curry leaves recipe tamil: நம்முடைய பிரபல காலை உணவாக உள்ள இட்லி, தோசை, ஆப்பம் போன்றவைக்கு சுவையான சட்னி என்பது பொருத்தமாக இருக்கும். மழையின் காரணமாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையில் ஏற்றம் கண்டுள்ள நிலையில், இவற்றில் சட்னி தயார் செய்ய சற்றே தயங்கி வருகிறோம்.
இந்த தருணத்தில் வெங்காயம், தக்காளி இல்லாமல் சுவையான சட்னி தயார் செய்யலாமா? என பலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். அவர்களுக்காகவே இங்கு தினந்தோறும் முக்கிய சமையல் குறிப்புகளை வழங்கி வருகிறோம். மேலும், வெங்காயம், தக்காளி சேர்க்காமல் பல வகை சட்னிகள் தயார் செய்யலாம். இதில் முக்கிய சட்னியாகவும், செய்முறை சிம்பிள் சட்னியாகவும், இட்லி, தோசைகளுக்கு ஏற்ற சட்னியாகவும் இந்த அற்புதமான “கருவேப்பிலை சட்னி” உள்ளது.
எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ள இந்த சட்னி கண் பார்வையும், தலை முடி பிரச்சனையையும் எளிதாக தீர்க்க வல்லதாக இருக்கிறது. இவற்றில் வைட்டமின் A, B, C, கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிகளவு நிறைந்துள்ளன. இவற்றை தினமும் பச்சையாக சாப்பிடால் உடலில் ஏற்படும் பல பிரச்சனை சரியாகும். கூந்தல் நன்கு வளர்ச்சி அடை வதற்கும் இவை பயன்படுகிறது.

இப்போது, கருவேப்பிலை சட்னி எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
கருவேப்பிலை சட்னி செய்யத் தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 4
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – 1/2 கப்
பூண்டு – 2
தாளிக்க…
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுந்து – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வர மிளகாய் – 1
கருவேப்பிலை சட்னி சிம்பிள் செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதை சூடேற்றவும். பிறகு எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும். தொடர்ந்து அவற்றுடன் வர மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
பின்னர் நன்கு அலசி வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும். அவை நன்கு வதங்கியதும், பூண்டு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து புளியை சேர்த்துக் கொள்ளவும்.
இவற்றை நன்கு வதக்கிய பிறகு அரை கப் தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து நன்கு ஆற வைத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு மிக்சியில் இட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
இவற்றுக்கான தாளிப்பு சேர்க்க, மேலே தாளிக்க வழங்கப்பட்டுள்ளவற்றைக் கொண்டு தாளித்துக்கொள்ளவும்.
இப்போது, நீங்கள் எதிர்பார்த்த சுவையான மற்றும் ஆரோக்கியமான கருவேப்பிலை சட்னி தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த உணவுகளுடன் சேர்த்து சுவைத்து மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“