காதல் எந்த இடத்தில் வேண்டுமானாலும் நமக்குள் பூக்கும். அதற்கு இடம், பொருள், ஏவல் இவையெல்லாம் தெரியாது. யாரை காதலிக்க வேண்டும் என்ற வரைமுறைகளும் கிடையாது. டெல்லியில் இளைஞர் ஒருவர் பாலியல் தொழிலாளியாக இருந்த பெண்ணை காதலித்து, அவரை அத்தொழிலில் இருந்து மீட்டு திருமணம் செய்ய இருக்கிறார். திரைப்படங்களிலும், கதைகளிலுமே நமக்கு அதிகம் பார்த்து, படித்த இம்மாதிரியான காதல் கதைகள் நிஜத்திலும் நடக்கின்றன. ஆனால், பாலியல் தொழிலில் இருந்து மீட்ட ஒரு பெண்ணை தன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வது, 2017-ஆம் ஆண்டிலும் பல்வேறு சிரமங்களைக் கடந்துதான் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.
இந்தியாவில் ஏராளமான பெண்கள் தங்களின் ஏழ்மையான நிலைமையாலும், வாழ்வாதாரத்திற்காகவும் பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர். பிழைப்பு தேடி வேறு இடங்களுக்கு பயணிக்கும் பெண்கள், ஆதரவற்ற பெண்களின் நிலைமையை அறிந்துகொண்டு அதனை பயன்படுத்தி, அவர்களை பாலியல் தொழிலில் தள்ளுவதற்கு என இந்தியாவில் ஏராளமான குழுக்கள் உள்ளனர். அது ஒரு மெல்லிய வலைப்பின்னல் போன்றது. யாருடைய கண்களுக்கும் அவர்கள் தெரிவதில்லை. அப்படித்தான், நேபாளில் கடந்த 2015-ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு அனைத்தையும் இழந்த சுபி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் ஒருவர் வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி டெல்லிக்கு வந்தார்.
ஆனால், டெல்லி மாநகரம் அவருக்கு வேலை தரவில்லை. மாறாக, பாலியல் தொழிலில் ஈடுபடும் குழு ஒன்றில் அப்பெண் சிக்கி அத்தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டார். தப்பிக்க வழிகளின்றி அப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அதிலேயே தன் வாழ்க்கை முழுவதும் இருந்துவிடுவோமோ என்ற பயத்தில் தன் கனவுகள் அனைத்தையும் இழந்தார்.
ஆனால், தன் கவலைகளெல்லாம் ஒருநாள் தகரும் என அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். சாகர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற இளைஞர் தன் நண்பர்களுடன் சுபி இருக்கும் அந்த இடத்திற்கு சென்றார், ஒரு வாடிக்கையாளராகத்தான்.
சாகருக்கும் சுபிக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போகவே, இருவரும் தொடர்ந்து அந்த இடத்தில் சந்தித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து ஒன்றாக வாழ வேண்டும் என ஆசை கொண்டனர்.
ஆனால், சுபியை பாலியல் தொழிலில் தள்ளிய தரகர்கள் அவரை விடுவதாக இல்லை. யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பிக்க சுபி மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது.
அதனால், சாகர் என்.ஜி.ஓ. ஒன்றின் துணையுடன் டெல்லி பெண்கள் ஆணையத்தின் உதவியை நாடினார். அதன்பிறகு, காவல் துறையினர், பெண்கள் ஆணைய அதிகாரிகள் இணைந்து சுபியை அங்கிருந்து மீட்டனர்.
சுபியை திருமணம் செய்துகொள்ள சாகரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். விரைவில், இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.