நக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி! விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி

ஐபிஎஸ் அதிகாரி கார்த்திக்கிற்கு, 'சாம்பியன் ஆஃப் சேஞ்ச்' என்ற விருதை துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு வழங்கி கவுரவம்

ஜார்கண்ட் மாநிலத்தின் நக்சல் பகுதியான லோஹர்தகா மாவட்டத்தை சுற்றுலாத் தளமாக மாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கார்த்திக்கிற்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ‘சாம்பியன் ஆஃப் சேஞ்’ எனும் விருதை அளித்து கவுரவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் பகுதியான லோஹர்தகா மாவட்டத்தை சுற்றுலாத் தளமாக மாற்றி இருப்பவர்  தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கார்த்திக் எஸ். லோஹர்தகா மாவட்டத்தில் கடந்த 2000 ஆண்டில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அஜய் குமார் என்பவர் நக்சல் தாக்குதலில் உயிரிழந்தார்.

அப்பேற்பட்ட கொடூரமான நக்சல்கள் நிரம்பியிருந்த மாவட்டத்தில் 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் காவல்துறை கண்காணிப்பாளராக கார்த்திக் எஸ் பதவியேற்றார். முதல் முறையாக ‘ஆயுதம் விடு, வாலிபால் எடு’ என்கின்ற volleyball tournament ஒன்றை அங்கு நடத்தினார்.

இந்த வாலிபால் தொடர் மூலம் ஆயுதம் எடுத்துக்கொண்டு காடுகளில் குறிக்கோள் இல்லாமல் சுற்றுவதில் இருந்து வெளியேறி, உலகத்தில் உள்ள அனைத்து நல்லவை கெட்டவைகளில் பங்குகொள்ள நக்சல்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதே நேரம் அந்தப் பகுதியில் மிக முக்கியமான நக்சல் தலைவரான நகுல் யாதவை எதிர்த்து தீவிர நக்சல் விரோத ஆபரேஷன் நடத்தி வந்தார். அப்போது, நக்சல்கள் ‘நக்சல் வாதம்’ என்ற போர்வையில் அரசாங்கத்தின் பல முன்னேற்ற திட்டங்களில் பணம் பறித்தலை நடத்தி வந்ததையும் அம்பலப்படுத்தினார். அதன் மூலம் நகுல் யாதவ் பல கோடிகளை குவித்து பணக்காரரான உண்மையையும் அம்பலப்படுத்தினார். அவருடைய சொத்துக்களையும் அரசாங்க வழக்கின் மூலம் ஜப்தி செய்ய தொடங்கினார்.

இவ்வளவு தீவிர முயற்சிகளை கண்டு வேறு வழியின்றி அரசாங்கத்தின் முன் நகுல் யாதவ் ஆயுதத்தை விடுத்து முக்கிய சமூகத்தில் இணைந்து வாழ முடிவெடுத்தார். இவருடைய பணிக்காலத்தில் 25 சிறுவர்களை நக்சல் பிடிகளில் இருந்து விடுவித்தார். மேலும் 18 நக்சல்கள் சரணடைந்தனர். இதே நேரத்தில் வன வளம் மிகுந்த பெஷ்ரர் (Peshrar) தொகுதியில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகளின் புகைப்படங்களையும் எடுத்து monsoon Peshrar என்ற சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தை ஊக்குவித்தார்.

இவருடைய பணிக் காலத்தில் தான் அம்மாநில முதல்வரான ரகுபர்தாஸ் முதன் முதலாக அந்த பெஷ்ரர் தொகுதிக்கு வருகை தந்தார். அந்த அளவிற்கு, நக்சல்களில் இடத்தை தலைகீழாக மாற்றிக் காட்டியிருந்தார்.

இதன் விளைவாக, அந்த இடத்திற்கு மக்கள் தைரியமாக சென்று வர ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியாக, ஒரு குறிப்பிட்ட அருவியில் வாகனங்களை நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், மாதம் ஆறிலிருந்து ஏழு லட்சம் வரை வருமானம் கிடைத்ததால், வறுமையால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியில் செழுமை குடிகொள்ள ஆரம்பித்தது.

இவ்வளவு மாற்றங்களுக்கும் காரணமாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி கார்த்திக்கிற்கு, ‘சாம்பியன் ஆஃப் சேஞ்ச்’ என்ற விருதை துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு வழங்கி கவுரவித்துள்ளார். தற்போது பொக்காரோ மாவட்டத்தின் கண்காணிப்பாளராக பதவி வகிக்கும் கார்த்திக் எஸ் 2010 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

சென்னையில் அயனாவரத்தில் பிறந்த கார்த்திக் MITல் 2001ம் ஆண்டு பிடெக் முடித்தார். ராஞ்சியில் போக்குவரத்து துறை கண்காணிப்பாளராக பதவி வகித்த போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இருந்து ஜார்கண்ட் சென்று, நக்சல்களை விளையாட்டு வீரர்களாக மாற்றியது மட்டுமல்லாமல், அந்தப் பகுதியையே சுற்றுலாத் தளமாக உருமாற்றி, அவர்களின் வருமானத்திற்கும் வழிவகை செய்த ஐபிஎஸ் அதிகாரி கார்த்திக்கிற்கு நச்-னு ஒரு சல்யூட் வைக்கலாம்!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close