உணவை புறக்கணிப்பவரா நீங்கள்? இந்த விவரங்கள் உங்களுக்கானதே.

பிஸியான வாழ்க்கையில் உணவைக் கோட்டை விடுப்பவர்களுக்கு அல்ஸர் வருவது உறுதி. அல்ஸர் மற்றும் அதன் பின்னணியைப் பற்றி மருத்துவர்கள் கூறும் தகவல் என்ன.

லட்சியத்திற்கும் பணத்திற்காகவும் தேய்ந்த இயந்திரம் போல தினமும் ஓடிக்கொண்டிருக்கிறது பலரின் வாழ்க்கை. இப்படி ஒரு வாழ்க்கை வாழும் பலருக்கு ஏற்படும் உடல்நலக்குறைவில் ஒன்றுதான் “அல்ஸர்”. இதனை வயிற்றுப்புண் அல்லது குடல் புண் என்றும் குறிப்பிடலாம்.

இந்த நோய் பெரும்பாலும் உணவு அருந்துவதில் ஒழுங்கற்ற பழக்கம் கொண்டிருந்தால் உருவாகும். உழைப்பும், சம்பாத்தியமும் எவ்வளவு முக்கியமோ அதே போல வயிற்றுக்கு அளிக்கும் உணவும் முக்கியம். உணவு இல்லையேல் மனிதனின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். அதன் முதல் கட்டமாக உடல் உபாதைகள் அதன் அறிகுறிகளை காட்ட துவங்கும். அல்ஸருக்கும் அவ்வாறு அறிகுறிகள் மற்றும் மருத்துவ தீர்வும் உண்டு.

அல்ஸர் என்றால் என்ன:

உணவு பாதையில் உள்ள உணவு குழாய் மற்றும் இரைப்பைப் போன்றவற்றில் ஏற்படும் திசுக்கள் சிதைவை அல்ஸர் என்று அழைக்கின்றனர். அதாவது வயிறு மற்றும் குடல்களின் உள்ளே திசுக்களால் சுவர் போல் உருவாகி இருக்கும். சீரான உணவு அல்லது நேரத்திற்கு உணவு அருந்தாமல் இருக்கையில் வயிற்றின் உள்ளே ஆசிட் உருவாகும். அந்த ஆசிட் இந்தச் சுவர் போன்ற திசுக்களை பாதிக்கும். அந்த பாதிப்பின்போது வயிற்றில் புண் ஏற்படும். இதனை அலட்சியப்படுத்தினால், குடலில் ஓட்டை உருவாகி இரத்த கசிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமே ஆனால், அறுவை சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும் என்றும் கூறுகின்றனர்.

அல்ஸர் உருவாகும் முக்கிய சில காரணங்கள்:

1. தவறான உணவு பழக்கவழக்கங்கள் .
2. மதுவகைகள், புகைபிடித்தல், வெற்றிலைபாக்கு, புகையிலை.
3. அதிக ஆற்றல் கொண்ட ஆங்கில மருந்துகளை அடிக்கடி சாப்பிடுவது.
4. மன அழுத்தம்
5. ஐஸ்கிரீம், சாக்லேட், அதிகமாகப் பால் மற்றும் தயிர், மோர் சாப்பிடுவது.
6. புளிப்பு தன்மையுள்ள பழங்களை அதிகளவில் சாப்பிடுவது(திராட்சை, கமலா, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலும்பிச்சை, பப்பாளி, ஊறுகாய், அன்னாசி)

இவற்றில் பலவற்றை தவிர்த்தாலே அல்சர் ஏற்படுவதைத் தடுக்க முடியும். மேலும் உடம்பில் ரத்தத்தில் ஹைட்ரஜன் அயணிகளின் அளவு 7க்கும் கீழே குறைந்தால் உடம்பு புளிப்பு தன்மையடையும். அதிகப்படியான புளிப்பு மலம், சிறுநீர் வழியாக வெளியேறி விடும். இரைப்பையிலும் நிறையச் சேர்ந்து விடும். புளிப்புத்தன்மை இரைப்பையில் அதிகமானால் அதன் உட்சுவரில் அரிப்பு ஏற்பட்டு புண் உண்டாகி விடும்.

இந்த நோயின் அறிகுறிகள் என்ன?

வயிற்றில் எரிச்சல், உன்னுவதில் கடினம், இரைப்பைப் பகுதியில் வலி, சாப்பிடும் முன்போ, பின்போ அல்லது சாப்பிடும் போது வலி ஏற்படுவது, புளித்த ஏப்பம், நெஞ்சுக்குள் வலி, உணவு உண்ட பிறகு வாந்தி ஆகியவை இதன் அறிகுறிகள். இவற்றில் எதை உணர்ந்தாலும் எச்சரிக்கையோடு சாப்பாட்டு வழக்கத்தைச் சீர் செய்வது அவசியம்.

அல்சருக்கான சிகிச்சை முறைகள்:

அல்சர் இருப்பது உறுதியானால், முதலில் பாதிப்பின் அளவை அறிவது அவசியம். பின்னர், மருத்துவர்களை உடனடியாக நாடி இதற்காக மருத்துவத்தைத் துவங்குவதே சரியான முடிவு. அல்ஸர் நோய்க்கு மருத்துவத்தில் எவ்வித தடையுமில்லை. எந்த விதமான முறையிலும் மருந்துகள் அருந்தலாம். ஆங்கில மருத்துவம், ஆயுர்வேத, சித்த மருத்துவம் அல்லது ஹோமியோபதி என்று எவ்வித மருத்துவமும் எடுத்துக் கொள்ளலாம்.

வீட்டு வைத்தியம்:

ஆரம்ப நிலையில் உள்ள அல்ஸர் குணப்படுத்துவது மிகவும் எளிது. வீட்டிலிருந்தபடி மூலிகைகள் கொண்டும் குணப்படுத்தலாம். மிகவும் எளிதாகக் கிடைக்கும் வேப்பிலை, குப்பை மேனி, வெந்தியம், அறுகம்புல், கடுக்காய், அத்தியிலை, நெல்லி, கற்றாழை, கோஸ், மிளகு, சுக்கு, புதினா, கொத்தமல்லி, நன்னாரி மற்றும் மணத்தக்காளி, சுண்டைக்காய், பெருங்காயம், மஞ்சள், வசம்பு, சீரகம், வாழைத் தண்டு, மாதுளை போன்றவற்றைக் கொண்டு குணப்படுத்தலாம். இவற்றைச் சேகரித்து பதப்படுத்தியும் உண்ணலாம் அல்லது காய வைத்து தூள் செய்தும் அருந்தலாம். தினமும் சிறிது அருந்தி வந்தால் விரைவில் அல்ஸர் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

குறிப்பாக எந்த மருத்துவ முறையைப் பின்பற்றுகிறோமோ அதே முறைகள் உள்ள மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று சிகிச்சையைத் தொடர்ந்தால் பிற்காலத்திலும் அல்ஸர் வரும் வாய்ப்பைக் குறைத்துக்கொள்ளலாம்.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.

×Close
×Close