ஹெல்த் இன்சூரன்ஸ் அவசியமா? நீங்கள் அறிய வேண்டிய 5 காரணங்கள்

Health Insurance: பெரும் தொகையை இன்சூரன்ஸ் கம்பெனிகள் சிகிச்சைக்காக அளிக்கின்றன. இது நிச்சயம் லாபம் தான்!

By: November 25, 2018, 5:06:36 PM

நோய் தாக்கம் என்பது, நமது வாழ்வியலில் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. மருத்துவம் தொடர்பான செலவீனங்களும், புதிய புதிய நோய்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நோய் எப்போது தாக்கும் என்பதை யாரும் கணிக்க முடியாது, ஆனால் அதற்கான முன்னெச்சரிக்கையோடு நம்மால் இருக்க முடியும். குறிப்பாக, மருத்துவ காப்பீடு மூலம் மருத்துவ செலவீனங்களுக்கு நாம் நேரமும் தயார் நிலையில் இருக்கலாம்.

சிகிச்சைக்கு உண்டான செலவை ஈடுகட்டும் விதமாகவோ, சிகிச்சை அளித்தவர்களுக்கு நேரடியாகவோ மருத்துவக் காப்பீடு தொகைகள் வழங்கப்படுகின்றன. தனிநபர் காப்பீடு, குடும்ப காப்பீடு, சிக்கலான வியாதி காப்பீடு போன்ற பல வகையான சுகாதார காப்பீட்டு திட்டங்கள் உள்ளன.

ஏன் மருத்துவக் காப்பீடு தேவை?.. இதோ ஐந்து பிரதான காரணங்கள்:

1. மாறிப்போன நமது வாழ்க்கை முறை:

கடுமையான வேலைப்பளு, தவறான உணவுப்பழக்கம், தரமில்லாத உணவு, அதிகரிக்கும் மாசு, மன அழுத்தம் ஆகியவை நமது சுகாதார சிக்கல்களை அதிகப்படுத்தியுள்ளன. இதனால், நோய் தாக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது. ஒரு மருத்துவக் காப்பீடு, இந்த சிக்கல்களை எல்லாம் தவிடு பொடியாக்கி, எதிர்கொள்ள வழிவகை செய்கிறது.

2. அதிகரித்துள்ள மருத்துவ செலவுகள்:

மருத்துவ செலவுகள் பெருமளவில் உயர்ந்துள்ளன. காய்ச்சலுக்கு ஒரு ‘பாராசிட்டாமால்’ மாத்திரை போட்டு குணப்படுத்தி வந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. புதிய புதிய காய்ச்சல்கள் தாக்கத் தொடங்கிவிட்டன. இவற்றுக்கான ரத்தப் பரிசோதனை, இதர பரிசோதனைகளுக்கான செலவுகள் கண்ணைக் கட்டுகின்றன. மருத்துவ அவசரகாலத்தில் இந்தியர்கள் பெரிதும் நம்புவது தங்கள் சேமிப்புகளை தான். இதனால், எதிர்காலத் தேவைகளுக்காக சேமித்து வைத்திருப்பதை பலிகடா ஆக்க வேண்டியதிருக்கிறது. ஒரு மருத்துவக் காப்பீடு இந்த செலவுகளையெல்லாம் ஏற்றுக் கொண்டு, நமது சேம்பிப்பை காப்பாற்றுகிறது.

3. வருமான வரி நன்மைகள்:

சுகாதார காப்பீட்டு பிரிமியம் மீது செலுத்துவோருக்கு, இந்திய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D கீழ், வரி விலக்கு சலுகை பெற தகுதியுள்ளது. 60 வயதிற்கு உட்பட்டவர்கள் ரூ. 25,000 வரையில் சலுகை பெற முடியும். தங்கள் பெயரிலோ, அல்லது மனைவி, குழந்தைகள் பெயரிலோ காப்பீடு செலுத்தி வரிவிலக்கில் சலுகை பெறலாம். 60 வயதிற்கு மேற்பட்ட தங்களது பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடு பெறுபவர்கள், 50 ஆயிரம் ரூபாய்க்கு வரி விலக்கு பெறலாம்.

4. மருத்துவமனையின் செலவுகள்:

பிரதான மருத்துவ செலவுகள் மட்டுமல்ல, வெளிநோயாளி பிரிவு செலவும்(OPD), நோய்களை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கான செலவுகளும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டன. இந்த இடத்தில் தான் மருத்துவக் காப்பீடு நமக்கு கை கொடுக்கிறது. மருத்துவமனையின் செலவினங்களை மட்டுமல்லாமல், பாலிசியில் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்கு முன்பும், அதற்குப் பிறகும் OPD மற்றும் பரிசோதனைகளுக்கான செலவுகளையும் மருத்துவக் காப்பீடு ஏற்றுக் கொள்கிறது.

5. கூடுதல் நன்மைகள் என்னென்ன?

ஆம்புலன்ஸ் கவரேஜ், ஒரு நாள் அறுவை சிகிச்சைகள், உடல்நல பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி செலவுகள் ஆகியவற்றுக்கான செலவினங்களை மருத்துவக் காப்பீடு மூலமாக ஈடுகட்ட முடியும்.

மருத்துவக் காப்பீட்டை வாங்க சரியான வயது எது? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. எவ்வளவு குறைந்த வயதில் காப்பீடு வாங்குகிறீர்களோ? காப்பீடுக்கு செலுத்தும் தொகையும் குறையும். வயது அதிகரிக்க, பாலிசிக்கு செலுத்த வேண்டிய தொகையும் அதிகரிக்கும். இதற்கான காரணம், வயது ஏற ஏற நோய்களின் தாக்கமும் அதிகரிப்பது தான்.

மேலும், நீங்கள் மருத்துவக் காப்பீட்டை வாங்கும்போது, முக்கியமாக ‘சிக்கலான நோய்கள் பாலிசி’ பற்றியும் விசாரியுங்கள். இந்த பிரிவின் கீழ் வரும் அதிதீவிர நோய்களுக்கான சிகிச்சை செலவு, நமது எதிர்கால சேமிப்பு முழுவதையுமே தூக்கி விழுங்கிவிடும். இத்தருணத்தில், ‘சிக்கலான நோய்கள் பாலிசி’ எடுத்திருந்தால், ஒரு பெரும் தொகையை இன்சூரன்ஸ் கம்பெனிகள் சிகிச்சைக்காக அளிக்கின்றன. இது நிச்சயம் லாபம் தான்!

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Health insurance five reasons to know

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X