நாம் நம்முடைய உணவிலிருந்து முதலில் தூக்கி எறியக் கூடியப் பொருள் கறிவேப்பிலை தான். ஆனால் எல்லா உணவுகளிலும் தவறாமல் இடம் பிடிக்கும் பொருளும் இதுதான். கறிவேப்பிலையில் உள்ள நன்மைகளைப் பற்றித் தெரிந்தால் நீங்கள் இப்படி செய்ய மாட்டீர்கள்.
கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது. இதனால் இதயம், நரம்பு மண்டலம், சிறுநீரக பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கிறது. மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது.
கறிவேப்பிலை உங்களுக்கு புற்றுநோய் வராமல் காப்பதில் உதவுகிறது. மேலும் இரத்த சர்க்கரை அளவை சீராக்குவதால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது. இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உங்களுக்கு பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் உங்கள் முடி ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை மிக அவசியம்.
இப்படிப்பட்ட ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள கறிவேப்பிலையைக் கொண்டு சுவையான சட்னி செய்து இட்லி தோசையுடன் சாப்பிடலாம். வாருங்கள் அந்த சுவையான சட்னியை எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை ¼ கப்
தேங்காய் (துருவியது) 1 கப்
பச்சை மிளகாய் -3
புளி – ஒரு கோலி அளவு
கடுகு – ¾ டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுந்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வறுத்து இறக்கிக் ஆற வைக்க வேண்டும்.
இது ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு, அதனுடன் துருவிய தேங்காய், புளி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைக்க வேண்டும்.
அரைத்ததை தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த சட்னி கலவையில் ஊற்றி கலக்கவும்.
இப்போது சத்தான கறிவேப்பிலை சட்னி ரெடி! ஐந்தே நிமிடங்களில் இதை செய்து முடித்து, டிபனுக்கு பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil