சண்டை - மாணவர் சிறுகதை

தங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்தால்தான் விலங்குகள் சண்டையிடும். ஆறறிவு படைச்ச மனுஷன்தான் எல்லாத்துக்கும் கணக்கு வச்சு சண்டை போடுறான்

”சீனு… உனக்குதான் லீவு விட்டாச்சுல்ல… அத்தை வீட்டுக்கு எப்போ கொண்டு விடட்டும்?” என்று கேட்டார் அப்பா.
தொலைக்காட்சி பெட்டி நோக்கி முகத்தை வைத்துக் கொண்டிருந்த சீனு, கோபமாய் அப்பாவைப் பார்த்தான்.
“நான் தான் சொன்னேனில்ல. அவங்க வீட்டுக்கு நான் இனிமே போக மாட்டேன்” என்று கத்தினான்.
அப்பா அவனைக் கெஞ்சும் பார்வையோடு பார்த்தார். “அப்படியெல்லாம் சொல்லாதே டா… ரவி கிட்ட இன்னும் எவ்வளவு நாள் டா சண்டை போடுவ?” என்று கேட்டார்.
“என்னால போக முடியாதுன்னா முடியாது” என்று உரக்க சொல்லி விட்டு, படுக்கையறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டான்.
அப்பாவும், அம்மாவும் சீனுவை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

****
சீனுவும், ரவியும் மாமா-அத்தை பையன்கள் மட்டுமல்ல, ஒரே வயதொத்த நண்பர்களும் கூட. அதனால் வீட்டு விஷேசங்களிலும், விடுமுறை தினங்களிலும் ஒன்றாகதான் இருப்பார்கள். இருவரது வீடுகளும் பத்து மைல் தொலைவில்தான் இருந்தன. அதனால், இருவரும் ஒருவர் வீட்டுக்கு மற்றவர் அடிக்கடி சென்று தங்குவார்கள்.
அப்படிதான் போன காலாண்டு தேர்வில் ரவியின் வீட்டுக்கு சீனு சென்றிருந்தான். அன்றைக்கு இருவரும் விளையாடும்போது, ரவியின் நண்பர்களும் வந்திருந்தார்கள். எல்லோரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார்கள். இரண்டு பேரும் எதிரெதிர் அணிகளில்.
முதலில் சீனுவின் அணி பேட்டிங் செய்தது. அவனுக்கு நன்றாக ஆட தெரியும் என்பதால், கடைசியாக பேட்டிங் செய்ய தீர்மானித்தான். அவனது முறை வந்தது. எதிரணி பந்து வீரன் போட்ட பந்தை தூக்கி அடித்து விட்டு, ரன் ஓட ஆரம்பித்தான். ஒரு ரன்னுடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால், மீண்டும் இரண்டாது ரன்னுக்காக ஓடி கோட்டைத் தொடும்போது பந்து ஸ்டம்பைத் தொட்டுவிட்டது. ஒரு ரன் கூட எடுக்காத சீனு, ரன் அவுட்டானான்.
தான் எந்த ரன்னையும் எடுக்கவில்லை என்பதை ஏற்க சீனுவுக்கு மனமில்லை. “இந்த ஒருவாட்டி டா” என்று கெஞ்சினான். “ஹே… ஹே… அதெல்லாம் முடியாது” என்றான் ரவி. அவனது அணியினரும் அதை ஆமோதித்தனர். சீனு பேட்டை வேகமாகப் பிடுங்கினான். அதில் பேட் ரவியின் வயிற்றில் வேகமாக இடித்தது. நடந்ததை உணர்வதற்குள், ரவி சீனுவைத் தாக்கினான். இருவருக்குள்ளும் சண்டை மூண்டது. நண்பர்கள்தான் விலக்கி விட்டனர்.
ரவியின் நண்பர்களுக்கு முன்னால் தான் அடி வாங்கியதை சீனுவால் ஜீரணிக்கவே முடியவில்லை. உடனடியாக அத்தை வீட்டுக்குச் சென்று, தனது உடைகளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான். அத்தை சமாதானப்படுத்தியும், ரவி மன்னிப்பு கேட்டும் கூட அவனது கோபம் தீரவில்லை.
அது மட்டுமல்ல. அடுத்த சில மாதங்களுக்கு வீட்டு விசேஷங்களிலும் ரவியோடு பேசவில்லை. அரையாண்டு விடுமுறைக்கும் அவன் வீட்டுக்குச் செல்லவில்லை. ரவி சீனு வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்டபோது கூட மனம் இரங்காமல் இருந்தான் சீனு.
பெரியவர்களும் சண்டை தானாக தீரட்டும் என்று விட்டு விட்டனர்.
****
கோடை விடுமுறையில் இந்த முறை மாமாவின் ஊருக்குப் போயிருந்தான் சீனு. மாமாவுக்கு குழந்தை இல்லாததால், சீனு மீது அளவு கடந்த பாசம். சீனுவுக்கும் அவரைப் பிடிக்கும் என்றாலும், அவரது வீட்டில் விளையாட யாரும் இல்லாததால், அங்கு அவன் அதிகமாகச் சென்றதில்லை. ஆனால், இந்த முறை “மாமா வீட்டுலயாவது போய் இரு” என்று அப்பா கொண்டு வந்து விட்டு விட்டார்.
மாமாவுக்கு தொழில் விவசாயம் என்பதால், அவரது வீட்டில் மாடுகள் இருக்கும். தவிர, அவரது வீட்டைச் சுற்றி நாய்கள் அதிகம். இரவு நேரங்களில் மாமா அல்லது அத்தை துணையில்லாமல் சீனு வெளியே போக மாட்டான்.
ஒருநாள் மாடுகள் வயலுக்கு மேய சென்றிருந்தபோது, ஒரு மாட்டின் காலடியில் நாய்க்குட்டி பட்டுவிட்டது. அவ்வளவுதான். நாய்கள் மாடுகளைச் சுற்றிக் கொண்டு குறைக்கத் தொடங்கின. நாய்க்குட்டிக்கு அம்மா போல இருந்த நாய், தனது குட்டியின் மேல் கால் வைத்த மாட்டின் மீது பாய்ந்தது. நல்ல வேளையாக அருகில் இருந்த மக்கள், மாடுகளையும் நாய்களையும் அடித்து துரத்தினர்.
அதே நாள் சாயுங்காலம், மாடுகள் திரும்பி வரும்போது, அங்கிருந்த பள்ளத்தில் ஒரு மாடு விழுந்துவிட்டது. உடனே, அதைப் பார்த்துக் கொண்டிருந்த நாய்கள், பலமாகக் குரைக்க ஆரம்பித்தன. நாய்களின் குரல் கேட்டு, ஓடி வந்த மக்கள் மாட்டை மேலே தூக்கி வந்தார்கள்.
****
அன்று இரவு சாப்பாட்டை முடித்ததும் மாமாவுடன் சீனு பேசிக் கொண்டிருந்தான்.
“மாமா… இந்த விலங்குகளை புரிஞ்சிக்கவே முடியல. திடீர்னு சண்டை போடுது. அடுத்த நிமிஷம் சேர்ந்துக்குது. புரியவே மாட்டேங்குது?” என்று சீனு கேட்டான்.
மாமா சிரித்தார். “அதுதான் கண்ணா விலங்குகளோட படைப்பு. தங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்தால்தான் சண்டையிடும். ஆறறிவு படைச்ச மனுஷன்தான் எல்லாத்துக்கும் கணக்கு வச்சு சண்டை போடுறான்” என்றார். சீனுவுக்கு சுருக்கென்றது.
“மாமா உன் செல்போனை தர்றியா?” என்று கேட்டு வாங்கினான்.
மறுமுனையில் அத்தையின் குரல் கேட்டது. போனை ரவியிடம் தர சொன்னான்.
ரவியின் குரல் கேட்டதும், “டேய்… இப்போ மாமா வீட்டுல இருக்கேன். இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வர்றேன்” என்றான் உற்சாகமாக.
“அப்போ… திரும்ப கிரிக்கெட் விளையாடலாமா?” என்றான் ரவி.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close