Advertisment

வெளிநாடு வாழ் விநாயகர்

விநாயகர் சதூர்த்தி கொண்டாடும் வேளையில், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பல நாடுகளில் விநாயகர் வழிபாடு இருப்பதை உணர்த்தும் கட்டுரை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vinayagar chadurthi

சரவணக்குமார்

Advertisment

ஆனைமுகத்தானுக்கு ஆகம விதிகள் எதுவும் கிடையாது. குளக்கரையில், அரசமரத்தடியில் என அனைத்து இடங்களிலும் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஒரே தெய்வம் இவரே.

இவ்வளவு ஏன்? மஞ்சளை நீரில் குழைத்து பிள்ளையாராய் பிடித்துவைத்தாலும், அவருடைய அருள் நமக்கு உண்டு. எந்த தெய்வத்துக்கும் இல்லாத எளிய அணுகுமுறை இவரிடம் மட்டுமே செல்லும். அதே சமயம் சைவத்திலும், வைணவத்திலும் வணங்கப்படும் ஒரே கடவுள் விநாயகர் மட்டுமே.

சைவத்தில் கணபதி, கணேசன், கஜமுகன், விக்னேஸ்வரர், விநாயகர், பிள்ளையார் என்கிற பல்வேறு பெயர்களும், வைணவத்தில் தும்பிக்கை ஆழ்வார் என்கிற ஒரே பெயரிலும் அருள்பாலித்து வருகிறார்.

கடல் கடந்து வெளிநாடு வாழ் விநாயகராக வெவ்வேறு நாடுகளில் விதம்விதமான பெயர்களில் வணங்கப்படும் இந்துக் கடவுள் இவராகத் தான் இருக்கும்.

நமது ஊரில் உள்ள முனி, கருப்பர் போன்று திபெத்தில் கணபதியும் ஒரு காவல் தெய்வமாக கோவிலின் முன்புறம் வைத்து வணங்கப்படுகிறார். இங்கே விநாயகரை பெண் உருவில் வழிபடும் வழக்கமும் உள்ளது. இவ்வுருவத்திற்கு கணேசானி என்பது பெயர்.

ஆப்கானிஸ்தானில் புதையுண்டு கிடந்த பல விநாயகர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட கணபதியின் சிலை ஒன்று கி.பி. 5 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது தற்போது காபூலில் தர்ஹா பீர் ரத்தன் நாத் கோவிலில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் புத்த மடங்களிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடப்படுகின்றன. முன்பு இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் இடையே இருந்த வணிகத்தொடர்பினால் கணபதி, கடல் கடந்திருக்க வேண்டும். இவரை ஞானத்தின் அதிதேவதையாக இம்மக்கள் வணங்குகிறார்கள்.

ஜப்பானிய மொழியில் ‘பிள்ளை’ என்று பொருள்படும் ‘ஷோடர்’ என்னும் பெயராலும், வினாயக்ஷா என்றும் அழைக்கப்படுகிறார் பிள்ளையார். இவரை புத்தமதக் கடவுளாகவே இங்கே பார்க்கிறார்கள்.

சிங்கப்பூரிலும் பிள்ளையார் கோயிலுக்கு பஞ்சமில்லை. 200 வருடங்கள் பழமையான கோவில்களும் இங்கே உள்ளன. தமிழர்கள் அதிகம் வாழ்வதால் வழக்கமான பெயரிலேயே இவரை அழைக்கிறார்கள்.

இந்தோனேஷியாவிலும் கணபதி வழிபாடு சிறப்பாகவே நடைபெறுகிறது. மிகப்பழமையான சிவாலயங்களில் பிள்ளையாருக்கு தனிச்சந்நிதி உள்ளது. இவருக்கென தனியே கோவில்களும் இங்கு உள்ளன. இந்நாட்டு பணமாகிய ரூபியாவில் விநாயகரின் திருஉருவம் அச்சிடப்பட்டிருப்பது நம் இந்துக் கடவுளை சிறப்பிக்கும் விஷயமாகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விநாயகர் வழிபாடு ஆரம்பிக்கப்பட்ட நாடு நேபாளம். புத்த மதத்தை சார்ந்தவர்கள், நம்மைப்போலவே பிள்ளையாரை முதலில் வணங்கிவிட்டே அனைத்து காரியங்களையும் ஆரம்பிக்கிறார்கள். மேலும் ‘கணபதி ஹிருதயம்’ ஸ்லோகமும் பௌத்தர்களால் கூறப்படுகிறது. இங்கே சோண பத்திரர் என்கிற சாளக்கிராம விநாயகர் சிவப்பு நிறத்தோடு காட்சியளிக்கிறார். சிம்பிதண்டு என்கிற இடத்தில் இருக்கின்ற இவருடைய ஆலயம் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அண்டை நாடான இலங்கையில் நமது கடவுள்களின் கோவில்கள் நிறையவே உண்டு. அதில் குறிப்பிடத்தக்க இடம் விநாயகருக்கு இருக்கிறது. பல்வேறு யுகங்களாக நம்மோடு தொடர்பில் உள்ள நாடு என்பதால் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாரை முதலிய இடங்களில் விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

இது மட்டுமில்லாமல் மலேசியா, கிரீஸ், எகிப்து போன்ற நாடுகளிலும் விநாயகர் வழிபாடு விமரிசையாய் நடைபெறுகிறது. சில நாடுகளில், வேறு பெயர்களிலும் அந்நாட்டிற்கு ஏற்ற வகையிலும் உருவங்கள் மாறுபடுகின்றன. ஆனாலும் விநாயகப் பெருமான் உலகம் முழுமையும் வியாபித்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

Vinayagar Chathurthi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment