பிரின்ஸ் ஹாரி மற்றும் மேகன் திருமணத்தைப் பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? இதைப் படியுங்கள்

திருமணம் என்றாலே பல ஏற்பாடுகளில் குடும்பத்தினர் தீவிரமாக வேலைப்பார்க்கத் தொடங்கி விடுவார்கள். இந்திய திருமணங்களில் கல்யாண சாப்பாடு எவ்வளவு முக்கியமோ அது போலவே வெளிநாட்டினரின் திருமணங்களில் கேக்.

ஆங்கிலேயர்களின் திருமணங்களில் சர்ச், மோதிரம் மற்றும் ஆடைகளுக்கு முக்கியத்துவம் அதிகம். ஆனால் அதையெல்லாம் ஓவர்டேக் செய்யும் அளவிற்கு உருவாகியுள்ள கேக் கலாச்சாரம். அவர்களின் திருமணங்களில் கேக்கின் அழகு, அளவு, சுவை பொறுத்தே குடும்பத்தினரின் கௌரவம் காக்கப்படுகிறது. மோதிரங்களை மாற்றிக்கொண்டு திருமணம் முடிந்த உடனே மொத்த கூட்டமும் எதிர்பார்ப்பது கேக் தான். அவர் அவர்கள் தங்களின் குடும்பச் சூழலுக்கு ஏற்ப கேக்கின் அளவு மற்றும் ஃப்லேவரை தேர்வு செய்கின்றனர். பொதுமக்கள் குடும்பங்களின் திருமணத்துக்கே கேக் இவ்வளவு முக்கியம் என்றால் ராயல் திருமணத்தில் கேக் எவ்வளவு முக்கியம்?

royal wedding

கடந்த மே 19ம் தேதி இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கிள் திருமணம் நடைபெற்றது. உலகமே வியந்து பார்க்கும் ராணி வீட்டுக் கல்யாணத்தில் கேக் மட்டும் முக்கியத்துவம் பெறாமல் போகுமா என்ன. அரண்மனை கேக் தயாரிப்பாளர்களிடமே இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

உள்ளிருந்த கேக் எலுமிச்சை பழம் சுவை கொண்டது, கேக்குகள் நடுவே லெமன் கர்டு என்று கூறப்படும் எலுமிச்சை சுவை கொண்ட வெண்ணெய் பூசப்பட்டது. பின்னர் வெளியே எல்டர் ஃப்லவர் என்று கூறப்படும் பூவின் எசன்ஸ் ஊற்றிப் பட்டர் ஐசிங் பூசப்பட்டது. இந்த கேக் செய்தது, க்ளேர் தக்.

இந்த கேக் செய்ய தேவைப்பட்ட மூலப்பொருட்கள்:

200 அமல்ஃபி எலுமிச்சை பழங்கள்
500 ஆர்கேனிக் முட்டைகள்
20 கிலோ வெண்ணெய்
20 கிலோ மைதா மாவு
20 கிலோ சர்க்கரை
10 பாட்டிகள் எல்டர் ஃப்லவர் எசன்ஸ்

என்ன வாசகர்களே, கேட்கும்போதே மூச்சு திணறுகிறதா? இது மட்டுமா! மேகனின் ஆடைக்கு மேட்ச் ஆகும் வகையில், வெள்ளை நிறத்தில், வெள்ளை பூக்களால் சுற்றிஅலங்கரிக்கப்பட்டது. இந்த கேக் டிசைன் ஐடியா, 2011ம் ஆண்டு நடைபெற்ற அரசவை திருமணத்தை அடிப்படையாக வைத்துத் தேர்வு செய்யப்பட்டது.

அடுத்தது ஆடை:

ராணி அம்மாவின் இல்லத் திருமணம் என்றாலே முதலில் கண்களுக்கு தெரிவது மணப்பெண் யார் என்பதும், அவர் யாரைத் திருமணம் செய்கிறார் என்பதும் தான். ஆனால் திருமணம் நெருங்கும் நேரத்தில் மணப்பெண் என்ன கவுன் அணிவார் என்ற யோசனையில் இறங்கிவிடுவோம். திருமணம் முடிந்து ஒரு வாரம் அல்ல ஒரு மாதத்திற்கு பிறகும், இளவரசி அணிந்திருந்த ஆடைபற்றி மட்டும் தான் பேச்சு.

மேகன் மார்கிள் ஆடை பற்றி தெரியுமா? கூறுகிறேன் கேளுங்கள்

மணப்பெண் மேகன் மார்கிள் திருமண ஆடையை உருவாக்கியது அரசவை குடும்பத்தின் ஆடை அலங்கார நிபுணர் மிஸ். வெயிட் கெல்லர். திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன் மணப்பெண் மேகன் அவரைச் சந்தித்து பல முறை ஆலோசனை நடத்தினார். 1952ம் ஆண்டின் ஆடைகளின் வடிவமைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் மேகனின் கவுன் வடிவமைக்கப்பட்டது.

இந்த ஆடை தயாரிக்கும் துணி யூரோப்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. மெல்லிய பட்டாடையை இரண்டடுக்காக வைத்துத் தைத்துள்ளனர். மேகனின் தோல் பகுதிகள் வரை நீடிக்கும் நெக் டிசைன், கைகளில் ஸ்லீவ்ஸ் அளவு முக்கால் அளவு வரை இருக்கும், இடையின் வளைவில் அழகு கூட்ட வளைவுகள் அளித்து தையல் போடப்பட்டது. பின்னால் நீண்டு தொடரும் ஆடை, வட்ட வடிவில் ஃப்ரில் வைத்துத் தைக்கப்பட்டது.

முக்கியமாக தலைப்பகுதியில் இருந்து நீளும், வெய்ல் பற்றிக் கூறியே ஆக வேண்டும். நெட் போன்று தோற்றம் அளிக்கும் வெய்ல், மிகுந்த மெல்லிய கனமற்ற துணியால் உருவானது. இதில் 53 காமன்வெல்த் நாடுகளின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் பூக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காமன்வெல்த் நாடுகளின் பூக்களையும் தேர்ந்தெடுத்து அதனை வெய்ல் முடிவில் நிபுணர்கள் வைத்து கைகளால் தைத்துள்ளனர்.

5 மீட்டர் நீளம் கொண்ட வெய்ல், டூல் என்று அழைக்கப்படும் சிறந்த பட்டால் தயாரானது. பட்டு நூல் மற்றும் ஆர்கன்ஸா நூலினால் பூக்கள் தைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் தாமரை மலரும் அடங்கும்.

இவ்வாறு கேக் மற்றும் ஆடை மட்டுமின்றி, கூந்தல் அலங்காரம், மேக் அப், நகைகள், கைகளில் இருக்கும் பூங்கொத்து என்று அனைத்துமே ஸ்பெஷல் தான். அதிலும் திருமணம் முடிந்தவுடன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அவர்கள் புறப்பட்ட கார் மிகவும் அரியது.

1968ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஜாகுவார் கார் மாடல் அது. அதோடு இந்த கார் முழுக்க முழுக்க மின்சாரம் மூலம் இயங்கும் என்று சொன்னால் நம்புங்கள். நீல நிறத்திலான ஜாகுவார் ஈ மாடல் காரில் புதுமண ஜோடி புறப்பட்டு சென்றனர்.

லண்டன் அரசு குடும்பத்தின் திருமணங்கள் ஏற்பாடுகள் அனைத்தும் ஏன் இவ்வளவு முக்கியம் மற்றும் பிரபலம் என்று இப்போது புரிகிறதா?

×Close
×Close