Advertisment

பண்டிகைகள் பண்பாட்டின் அடையாளங்களாகட்டும் - முனைவர் கமல.செல்வராஜ்.

ஒரு நாள் பட்டாசு வெடிப்பதற்கு இவ்வளவு பெரிய கட்டுப்பாடுகளும் தடைகளும் தேவையில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Diwali 2019 festivals of Indian culture, tradition and heritage , தீபாவளி வாழ்த்துகள், தீபாவளி, தீபாவளி செய்திகள்,

Diwali 2019 festivals of Indian culture, tradition and heritage

Diwali 2019 Tamil Nadu tasmac target : பள்ளிப் பருவத்தில் பொங்கல், ஓணம், தீபாவளி, கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகள் எப்பொழுது வரும் என கைவிரலை மடக்கி மாதங்களையும், நாள்களையும் கணக்குக் கூட்டிக்கொண்டேயிருப்போம் நண்பர்களுடன். இந்தப் பண்டிகைகள் வரும்போது, நல்ல உணவும், நிறையப் பலகாரங்களும், புத்தாடையும் கிடைக்கும் என்பது எங்களுக்கெல்லாம் குஷியான விஷயம்தான்.

Advertisment

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி எங்களைப் படுகுஷியாக்கும் விஷயங்கள் வேறு சில உண்டு. அவை ஓணத்திற்கு ஊஞ்சலாடுவது, பொங்கலுக்கு மாடுவிரட்டு, தீபாவளிக்குப் பட்டாசு வெடித்தல், கிறிஸ்மஸ்சுக்கு குடில் கட்டுதல் ஆகியனவாகும். இவையெல்லாம் எங்களுக்குப் பலவகைப் பலகாரங்களை விடவும், புத்தம் புதிய ஆடைகளை விடவும் பேரானந்தத்தைத் தருபவை. மட்டுமின்றி நம் நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் மறுதலிப்பதும் இவையேயாகும்.

ஆனால் இவற்றையெல்லாம் ஒவ்வொரு காரணத்தைக் கூறி கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டே வருகின்றனர் நமது அரசாங்கமும் அதிகாரிகளும். அவற்றில் முன்னணியில் நிற்பது தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கக் கூடாது என்பது. ஒவ்வொரு பண்டிகைக்கும் காலாகாலமாக ஒரு விளையாட்டு அல்லது ஒரு பொழுது போக்குக் கடைபிடிப்பது, அந்தந்த பண்டிகையின் முக்கியத்துவத்தையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துவதற்காகும்.

அந்த வகையில் தீபாவளியென்றால் பட்டாசு வெடிப்பது என்பது மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்த ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளாக, பட்டாசு வெடிப்பதினால் சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடுவிளையும் என்பதை காரணம்காட்டி, பட்டாசு வெடிப்பதை தடுப்பதற்குப் பல்வேறு விதமான கெடுபிடிகளைச் செய்து வருகின்றனர். ஒரு தீபாவளிப் பண்டிகையை மட்டும் நம்பி, பட்டாசு உற்பத்தியில் சிவகாசி உள்ளிட்ட எத்தனையோ இடத்தில், எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை நிலைநாட்டியுள்ளனர் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

இன்று நமது நாடுமுழுவதும் ஒரு முறை பயன் படுத்தும் பிளாஸ்டிக்கினால் ஏற்பட்டிருக்கும் பெரும் தீங்கு என்பது, சுற்றுச்சூழல் மாசுபடுதலை எங்கோ கொண்டு சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் ஒரு விவசாயி வளர்த்து வந்த, ஒரு பசுவின் வயிற்றிலிருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அறுவைசிகிச்சை மூலம் கால்நடை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் பிளாஸ்டிக் பயன்பாட்டின் கொடூரத்தை நமக்கெல்லாம் ஓர் எச்சரிக்கையாக உணர்த்துகிறது.

இதைபோன்ற ஒரு கொடூரமான மாசுபடுதல் ஆண்டுக்கு ஒரு நாள் பட்டாசு வெடிப்பதினால் ஏற்படப் போவதில்லை. அதனால் ஒரு நாள் பட்டாசு வெடிப்பதற்கு இவ்வளவு பெரிய கட்டுப்பாடுகளும் தடைகளும் தேவையில்லை.

அதே நேரம் இந்த ஆண்டு தீபாவளிக்கு மட்டும் டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்வதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணைத்துள்ளது. அதோடு குறைந்தது ரூ.700 கோடிக்கு விற்பனையாகும் என்ற எதிர்ப்பார்ப்பிலும் அரசு உள்ளது. அதனால் “சரியான நேரத்திற்கு டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும். தேவையான அளவு ஸ்டாக் வைத்துக் கொள்ள வேண்டும். மது வாங்க வருபவர்களை சரக்கு இல்லை எனத் திருப்பி அனுப்பக் கூடாது. டாஸ்மாக் பணியாளர்கள் யவரும் விடுமுறை எடுக்கக் கூடாது” என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பண்டிகைகளின் பண்பாட்டுக் கூறுகளான, மக்களுக்கு எவ்விதத் தீங்குகளையும் ஏற்படுத்தாத, அவர்களுக்கு மனமகிழ்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தக் கூடிய விளையாட்டுகளுக்கும் பொழுதுபோக்குகளுக்கும், பெரும் தடைகளையும், கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துவிட்டு, டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து, இத்தனை கோடிக்கு விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணைத்திருப்பது எந்த வகையில் நியாயமானது?

அரசாங்கம் ஒரு விசயத்திற்கு இலக்கு நிர்ணைக்கிறது என்றால் அது ஏதேனும் ஒரு விதத்தில் மக்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் தீபாவளிக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணைத்திருப்பது எந்த வகையில் மக்களுக்கு பயனுடையதாக இருக்கும்? இத்தனை கோடிக்கு மது குடிப்பவர்களால், அந்த மகிழ்ச்சிகரமான நாளில் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? இந்த குடிகாரர்களால் எத்தனை சாலை விபத்துகள்? எத்தனை சண்டை சச்சரவுகள்? எத்தனை எத்தனை குடும்பங்களில் குழப்பங்கள்? வீட்டில் ஆக்கி வைத்த உணவை நிம்மதியாக உண்ண விடாமல் அடித்து நொறுக்கும் கொடுமை, ஏற்றி வைத்த தீபத்தை எரிய விடாமல் தூக்கி எறியும் தீங்கு, தனது நிம்மதியையும் கெடுத்து, குடும்பத்தின் அமைதியையும் இழக்க வைக்கும் கொடூரம், இவையெல்லாம் அரங்கேறும் அலங்கோலமான நாளாக அல்லவா தீபாவளி திருநாள் மாறிவிடும்?

மேலும் படிக்க : ட்ரைக்லோசன் பயங்கரம் – கை கழுவும் சோப்பிலும் எச்சரிக்கை தேவை

இத்தனை கொடூரங்களையும், இந்த மது விற்பனைக்கு இலக்கு நிர்ணைக்கும் ஆட்சியாளர்கள் ஒரு நிமிடமேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இப்படிப்பட்ட அநியாயங்களைப் பண்டிகைகளின் எந்தப் பண்பாட்டுக் கூறுக்குள் அடக்குவதற்கு முடியும்? இத்தனை அநீதிகளையும் அக்கிரமங்களையும் அரங்கேற்றும் போதைப் பழக்கத்தை இந்த மண்ணிலிருந்து வேரும் வேரடி மண்ணும் இல்லாமலாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த காமராஜர், தனது ஆட்சி காலத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப் படுத்தினார் என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் சிறிதேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதனால் குறைந்த பட்சம் இப்படிப்பட்ட பண்டிகை நாள்களிலாவது இந்த டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து, பண்டிகைகளின் பண்பாட்டுக் கூறுகளுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும். அதோடு குடிமகன்களின் குடும்பங்களில் தீபாவளி தீபம் எவ்விதத் தீங்குகளுமின்றி ஜொலிக்கச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் பண்டிகைகளின் பண்பாட்டுக் கூறுகள் இம்மண்ணின் அடையாளமாகும்.

முனைவர் கமல. செல்வராஜ்

அருமனை

அழைக்க: 9443559841

அணுக: drkamalaru@gmail.com

Diwali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment