பெண்களின் மனநிலையில் மாதவிடாய் மாற்றம் ஏற்படுத்துமா? பிரச்சனைகளும், தீர்வுகளும்

90%-95% பெண்கள் இதை ஓரளவுக்கு பழக்கத்தில் கட்டுப்படுத்திக்கொண்டு சமாளித்துவிடுகின்றனர்.

ராஜலட்சுமி

பெண்களின் உடல் இயக்க ரீதியாக பலவித மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாதவிடாய்ச் சக்கரத்தில் இரண்டு பிரதான ஹார்மோன்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த ஹார்மோன்களின் சமநிலை குறைவால் பலவித மருத்துவ ரீதியிலான சிக்கல்கள் ஏற்படுகின்றன. தங்கள் நலவாழ்வில் நாட்டம் குறைந்து போதல், மனநிலையில் மாற்றம், மனத்தளர்ச்சி ஆகியவை உண்டாகும்.

மாதவிலக்கு ஆவதற்கு முன்பும்கூட பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது பெரும்பாலான பெண்களுக்கேகூடத் தெரியாது. உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களை Pre Menstural Syndrome என்பார்கள். தலைவலி, கால் வலி மற்றும் வீக்கம், அடிவயிற்றில் வலி, அதிக பசி, அலர்ஜி/சளி ஏற்படுவது, பருக்கள், குடல் உபாதை, முதுகு வலி, படபடப்பு, அரிப்பு, அதிக வியர்வை போன்ற மாற்றங்களும் நேரலாம்.

விளைவுகள்

சில பெண்களுக்கு மாதவிடாய் முன் நரம்பிலும், ரத்த ஓட்டத்திலும் குழப்பம் (மோலிமென்) ஏற்படுவதால் நரம்பு முறுக்கேறி, கணவனிடத்திலும், குழந்தைகளிடத்திலும், குடும்பத்தில் உள்ளவர்களிடமும் கோபம், எரிச்சல்படுகிறார்கள், அவர்கள் சுபாவமே கடுகடுப்பாகிவிடும். குழப்பமான மனநிலையில் அவர்கள் இருக்கலாம்.

தலைவலி, மார்பக வலி, அஜீரணப் பிரச்சினைகள், வயிறு ஊதுதல், கால் வீக்கம், உடல் வீக்கம் ஏற்படலாம். உணர்ச்சிவசப்படுதல், கோபம், அமைதியற்ற தன்மை, அழுகை, மறதி ஆகியவையும் ஏற்படும். 30 வயதைத் தாண்டிய பெண்களுக்கு ஏற்படும். இந்த பொதுவான விளைவுகளைத் தவிர, படபடப்பு, பரபரப்பாக அல்லது மந்தமாக இருத்தல், உடல் சோர்வடைவது போன்ற உணர்வுகள், உற்சாகமின்மை, உடல் எடை அதிகரித்தல், தலைமுடி உதிர்தல், ஆகியவை உண்டாகும்.

எவ்வாறு கையாள்வது?

90%-95% பெண்கள் இதை ஓரளவுக்கு பழக்கத்தில் கட்டுப்படுத்திக்கொண்டு சமாளித்துவிடுகின்றனர். மீதமிருக்கும் பெண்களுக்கு இது மிகத் தீவிரமாகவும், சமாளித்துக்கொள்ள முடியாத விஷயமாகவும் ஆகிவிடும். புரிந்துகொள்ளாத கணவன், வேலைப் பளு, வேலைக்குச் சென்று வீட்டிலும் பணிச்சுமை உடைய பெண்கள், இதைச் சமாளிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என மாறி மாறி உணர்வுகள் ஏற்பட்டு மனநிலை பாதிக்கப்படுவதும் உண்டு. சிலர் தற்கொலை முடிவுகளைக்கூட எடுக்கிறார்கள். எனவே பெண்களும் ஆண்களும் இது குறித்த விழிப்புணர்வைப் பெற்று, ஒன்றிணைந்து, மனரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் இதை சமாளிக்க வேண்டும்.

தீர்வு என்ன?

இயற்கை மருத்துவம் எப்போதும் நல்லது, உணவில் முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை, பசலைக் கீரை, பிரண்டை, பாகற்காய், சுண்டைக்காய், முருங்கைக்காய், பப்பாளிப்பழம், அன்னாசிப்பழம், பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்றவற்றைத் தேவையான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, ஏரோபிக் உடற்பயிற்சிகள், யோகா, தியானம் பலன் தரும்.

மேலும், இது மருத்துவ ரீதியான பிரச்சினையும்தான். இதை சரிபடுத்த முடியும். முதலில் கணவர் தன் மனைவியிடம் அனுசரணையாக நடந்துகொள்தல், பிள்ளைகள் அம்மாவுக்கு உதவுதல் பலன் தரும். மருத்துவர்கள் கூறும் மருத்துவ, மனநல ஆலோசனைகளைக் கேட்டு நடக்க வேண்டும். மனையியைத் தாழ்த்திப் பேசுவது, புறக்கணிப்பது, குறைகூறுவது, பணிச் சுமையை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதைத் தவிர்த்து, அன்பாகவும், அனுசரணையாகவும் நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு இருந்தால், பெரிய அளவில் ஏதாவது கோளாறு இருந்தால் தவிர மருத்துவ சிகிச்சைக்கு அவசியமே இருக்காது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close