இந்தியப் புராணவியலில் ஆர்வம் கொண்ட இங்கிலாந்து கதை சொல்லி எமிலி

எனக்குப் பிடித்தமான பகுதிகளைத் தேர்வுசெய்வேன். அவற்றை ஒருங்கிணைத்து பிறகு என்னுடைய பாணிக்கு மாற்றிக்கொள்வேன்.

By: October 27, 2019, 10:14:55 AM

Ishita Sengupta

கெண்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற எமிலி ஹேனசி, கதைசொல்லும் திறனுக்காக, தன் ஆசிரியரான வாயு நாயுடுவுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளார். இந்த பேட்டியில், கதைசொல்லிகள், தன் கதைசொல்லும்திறனில் நாயுடுவின் தாக்கம், தான் எப்படி கதைகளை தேர்வுசெய்கிறேன் என்பன குறித்துப் பேசுகிறார். பேட்டியின் சாரம்:

அண்மையில் டெல்லி, சண்டெர் நர்சரியில் நடந்துமுடிந்த மூன்று நாள் கதாகர் விழாவில், ஆர்வமான கதைரசிகர்களைக் கவர்ந்து இழுத்தனர், ஒரு படை கதைசொல்லிகள். அவர்களில் ஒருவர், பிரிட்டனின் கும்பரியாவைச் சேர்ந்த எமிலி ஹேனசி. மகாபாரதத்தின் சிகண்டி பழிவாங்கல், காளி உருவெடுத்தல் காட்சிகளை பொருத்தமான படங்களைக் கொண்டும் இரண்டு நாள்கள் தன் கதைசொல்லும் திறனை வெளிப்படுத்தினார். நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு பெண் கடவுளைப் போலவும் முரட்டுத்தனமான சீற்றத்தோடு அரங்கை அதிரவைத்து பேயைப்போலவும் மாறிப்போனார். அவருடைய நிகழ்த்துதல் முடிந்தபின்னர் மீண்டும் இன்னொரு கதையைக் கூறச்சொல்லி எல்லா குழந்தைகளும் அவரிடம் கேட்டனர். ஆசையோடு எமிலியுடன் படமும் எடுத்துக்கொண்டனர்.

நிகழ்த்து கலைஞராகவும் ஒரு கதை சொல்லி இருக்கவேண்டுமா?

அப்படி இருக்கவேண்டும் என்பதில்லை. கதைசொல்லலில் பல விதமான பாணிகள் இருக்கின்றன. அரங்கத்தில் கிடைக்கும் வெளியையும் ஏராளமான கலைநுட்பங்களையும் பயன்படுத்தி, சிறப்பாக கதையாடல் திறனை சிலர் வெளிப்படுத்துவார்கள்; வேறு சிலரோ ஒரு பப்பிலோ நெருப்புசூழவோ அமைந்திருக்கும் இடத்திலும் அனாயசமான கதைகளைச் சொல்வார்கள். எப்படியாக இருந்தாலும் நாங்கள் அனைவருமே கதைசொல்லிகள்; எப்போதும் கதைகளைச் சொல்லிவருகிறோம்.

இந்திய புராணியவியலுக்குள் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?

பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன்னர், நான் நேபாளத்தில் சிறிதுகாலம் தங்கியிருந்தேன். கோயில்கள், ஆண். பெண் கடவுளர்கள் எப்படி அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்கிறார்கள் என்பவையெல்லாம் என்னை மிகவும் ஈர்த்தன. பிரிட்டனில் இப்படியெல்லாம் இல்லை. உயிர்ப்போடு இருக்கும் புராணிகத்தோடு எங்கள் வாழ்க்கை பிணைக்கப்பட்டிருக்கவில்லை என்பதால், எனக்கு ஆர்வம் அதிகமானது. வாயுவுடன் பணியாற்றியது இந்தியக் கதைகள் சிலவற்றுடன் என்னை நெருங்கச்செய்தது. கதைசொல்லும் பலவித மரபினர் குறித்த ஆய்வுக்காக, 2008-ல் நான் இந்தியாவுக்கு வந்தேன்; தமிழ்நாட்டிலுள்ள கட்டைக்கூத்துப் பள்ளியில் சிறிது காலம் தங்கி, பயின்றேன். கதைசொல்வது எப்படி என்பதை குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொண்டேன். வழக்கமாக, ராமாயணம், மகாபாரதத்தில் இருந்துதான் அவர்கள் கதைகளைச் சொல்வார்கள். இப்போது நான் சொல்லும் ஏராளமான கதைகள் அவர்களின் தாக்கத்தால் வந்தவைதான்.

நிகழ்த்துதலைத் தொடங்குவதற்கு முன்னதாக, சுயவிளக்கத்தைப் போல, இது உங்களின் பொருள்விளக்கமே என்பதாகக் குறிப்பிட்டீர்களே…!

அதை இங்கு சொல்வது அவசியம் என உணர்ந்தேன். பிரிட்டனில், இப்படியான அறிமுகம் செய்யமாட்டேன். இங்கு, இந்திய ரசிகர்கள் முன்பாக, இந்திய அளவில் நன்கறியப்பட்ட சில கதைகளைச் சொல்கிறேன், அல்லவா? சில அம்சங்களை நான் விட்டிருப்பேன், சிலவற்றை வேண்டாம் என்று தவிர்த்திருப்பேன். இப்படி மாற்றங்கள் இருக்கும். எனவே, இது, என்னுடைய பொழிப்புரை என்பதை விளக்கவேண்டியது தேவைதான்.

உங்களுக்கான கதையை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

ஒரு கதையில் எனக்கு ஆர்வம் வந்துவிட்டால், முடிந்தஅளவு அதன் வெவ்வேறு விதங்களைக் கண்டறிய முயற்சிசெய்வேன். மூலக் கதைக்குப் போவேன்; மற்றவர்கள் எப்படி செய்திருக்கிறார்கள் என்று பார்த்து, பிறகு எனக்குப் பிடித்தமான பகுதிகளைத் தேர்வுசெய்வேன். அவற்றை ஒருங்கிணைத்து பிறகு என்னுடைய பாணிக்கு மாற்றிக்கொள்வேன்.

பெண்ணாக இருப்பது உங்கள் கதைகளை அல்லது கதைசொல்லும் பாணியைத் தெரிவுசெய்வதில் உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?

ஆம், அதிகமாகவே! குறிப்பாக, இந்தியக் கதைகளில்! காளி, பார்வதி, அம்மன் ஆகிய கடவுளர் பாத்திரங்கள், ஆச்சர்யமளிக்கக்கூடியது மட்டுமன்றி உறுதியானவையாகவும் இருக்கின்றன. இப்படியானவை இந்த உலகிற்குத் தேவை. நமக்கு இந்தக் கதைகள் தேவையானவை.

தமிழில்: இரா.தமிழ்க்கனல்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Emily hennessey from the uk on her interest in indian mythology

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X