அனைவருக்கும் ஒரே மாதிரியான மூளையா?

மனித மூளை சுமாராக 100 பில்லியன் நரம்பு செல்களை (நியூரான்ஸ்)  கொண்டது. நமக்கு 3 வயது ஆகும்போதுதான் அந்த செல்கள் முழு வளர்ச்சி அடையும்

ராஜலட்சுமி சிவலிங்கம்

ஆம் என்கிறது, விஞ்ஞானம். வளர்ந்தவர்களின் மூளையின் எடை சுமார் 3 பவுண்டுகள். எல்லா மனிதனுக்கும் அதுவேதான். அனைவரும் ஒரே அறிவுடன்தான் படைக்கப்பட்டுள்ளோம். இந்த வகையில் நாமும் ஐன்ஸ்டீனும் ஒன்றுதான். ஆனால் அறிவை நாம் பயன்படுத்தும் விகிதங்கள்தான் மாறுபடுகின்றன. எதையும் கற்பதற்கு முதலில் ஒருவருக்குத் தேவை ஆர்வமும் கவனமும். இவைதான் கற்றலுக்கு அடிப்படை.

ஆசையும் ஆர்வமும்

குழந்தைகள் வெளிப்படுத்தும் ஆசைகளை வைத்து அதில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர் என்று நாமாகவே முடிவு செய்துவிடக் கூடாது. ஆசைக்கும் ஆர்வத்திற்கும் இடையே குழப்பிக்கொள்ளக்கூடாது. எதில் ஆர்வம் என்பதை நாம் அடையாளம் காண வேண்டும். ஆசைப்படுவதெல்லாம் ஆர்வங்களாகிவிடாது.

சினிமா பார்ப்பதில் ஆசை என்பதால், திரைப்படக் கலைஞராகிவிட முடியாது, ஆனால். கேமரா, இசை, திரைக்கதை, நடிப்பு, காட்சித் தொகுப்பு ஆகியவை பற்றி நுட்பமாகக் கவனிக்கும் தன்மை ஒருவருக்கு இருந்தால் அதை ஆர்வம் என்று சொல்லலாம். இதுபோலவே ஒவ்வொரு ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் அது தொழில் வாழ்க்கையைத் தீர்மானிக்கக்கூடிய ஆர்வமா அல்லது வெறும் ஆசையா என்று தெரிந்துவிடும்.

மூளையின் செயல்பாடு

மூளை நாம் பார்க்கும், கேட்கும், உணரும் செயல்களைச் சேமிக்கிறது. கண், காது மூக்கு, நாக்கு, தோல் ஆகியவை சுற்றுப்புறத்திலிருந்து தகவல்களைச் சேகரித்து மூளைக்கு அனுப்புகின்றன. இவை நம் மூளையில் நியுரோன்கள் என்ற நரம்பு செல்கள் வழியாகக் கடத்தப்படும். இவை ஒரு நரம்பு செல்லிலிருந்து மற்றொரு நரம்பு செல் வழியாகப் பாயும்.

மனித மூளை சுமாராக 100 பில்லியன் நரம்பு செல்களை (நியூரான்ஸ்)  கொண்டது. நமக்கு 3 வயது ஆகும்போதுதான் அந்த செல்கள் முழு வளர்ச்சி அடையும். இதனால் தான் நமக்கு 3 வயதிற்கு முந்தய ஞாபகங்களை நினைவுபடுத்திக்கொள்ள முடியவில்லை. 3 வயதில்தான் நாம் அதிக எண்ணிக்கையிலான நரம்பு செல்களைக் கொண்டிருக்கிறோம். 3 வயதுக் குழந்தைக்கு நாற்பது மொழிகள் கற்றுக்கொள்ளும் திறன் இருப்பதாகக் கூறப்படுவதற்கு இதுவே காரணம்.

மூளையின் ப்ரீஃபிரன்டல் கார்டெக்ஸ் அல்லது ஃபிரென்டர் லோப் என்ற பகுதி திட்டமிடல், ஒழுங்குபடுத்துதல், குறைகளைக் கண்டறிந்து தீர்வு காணுதல், ஆராய்தல், தேவையான விஷயத்தில் கவனம் செலுத்துதல், கற்றல் உள்ளிட்ட பல செயல்களுக்குக் காரணமானது. இந்தப் பகுதி மும்முரமாக வேறு சிந்தனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால், கற்பதற்கு இடையூறாக இருக்கும். எனவே, மூளையின் ஒட்டுமொத்தப் பகுதியும் ஒரு செயலில் கவனம் செலுத்தினால் அந்த விஷயத்தை உடனடியாகக் கற்றுக்கொண்டுவிடுவோம். இதற்காகத்தான் நம் முன்னோர் கவனக் குவிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவந்தார்கள்.

அனைவருமே சாதனையாளர்களாகலாம்

குழந்தைகளின் கற்றலைப் பொருத்தவரை, ஊக்கமளித்தலும், குழந்தை மேல் நம்பிக்கைகொள்வதை உணர வைத்தலும்கூடப் பலனளிக்கும். கண்டுபிடிப்புகளின் தந்தை தாமஸ் ஆல்வா எடிசன், சிறு வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் மூளை பாதிக்கப்பட்டார். மூளைக் கோளாறு உள்ளவன் என்று பள்ளியில் முத்திரை குத்தப்பட்டார். அதோடு பள்ளிப் படிப்பு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் பெற்றோரின் ஊக்கமும் வழிகாட்டுதல்களும் இவருக்குள் இருந்த விஞ்ஞானியை விழிப்படையச் செய்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரராகி உலகம் புகழும் விஞ்ஞானியாகப் போற்றப்படுகிறார். எடிசனின் பெற்றோர் போலவே எல்லாரும் இருந்துவிட்டால், நாம் அனைவருமே சாதனையார்கள்தான்.

×Close
×Close