Advertisment

சென்னையில் அழிந்து வரும் புராதான கட்டிடங்கள் 1 : கார்டில் (அ) பாரத் இன்ஸ்யூரன்ஸ் பில்டிங்

Kardyl Building Chennai : சென்னையில் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு தெருவுக்கும் மட்டும் கதைகள் இருப்பதில்லை. ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் அப்படியான கதைகள் உண்டு. 

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Heritage buildings of Chennai Bharat Insurance Building

Heritage buildings of Chennai Bharat Insurance Building

Chennai history,  Kardyl building history : சென்னை பன்மொழி பேசும் மக்கள் வசிக்கும் பெருநகரமாக மட்டுமில்லாமல், ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யப்பட்டதால் மிகவும் பழமையான கட்டிடங்கள் மற்றும் நிறுவனங்களைக் கொண்ட ஒரு இடமாகவும் அமைந்திருக்கிறது. சென்னை பல்கலைக்கழகம், சென்னை மத்திய ரயில் நிலையம், ஹிக்கின்பாதம்ஸ், ரிப்பன் பில்டிங், சென்னை மியூசியம் போன்றவை அதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாகவும் இருக்கிறது.

Advertisment

இரண்டு மூன்று முறை, சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து பீட்டர் அண்ணனின் சுவையான தேநீர் கடைக்கு சென்ற போது தான் கவனிக்க துவங்கியிருந்தேன், அழகான, ஆனால் பழமையடைந்த, யாராலும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தமிழக பொதுப்பணித்துறையின் முன்னாள் அலுவலகம். தீ விபத்திற்கு பிறகு அது பயன்பாட்டிற்கு வராமல் போனது என்று கூறினார்கள்.

publive-image

சில நேரங்களில் ரயில் நிலையம் செல்லும், ஜன்னல் வழியே கவனித்திருக்கின்றேன். ஒரு பெரிய கட்டிடம். அழகான,  ஆனால் அதன் நான்கு கோபுரங்களில், இரண்டினை காணவில்லை. பழமையடைந்து, யாராலும் பயன்படுத்தப்படாத கட்டிடம் தான் அதுவும். புராதான கட்டிடங்களை சீரமைப்பு செய்தால் அதனை மக்கள் பயன்பாட்டிற்கோ, அல்லது மியூசியம் போன்றோ,  சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாகவோ மாற்றலாம் தானே. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் அன்று-இன்று பகுதியில் நாம் இன்றைய பாரத இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் கட்டிடம் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் அறிந்து கொள்வோம்.

மேலும் படிக்க : சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை…

இந்தோ-சர்சனிக் பாணியில் கட்டப்பட்ட Kardyl building

இந்திய கட்டிடக் கலையுடன் இஸ்லாமியர்களின் கட்டிடக் கலையும் சேர்ந்து ஒரு ஃப்யூஷனாய் உருவானது தான் இந்த கட்டிடம். இவ்வகை கட்டிடக் கலையைத் தான் இந்தோ சர்சனிக் கட்டிடக் கலை என்று அழைப்பார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சி செய்த காலத்தில் முகலாய கட்டிடக் கலை, இந்துக் கோவில்களின் கட்டிடக் கலை மற்றும் பிரித்தானியர்களின் கட்டிடக் கலைகளின் கலவையாக இந்த கட்டிடக் கலை விளங்குகிறது. ஆங்கிலேயர்கள் இந்த பாணியில் இந்தியாவில் 100 கணக்கான கட்டிடங்களை கட்டியிருக்கின்றனர். சென்னை உயர் நீதிமன்ற கட்டிடம் இந்த கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டாகும்.

publive-image 1940ம் ஆண்டு மௌண்ட் ரோட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம். இடது பக்கம் தெரியும் கார்டில் கட்டிடம் (புகைப்படம் - Alamy)

மிகப்பெரிய வராண்டாக்காள், மேல் மாடங்கள், கண்ணாடிகள், கோபுரங்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய மிகப்பெரிய கட்டிடமாக 1897ம் ஆண்டு கட்டப்பட்டது இந்த கார்டியல் பில்டிங்க். இதனை பாரத் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் கட்டிடம் என்றும் பலரும் அழைக்கின்றார்கள். அண்ணா சாலையில் அமைந்திருக்கும் இந்த கட்டிடத்தின்  கோபுரங்கள் 100 அடி உயரத்தில் கட்டப்பட்டவை.

Bharat Insurance Company : டபிள்யூ. இ. ஸ்மித் அண்ட் கம்பெனியும் கார்டில் கட்டிடமும்

இந்த கட்டிடம் டபிள்யூ. இ. ஸ்மித் அண்ட் கம்பனி என்ற ஆங்கிலேய நிறுவனத்தால் கட்டப்பட்டது. அதன் உரிமையாளர் டபிள்யூ.இ ஸ்மித், மருந்தாளுநர் ஆவார். இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட இவர் 1868ம் ஆண்டு மதராஸ் வருகிறார். தலைநகர் வந்த அவர், அன்றைய கோடை கால தலைநகரான நீலகிரிக்கு சென்று அங்கு ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தை துவங்குகிறார். மருந்துகள், ஏரேட்டட் வாட்டர் (காற்று புகுத்தப்பட்ட நீர்), அறுவை சிகிச்சை கருவிகள் ஆகியவற்றை தயாரித்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த கண் பரிசோதகராகவும் திகழ்ந்தார். தன்னுடைய கருவிகளை ஸ்டாக் வைக்க அவருக்கு அதிக இடம் தேவைப்பட்டது. இவருடைய நண்பர்களின் தூண்டுதலால் இந்த கட்டிடத்தை அவர் கட்டத் துவங்கினார்.

தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற மருந்தாளுனராக இருந்த இவர் இந்த கட்டிடத்தை 1897ம் ஆண்டு கட்டினார். கட்டி முடிக்க 3 ஆண்டுகள் ஆனது. இந்த கட்டிடம் தான் ஸ்மித்திற்கு தலைமை அலுவலகமாகவும், வர்த்தக தளமாகவும் அமைந்தது. கார்டில் கட்டிடம் முக்கோண வடிவில் அமைக்கப்பட்ட ஒன்று. மேலும் இந்தோ சார்சனிக்கில், துருக்கி ஒட்டாமன் கலை நுணுக்கமும், இந்து கட்டிடக் கலையும், ஐரோப்பிய செவ்வியல் கட்டிடக் கலையையும் பயன்படுத்தி இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டது. மெட்ராஸ் மாகாணத்தின் பொதுப்பணித்துறையில் கட்டிட கலை வடிவமைப்பாளர் பணியாற்றிய ஜெ.எச். ஸ்டீஃபன்ஸ் இந்த கட்டிடத்தை வடிவமைத்துக் கொடுத்தார்.

மருத்துவமனையும் பாரும்

மௌண்ட் ரோட்டினை பார்த்த மாதிரி இருக்கும் பகுதியில் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் தங்களின் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஐரோப்பாவில் இருந்து ஸ்மித்துக்கு உதவி செய்ய வந்த ஐரோப்பியர்களுக்கான பகுதி ஜெனெரல் பேட்டர்ஸ் சாலையை நோக்கி இருக்கும் பக்கத்தில் அமைந்திருந்தது. இதன் மற்றொரு பக்கத்தில் ஷோ-ரூமும், ஒரு பெரிய ஏரியாவில் கஃபே மற்றும் பாரும் நடத்தப்பட்டது.

Heritage buildings of Chennai Bharat Insurance Building 1910ம் ஆண்டு மழைக்காலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

எல்.ஐ.சி நிறுவனம்

1934ம் ஆண்டு பாரத் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் இந்த கட்டிடத்தை விலைக்கு வாங்கியது. பின்னர் மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐ.சி வாங்கும் வரை செயல்பாட்டில் இருந்து வந்தது. பல்வேறு கைகளுக்கு மாறிய இந்த கட்டிடம் இறுதியாக எல்.ஐ.சியின் கையில் வந்து சேர்ந்தது. 1956ம் ஆண்டு எல்.ஐ.சி இந்த கட்டிடத்தை வாங்கியது. நாளுக்கு நாள் இந்த கட்டிடம் பலவீனம் அடைந்து வர, இந்த கட்டிடத்தை இடிக்க திட்டம் செய்தது எல்.ஐ.சி. 1998ம் ஆண்டே இங்கு குடியிருந்த சில மக்களையும் வெளியேறக் கூறி உத்தரவு பிறப்பித்திருந்தது எல்.ஐ.சி.

கட்டிடத்தை இடிக்க முயற்சி செய்த போது இந்திய தேசிய அறக்கட்டளை பொது நல வழக்கு ஒன்றை பதிவு செய்து இந்த கட்டிடத்தை இடிப்பது தடுக்கப்பட்டது. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று பலமுறை இவ்வழக்கு சென்று திரும்பிய பிறகு 2010ம் ஆண்டு இந்த கட்டிடம் மக்கள் வாழ ஏற்றது இல்லை. எனவே இதனை மறுசீரமைக்க உத்தரவிட வேண்டும் என்றும், புதிதாக கட்டப்படும் கட்டிடம் நிச்சயமாக இதே வடிவமைப்பில் கட்டப்படும் என்றும் கோரியது. ஆனால் 2010ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம், இந்த கட்டிடத்தை சென்னையின் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாக அறிவித்தது. ஆனாலும் இந்த கட்டிடத்தை புணரமைக்கும் பணி இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.

கார்டில் கட்டிடத்தின் தற்போதைய தோற்றம்

இன்று இந்த கட்டிடங்கள் மழையிலும் வெயிலிலும் சேதமடைந்து பார்ப்பதற்கே பரிதாபகரமாக இருக்கிறது. தன்னுடைய பாரம்பரியத்தை இழந்து நிற்கும் இந்த கட்டிடம் தான் எத்தனை தலைமுறைகளை கடந்திருக்கும்.

Heritage buildings of Chennai Bharat Insurance Building Express Photo by Nithya Pandian

இது போன்று கேட்பாரற்று கிடக்கும் கட்டிடங்கள் எத்தனையோ? சென்னையில் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு தெருவுக்கும் மட்டும் கதைகள் இருப்பதில்லை. ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் அப்படியான கதைகள் உண்டு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

 

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment