Advertisment

ஃபேஸ்புக் மாயவலை: உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து விட்டீர்களா?

இப்போதெல்லாம் மாதம் சுமார் 30 பெண்கள் சராசரியாக இணையதள மோசடி புகார் செய்வதாக சென்னை மாநகர ‘ஸீரோ’ குற்றப்பிரிவு மூலம் அறிய முடிகிறது!

author-image
WebDesk
New Update
facebook

Facebook risk: Have you ensured your safety

கணினி யுகத்தின் இணையற்ற கண்டுபிடிப்பான இணையம்  என்ற  இன்டர்நெட்,  தகவல் தொடர்பு சாதனங்களில்  முக்கிய பங்கு வகிக்கிறது.  இதன் பிள்ளைகளான மின்னஞ்சல், முகநூல்,  வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் கண்டுபிடிப்பின் பலனையே மாற்றிவிட்டது.

Advertisment

நட்புக்கும் உறவுக்கும் தொழில் வணிக தொடர்புக்கும், வேலை வாய்ப்புக்கும் வெளித்  தொடர்புக்கும் ஏதுவான இந்த சமூக வலைத்தளங்கள் மோசடி கும்பல்களிடம் சிக்கி  சமூக விரோத தளங்கள் ஆகிவிடுமோ என்று கவலைப்படும் வகையில் தவறான பொய்யான தகவல் அவதூறு செய்திகள்  மற்றும் ஆபாச படங்களை தாங்கி நிற்கின்றன. தனிமனித வக்கிரத்தை அரங்கேற்ற தளம் கிடைக்கமால் கவலைப்பட்ட பலரை இப்போது சமூக வலைத்தளங்கள் சந்தோஷப்படுத்தி வருகின்றன.

இதனால் உற்சாகம் பெற்ற வக்கிரர்கள் பெண்களை குறிவைத்து தாக்கும் கருவியாக அவற்றை வடிவமைத்துக் கொண்டார்கள். நட்பு வலை வீசி, நயந்து பேசி, கிடைக்கும் தகவல்களை திரித்தும், படங்களில் ஒட்டு, வெட்டு வேலைகள் செய்தும் பெண்களை அசிங்கமாக சித்தரிக்கின்றனர். அதற்கு அஞ்சும் பெண்களை மிரட்டி பணிய வைக்கவும் அவ்வப்போது பணம் பறிக்கவும் செய்கின்றனர்.

இந்திய இளந்தலைமுறையினர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் முதன்மையானதாக முகநூல் உள்ளது. இது காலம்  பார்க்காமல்  யாவரும் நட்பு கொண்டாடும் நிலைக்களமாக உள்ளது. புதிய தொடர்புகள், பழைய உறவுகள் யாவும் அரங்கேறும் தளமிது. ஆனாலும், ஆனந்தம் இருக்குமிடத்தில்  தான்  ஆபத்தும் இருக்கிறது என்பது பலருக்கு புரிவதில்லை.

நீருக்குள் மறைந்திருக்கும் முதலை தாகம் தீர்க்க கரையோரம் வரும் மானை கவ்வியிழுப்பது போல் ‘ஹேக்கிங்’ மற்றும் ‘சூபிஷ்சிங்’ என்னும் நூதன முறைகள் மூலம் சிலரது வாழ்க்கையை சிதைக்கும் கொடியவர்கள் இந்த இணைய  உலகில் உலா வருகின்றனர்.

இணைய குறும்பர்களான ‘ஹேக்கர்’கள் நமது முக நூலில் இருக்கும் படங்களை கைப்பற்றுவதோடு அதை அவர்கள் மனப்பாங்குக்கேற்ப வக்கிரமாக மார்பிங் செய்து வெளியிட்டுவிடுகின்றனர்.

இதே மாதிரி  பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலுள்ள விடுதியில் தங்கி பொறியியல் படிப்பு படித்து வந்த மாணவி ரக்‌ஷா சர்மா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இருவர் இணையதளத்தில் பதிவுசெய்த கருத்துக்களால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவங்கள் தரும் எச்சரிக்கை என்னவென்றால் பெண்கள் பெயரில் திறக்கப்படும் முகநூல் பற்றிய எச்சரிக்கை தேவை என்பதுதான். போலி கணக்குகள் திறப்பவர்கள் பெரும்பாலும் நமீதா, பூஜா என்று கவர்ச்சிகரமான பெயர்களிலேயே தொடங்குவார்கள். இயற்கை காட்சிகள் அல்லது நடிகைகள் படங்களை ப்ரொஃபைல் பிக்சராக வைத்திருப்பார்கள். அவர்கள் கொடுக்கும் ‘கமெண்ட’ எல்லாம் சுருக்கமாக சுவையாக இருக்கும்.

அவரது புகைப்பட தொகுதி (காலரி)யை அவசியம் கவனிக்க வேண்டும். உண்மையிலேயே ஒரு பெண்ணாக இருந்தால் இரண்டு மூன்று புகைப்படமாவது இருக்கும். ஆனால், போலிகள் தமக்கு கையில் கிடைத்த ஒன்றையே போட்டு ஒப்பேற்றுவார்கள். மேலும் ஆண்கள் அனுப்பும் நட்பு அழைப்பை (ஃபிரண்ட் ரெக்வெஸ்ட்) உடனே ஏற்றுக் கொண்டால் அவர்கள் சந்தேகமின்றி போலிகள் என உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

முகநூல் நட்புக்கு ஆயுள் குறைவு. அதை கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் கொள்ளும் நட்பல்ல என்பதால் எளிதில் முறிந்துவிடும். 

முகநூலில் இருப்பவர்கள் 52%க்கும் மேற்பட்டோருக்கு 100 முதல் 500 வரை நண்பர்கள் உள்ளனர். 23% பேர், 500 முதல் 1000 வரையிலான நண்பர்களை கொண்டிருக்கின்றனர் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அண்டை வீட்டுக்காரரிடம் அன்பு செலுத்தும் பண்பையும் பக்குவத்தையும் இழந்துவிட்ட இன்றைய இளைய தலைமுறை பொழுதுபோக்குக்காக இப்படி போலி நட்பு கொண்டாடி வருகிறது. முகநூலார்களில் 87% பேர் முன்பின் அறிமுகம் இல்லாத எவ்விதத்திலும் தொடர்பில்லாத நபர்களிடம் இருந்து வரும் நட்பு அழைப்பை கூட ஏற்றுக் கொள்கிறார்கள்.

இவ்வாறு அறிமுகமற்றவர்களுடன் உறவாடும் போது தான் அபாயம் நெருங்குகிறது. சர்ச்சைக்குரிய படங்களை கைப்பற்றி மிரட்டவும், தவறாக  பயன்படுத்தவும் நாமே வழியமைத்துக் கொடுப்பதாகிறது. முகநூல் மோசடிப் பேர்வழிகளால் பெண்களுக்கே பெரிதும் பாதிப்பு. அவர்கள் நிறைய பேர் தங்களின் குறிச்சொல்லை (பாஸ்வேர்டு) நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். முகநூலில் இருக்கும் தற்குறிப்பு (ப்ரொஃபைல்) பக்கத்தை பிறர் காணும் வகையில் வைக்கக்கூடாது. பதிவேற்றம் படங்களும் அனைவரின் பார்வைக்கும் செல்வதாக இருக்கக்கூடாது. சமீபத்திய ஆய்வுப்படி 75% பேர் தங்கள் தற்குறிப்பு பக்கத்தை அனைவரும் காணும்படி வைத்துள்ளனர். 68% பேர் தாங்கள் பதிவேற்றும் படங்களை அனைவரும் பார்க்கும்படி திறந்த புத்தகமாக வைத்துள்ளனர் என தெரியவருகிறது.

இந்த விஷயங்களில் நீங்கள் சமர்த்தாக இருந்தாலும். உங்கள் நண்பர்கள் பட்டியல் மூலம் உங்களை நெருங்க முடியும். எனவே தனிப்பட்ட அமைப்பு (பிரைவசி செட்டிங்) ஏற்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.

முகநூலில் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கு மேல் ஒருவர் செலவழிக்கிறார் என்றால் அதற்கு அடிமையாகி விட்டார் என்றே அர்த்தம். 30% க்கும் அதிகமானோர் இப்படி ‘முகநூலில்லாமல் நானில்லை’ என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இவர்களை பிறர் எளிதில் தனது வழிக்கு கொண்டு செல்ல முடியும்.

வேறு வேலையின்றி வீட்டு வேலையில் மட்டுமே இருக்கும் படித்த நடுத்தர பெண்கள் பலர் இப்போது முகநூலுக்கு தங்கள் நேரத்தை  அர்ப்பணிக்கத் தொடங்கிவிட்டதாக ஓர் ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். தொலைக்காட்சியின் இடத்தில் இருந்து நடுத்தர வர்க்க பெண்களை முகநூல் என்னும் இந்த சமூக வலைத்தளப் பிசாசு இழுத்துப் பிடித்து ஆட்டுவிக்க தொடங்கிவிட்டது.

முன்பாவது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 65 மற்றும் 67ன் கீழ் முகநூல் மோசடிப் பேர்வழிகளை தண்டிக்க முடிந்தது. இப்போது அரசியல் பழிவாங்கலுக்கு கருத்து சுதந்திரத்தை தடை செய்யும் விதத்திலும்  இச்சட்டம் பயன்பட்டதாக உச்சநீதிமன்றம் பரிந்துரையின் பேரில் அச்சட்டம் தடை செய்யப்பட்டுவிட்டது.

இப்போதெல்லாம் மாதம் சுமார் 30 பெண்கள் சராசரியாக இணையதள மோசடி புகார் செய்வதாக சென்னை மாநகர ‘ஸீரோ’ குற்றப்பிரிவு மூலம் அறிய முடிகிறது. இதில் பெரும்பான்மை அவதூறு பரப்பும், ஆபாசமாக சித்தரிக்கும் செயல்களை பற்றிய குற்றச்சாட்டுகள் தாம்.

இப்படி பெண்களைப் பற்றி அவதூறு பரப்பும் ஆண்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாகவே  இருக்கின்றனர். முன்பு அத்தகைய நம்பிக்கை மோசடிப் பேர்வழிகள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 66ஏ பாய்ந்தது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்புகள் இருந்தன. தற்போது இச் சட்டப்பிரிவு நீக்கப்பட்டு விட்டால் அதற்கு பதில் தகவல் அதைப் போன்று கடுமையான சட்டப்பிரிவு அல்ல. குறிப்பிட்ட அசிங்கமான வார்த்தைகள் இருந்தால் மட்டுமே இச்சட்டப் பிரிவின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியும்.

இது தவிர வாட்ஸ்அப், மின்னஞ்சல் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்ட தரவுகளைப் பாதுகாப்பு கருதி 90 நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும். அவ்வாறு சேமிக்காமல் தரவுகளை அழித்துவிட்டால்  அது  சட்டவிரோதம் என அறிக்கை வகை செய்யும் புதிய தேசிய வரைவுக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்தது. இது பல குற்ற நடவடிக்கைகளை கண்டறிய உதவும் என கருதப்பட்ட நிலையில் தனிமனித அடிப்படை உரிமையை மீறும் செயல் என்ற விமர்சனம் எழுந்ததால் அது திரும்ப பெறப்பட்டு விட்டது.

எனவே சட்டம் நமது மானத்தை காக்கும் என நம்பி காத்திருக்கமால் முகநூல் பற்றிய விழிப்புணர்வுடன் வேண்டாத அழைப்புகளையும், மோசமான பதிவுகளையும் தவிர்த்து பெண்கள் இந்த தீமையினின்று தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். நமது நட்பு வட்டாரத்தை நிர்ணயிப்பதும் அது நல்ல நட்பு தானா என்று தீர்மானிப்பதும், அதை எதுவரை அனுமதிப்பது என்று முடிவு செய்வதும் அவசியம். பெண்களை மோசமாக சித்தரிப்பதை தடுக்க தகவல் தொழில்நுட்ப சட்டங்கள்  மற்றும்  இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 292, 409, 500, 509 ஆகியவற்றின் கீழும் தண்டிக்க வகை செய்ய வேண்டும்.

த. வளவன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment