Advertisment

தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்

தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட என்னென்ன தேவை. பணம், ஆடைகள், நகைகள், புத்தாடைகள் மட்டும் இருந்தால் போதுமா என்பதை ஜென் கதை மூலம் விளக்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dipawali - diwali - deepawali
இரா.குமார்
தீபாவளிப் பண்டிகை வருகிறது. தீபாவளிப் பண்டிகை கொண்டாட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அது எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். தீபாவளி என்றால், ஒரு விஷயத்தை நினைத்து மகிழ்ச்சியடையலாம். அது....
இந்தியா முழுவதும் இந்துக்களால் மொழி, மாநில, இன வேறுபாடு இன்றி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் 100 கோடி மக்களும் அன்று புத்தாடை அணிந்து, இனிப்பு உண்டு, பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். நூறு கோடி மக்களும் ஒரே நாளில் புத்தாடை அணிந்து நிற்பதை நினைத்துப் பாருங்கள்.. எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆண்டின் 365 நாட்களில் தீபாவளியன்று மட்டும்தான் நாடு முழுவதும் உள்ள மக்கள் எல்லாரும் புத்தாடை அணிந்து, மகிழ்ச்சியாக பண்டிகை கொண்டாடுகின்றனர். வேறு எந்தப் பண்டிகையும் இப்படி நாடு முழுவதும் உள்ள மக்களால் கொண்டாடப்படுவதில்லை. இப்படி நாட்டு மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு பண்டிகையை நாமும் மகிழ்ச்சியாகக் கொண்டாடலாமே.
ஆம்; தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும். இருக்கின்ற பொருளாதார நெருக்கடியில், மகிழ்ச்சியாக எப்படிக் கொண்டாட முடியும்? என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது. நல்ல கேள்விதான்.
பொருளாதாரம் சரியாக இருந்தால், மகிழ்ச்சி வந்துவிடுமா? வராது. பணம் மட்டுமே மகிழ்ச்சியைக் கொடுத்துவிடாது.
வசதிதான் மகிழ்ச்சியைத் தரும் என்று சிலர் திடமாக நம்புகிறார்கள். கார், பங்களா, தோட்டம், வங்கியில் இருப்பு, பணம் இவை மகிழ்ச்சியைத் தரும் என்பது உண்மையா? அப்படியென்றால், பணக்காரர்கள் எல்லாரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களா? இல்லையே. இது ஏன்?
ஒரு ஜென் கதையைப் பார்ப்போம்.
ஒரு கிராமத்து மக்கள், வசதியின்றி வாழ்ந்து வந்தனர். அங்கு ஒரு ஜென் துறவி சென்றார். மக்கள் அனைவரும் அவரிடம் சென்று, ‘‘எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. எல்லாரும் துன்பத்தில் உழல்கிறோம். நாங்கள் விரும்புவது எதுவுமே கிடைப்பதில்லை. நாங்கள் விரும்புவது எல்லாம் கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்போம்” என்று வேண்டினர்.
‘‘நான் இறைவனிடம் விண்ணப்பிக்கிறேன்” என்று கூறினார் அந்த ஜென் துறவி.
அன்றே அந்த கிராம மக்களின் காதில் விழும்படியாக ஓர் அசரீரியை ஒலிக்கச் செய்தார்.
‘‘நாளை இரவு ஒரு மணிக்கு ஓர் அதிசயம் நடக்க இருக்கிறது. உங்களின் துன்பங்களையெல்லாம், கற்பனையில் ஒரு மூட்டையாகக் கட்டி, கொண்டு போய் ஆற்றில் போட்டுவிடுங்கள். பின்பு அதே கற்பனை மூட்டையில், பணம், வீடு, கார், நகை என எதையெல்லாம் விரும்புகிறீர்களோ அவற்றைப் போட்டு வீட்டுக்குக் கொண்டுவருவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வீட்டுக்குப் போவதற்குள் அவை அங்கே இருக்கும்.
இந்த அசரீரி வாக்கைப் பலர் நம்பவில்லை.
ஆனாலும் இப்படிச் செய்வதில் என்ன நஷ்டம் வந்துவிடப்போகிறது என்று நினைத்து, அந்த கிராம மக்கள் அனைவரும் அவ்வாறே செய்தனர். என்ன அதிசயம்! அசரீரி சொன்னபடியே பலித்துவிட்டது.
கார் வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு நிஜமாகவே கார் நின்றிருந்தது. பங்களாவை நினைத்தவர்களுக்கு பங்களா...நகை....பணம் எல்ல்லாமும் நினைத்தபடியே கிடைத்துவிட்டன. எல்லாரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். கூத்தும் கும்மாளமுமாக அங்கே மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டது.
ஆனால், அந்த மகிழ்ச்சி கொஞ்ச நேரம்தான் இருந்தது. அடுத்த வீட்டுக்காரனைப் பார்த்தார்கள். தன்னைவிட அவன் அதிக மகிழ்ச்சியில் இருப்பதாகப்பட்டது. அடுத்த வீட்டுக்காரன் கார் தன் காரைவிட அழகாகவும் நல்ல வண்ணத்திலும் இருப்பதாகப்பட்டது.
ஐயோ! நாம் கல் வைத்த மூக்குத்திதான் நினைத்துப் பெற்றோம். எதிர்வீட்டுக்காரி வைரம் பதித்த மூக்குத்தி பெற்றுவிட்டாளே...!
‘‘ஏண்டி உனக்கு ஒற்றை வடம் சங்கிலிதான் கிடைச்சுதா? ரெட்டை வடம் சங்கிலியா நினைக்கக் கூடாது? சே...என்ன பிள்ளை...”
நாமும் அதுபோல கேட்டிருக்கலாமோ... இதுபோல நினைச்சிருக்கலாமோ... என்ற எண்ணம் அனைவரையும் தொற்றிக்கொண்டது. அடுத்த விநாடி, அந்த மக்களைத் துன்பம் பிடித்து ஆட்டத் தொடங்கிவிட்டது.
இப்போது சொல்லுங்கள்! மகிழ்ச்சியும் நிம்மதியும் பணம், வீடு, வசதியால் மட்டும் கிடைத்துவிட்டதா? இல்லையே.
மகிழ்ச்சி நம் மனத்தில்தான் இருக்கிறது. அதிக விலை கொடுத்து ஆடைகள் வாங்கியவரைப் பார்த்து, நம்மால் அப்படி வாங்க முடியவில்லையே என்று ஒருவர் வருத்தப்படுகிறார். அதிக விலையில் ஆடைகள் வாங்கியவரோ, அடுத்த வீட்டுக்காரர், தீபாவளிக்கு தங்க நகை வாங்கியுள்ளாரே... நம்மால் முடியவில்லையே என்று வருத்தப்படுகிறார். தங்க நகை வாங்கியவரோ, எதிர் வீட்டுக்காரர், புதிதாக கார் வாங்கியுள்ளார். நம்மால் வாங்க முடியவில்லையே என்று வருத்தப்படுகிறார். இப்படி, வருத்தப்படுவது என்று ஆரம்பித்தால், அதற்கு எல்லையே இல்லை.
நமக்கு என்ன கிடைத்துள்ளதோ அதை வைத்து மன நிறைவு கொள்ள வேண்டும். பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டாம் என்பதல்ல இதற்குப் பொருள். பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள்ள வேண்டும். அதற்காக முயற்சி செய்ய வேண்டும். உழைக்க வேண்டும். ஆனால், அடுத்தவரைப் பார்த்துவிட்டு, நமக்கு இது இல்லையே என்று வருத்தப்படுவதால், நம் நிலை உயர்ந்துவிடாது. வருத்தப்படுவதால் உயர்வு வராது. மனமும் உடலும் சோர்ந்து, இன்னும் தாழ்வுதான் ஏற்படும். இன்று இது கிடைத்திருக்கிறது. அதை வைத்து மகிழ்ச்சியாக இருப்போம். நாளை இதைவிட உயர்வான ஒன்றைப் பெற முயற்சி செய்வோம் என்ற மனப்பன்மையே மனத்துக்கு மகிழ்ச்சி தரும். மகிழ்ச்சியை மட்டுமல்ல, உயர்வையும் தரும்.
எனவே நண்பர்களே, நிறைவு கொள்ளும் மனத்தைப் பெறுவோம். இருப்பதை வைத்து திருப்தியடைவோம். தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம்.
Ra Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment