரணம் இந்த துகள் புரோட்டான்களை விட 200 மடங்கு நிறை கொண்டதாக கருதப்பட்டாலும் அவை தோன்றும் போதே மறைந்து விடும் தன்மை கொண்டவை. அதாவது கண்ணிமைக்கும் நேரம் என்பார்களோ அதில் நூறு கோடியில் ஒரு பகுதி அதில் நூறு கோடியில் ஒரு பகுதி நேரமே இவை இருக்கும் அதன் பிறகு வேறு வடிவில் அழிவுக்கு உள்ளாகி விடும்.

ஒரு நொடியின் நூறு கோடியின் ஒரு பகுதியின் நூறு கோடியில் ஒரு பகுதி எனும் நேர பரப்பை நம்மால் கற்பனை செய்து பார்த்தாலே தலை சுற்றிவிடும். பெருவெடிப்பு உண்டான ஒரு நொடியின் நூறு கோடியின் ஒரு பகுதிக்குள் இந்த கடவுள் துகள் தலையை காட்டி எல்லாவற்றுக்கும் ஆதாரமாக அமைந்து இந்த உலகத்தையே உருவாக்கியிருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

தேவதை துகள்:

இதே போல, 1928 ஆம் ஆண்டு பால் டிரக் என்ற இயற்பியலாளர், அனைத்து அடிப்படைத் துகள்களுக்கும், எதிர் துகள் உண்டு என்றும், அவை ஒரே மாதிரியான, எதிர் விசை கொண்ட இரட்டைகள் என்று கூறினார்.

பின்னர் 1937 ஆம் ஆண்டு எட்டோர் மஜோரனா என்ற இயற்பியலாளர், ஃபெர்மைன் என்ற துகள்களுக்கு எதிர் சக்தி கொண்ட துகள்கள் உள்ளன என்று அனுமானித்துக் கூறினார். எட்டோரின் அனுமானம் தற்போது உண்மையாகி உள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு மற்றும் கலிஃபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தற்போது தேவதை துகள் இருப்பதற்கான சான்றுகளை கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் 80 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கு முடிவு கிடைத்துள்ளது. மேலும், தேவதை துகள் குறித்து முழுவதும் தெரிந்துகொள்ள இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தேவதை துகளின் கண்டுபிடிப்பு நிச்சயம் பிரபஞ்ச தோன்றலின் ரகசியத்தை அறிய நெருங்கும் முயற்சியின் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close