காய்கறி விற்று புற்றுநோய் மருத்துவராக உயர்ந்தவர்: யார் தெரியுமா?

கர்நாடகாவிலுள்ள புகழ்பெற்ற கிட்வாய் மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் இயக்குநர் பதவியிலிருந்து விஜயலஷ்மி தேஷ்மானே சமீபத்தில் ஓய்வுபெற்றார்.

கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் உள்ள சிறிய குடிசை பகுதியில், தலித் குடும்பத்தில் பிறந்த விஜயலஷ்மி தேஷ்மானே சிறு வயதில் வயிற்றுப் பிழைப்புக்காக காய்கறி விற்றிருக்கிறார். ஆனால், அவர் இப்போது இந்தியாவின் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம். விஜயலஷ்மி தேஷ்மானே தன் நம்பிக்கையாலும், கடின உழைப்பாலும் சாதித்தவர். தனது இளமைக் காலங்கள் குறித்து விஜயலஷ்மி ஒருமுறை கூறினார். “அந்த காலத்தில் எல்லாம் ஆண் பிள்ளைகளை மட்டும்தான் பள்ளிகளுக்கு அனுப்புவார்கள். பெண்களை படிக்க அனுப்ப மாட்டார்கள். ஆனால், என்னுடைய அப்பா என்னையும், என் சகோதரிகளையும் படிக்க வைத்தார். குல்பர்காவில் அதெல்லாம் சாத்தியமேயில்லை. அதிலும் தலித் சமூகத்தில் இதையெல்லாம் அப்போது நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால், வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் எப்போதும் இருக்கும்.”, என கூறினார்.

“நான் புதிய காலணிகளை கூட தைக்கக் கூடாத சமூகத்திலிருந்து வந்தவள். ஆனால், என்னுடைய அப்பா சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றவர். அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும் என்பதில் அவருக்கு நம்பிக்கை உண்டு. அதனால் தான் என்னை படிக்க வைத்தார்.”, என தன் வெற்றியின் பின்னால் இருக்கும் தந்தை குறித்து சொல்கிறார்.

கல்வி கட்டணம் செலுத்துவது விஜயலஷ்மியின் குடும்பத்தினருக்கு கடினமானதாக இருந்தது. அவருடைய அம்மா காய்கறி விற்பவர். தானும் தன் அம்மாவுடன் சேர்ந்துகொண்டு விஜயலஷ்மி காய்கறி விற்பார். அவருடைய அம்மாவின் தாலி உட்பட நகைகளை விற்றே விஜயலஷ்மி படிக்க நேர்ந்தது. நன்றாக படிக்கக்கூடியவர் விஜயலஷ்மி. 1980-இல் தன் கடின உழைப்பால் கர்நாடகா அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார்.

“நான் எம்.பி.பி.எஸ். படிக்க ஆகும் செலவிற்காக என் அம்மா அவருடைய தாலியையும் விற்றார். என் அம்மா, அப்பா, உடன்பிறந்தவர்களின் தியாகம் தான் என்ன உயர்த்தியுள்ளது”, என தான் கடந்து வந்த பாதையை விஜயலஷ்மி நினைவூட்டிக் கொள்கிறார்.

1983-ஆம் ஆண்டு பெல்லாரியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ்.படித்தார். மார்பக புற்றுநோய் மருத்துவம் குறித்தும் சிறப்பு பட்டம் பெற்றார். நாட்டிலேயே புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவராக உயர்ந்தார். பல்வேறு விருதுகள் விஜயலஷ்மிக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. கர்நாடகாவிலுள்ள புகழ்பெற்ற கிட்வாய் மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் இயக்குநர் பதவியிலிருந்து விஜயலஷ்மி தேஷ்மானே சமீபத்தில் ஓய்வுபெற்றார்.

×Close
×Close