வெறும் 5 ரூபாயில் எத்தனையோ நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றியவர்.. மறைந்தார் நிஜ மெர்சல் நாயகன்!

இலவசமாக மருத்துவம் பார்த்துவிட்டு, இவரே தனது சொந்த செலவில் மாத்திரைகளையும் வாங்கிகொடுப்பார்

சென்னை ராயபுரத்தில் வெறும் 5 ரூபாயில் மருத்துவ சேவை வழங்கிக் கொண்டிருந்த 5 ரூபாய் டாக்டர் ஜெயசந்திரன் நேற்று (19.12.18) காலமானர். இவரின் மறைவு ஒட்டுமொத்த மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

5 ரூபாய் டாக்டர் ஜெயசந்திரன்:

சேவைகளில் சிறந்த சேவை மருத்துவம் என்பார்கள். அப்படி சொன்னால் அது மிகையும் அல்ல.   ஒரு உயிரை காப்பாற்றும்   வாய்ப்பு கடவுளுக்கு அடுத்தப்படியாக மருத்துவர்களிடமே உள்ளது. அதனால் தான் உயிரை காப்பாற்றும் மருத்துவரை நோயாளிகள் கடவுளுக்கு நிகராக மட்டுமில்லை கடவுளாகவே பார்க்கிறார்கள்.

இன்றைய காலத்தில் எத்தனை டாக்டர்கள் மருத்துவத்தை வியாபாரமாக பார்க்காமல்  சேவையாக செய்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால் அப்படி  செய்தால் அவர்களுக்கு மக்கள் தரும் அங்கீகாரம்  எப்படி இருக்கும் என்பதை இன்றைய தினம் அனைவரும் தெரிந்துக் கொள்வார்கள்.

கடந்த 45 ஆண்டுகள் மருத்துவத்தை தனது உயிர் நாடியாக நினைத்து வெறும் 5 ரூபாய்க்கு  ஏழை நோயாளிகளுக்கு சிகிக்சை பார்த்து வந்த  டாக்டர் ஜெயசந்திரன் (71)  மாரடைப்பால் நேற்று காலமானர். அவரின் இழப்பு ராயபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த  இவர்  மருத்துவம் படிக்கும் காலத்திலேயே முடிவு செய்து விட்டாராம்..  கண்டிப்பாக படித்து முடித்த பின்பு வெளிநாட்டுக்கு செல்லாமல் படித்து , வளர்ந்த இடத்தில் இருக்கும்  ஏழை எளிய  மக்களுக்கு இலவசமாக  சிகிக்சை பார்க்க வேண்டும் என்று.  அதை வெறும்  வாக்குறுதியாக மட்டுமில்லாமல் சாகும் வரை வெற்றிக்கரமாக செய்தும் காட்டி இருக்கிறார் இந்த நிஜ மெர்சல் நாயகன்.

மெர்சல் படத்தில் விஜய்  இவரின் கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார்.அந்த படம் வெளியான பின்பு,  உலகின் மூலை முடுக்கில் இருந்த  கடையோடி தமிழனுக்கும் இவரை பற்றி தெரிய வந்தது.

கடந்த 1971ஆம் ஆண்டு கிளினிக்கை தொடங்கிய ஜெயச்சந்திரன் ஆரம்பத்தில் ரூ.2 மட்டுமே கட்டணம் பெற்று வந்தார். அதன் பின்பு  5 ரூபாயாக கட்டணைத்தை மாற்றினார். அதுவே பணம் இல்லாமல் இருக்கும் முதியவர்கள், ஏழைகள் என்றால் இலவசமாக மருத்துவம் பார்த்துவிட்டு, இவரே தனது சொந்த செலவில் மாத்திரைகளையும் வாங்கிகொடுப்பாராம்.

ஜெயசந்திரன் இதுவரை தனது வாழ்நாளில் அதிகப்படியாக வாங்கிய மருத்துவ கட்டணம் 20 ரூபாய். அதுவும் சிலர் வற்புறுத்தி கொடுத்தால் மட்டுமே .. சில மருத்துவர்களை கைராசி டாக்டர் என்பார்கள். ஆனால் ஜெயசந்திரன் வாய் ராசி மருத்துவர்.

தன்னிடம் வரும் நோயாளிகளை அன்பாக அழைத்து, அவர்களிடம் கனிவாக பேசியே பாதி நோயை சரி செய்துவிடுவார் என்கிறார்கள், அவரிடம் சிகிச்சை பெற்ற  மக்கள்.  ”காலை 4 மணி  என்றாலும் சரி, இரவு 12 மணி என்றாலும் சரி எந்த நேரம் அவரின் வீட்டை தட்டி நோயாளிகள் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து சிகிச்சை பார்ப்பார்.  இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள்” என கண்ணீர் விட்டு அழுகின்றனர் ராயபுரம் பகுதி மக்கள்.

மக்களுக்காக சேவை செய்பவரை மக்கள் மறப்பார்களா என்ன?   டாக்டர்  ஜெயசந்திரன் உள்ள  ஏரியாவில் எந்த வீட்டில் சுபநிகழ்வுகள் நடந்தாலும் அங்கு முதல் அழைப்பு அவருக்கு  தான். பேனர்களில் சிறப்பு வரவேற்பும் 5 ரூபாய் டாக்டர் ஜெய்சந்திரனுக்கு தான்.

இப்படி ஒரு சிறந்த மனிதரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. ஜெயசந்திரனின் மறைவை நினைத்து அந்த பகுதி மக்கள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close