கன்னம் சுருங்கிட நீயும், மீசை நரைத்திட நானும்... 72 ஆண்டுகள் பிரிவுக்கு பின் சந்தித்த காதல்

‘கண்ணம் சுருங்கிட நீயும், மீசை நரைத்திட நானும்…; வாழ்வில் கரைகளை காணும் நாளும் அருகில் தானோ’ என்ற பாடல் வரிகளின் அழகை உணர்த்தியிருக்கிறார்கள் இந்தக் கேரளா தம்பதி.

பிரிந்த காதல் சேர்வது, சேர்ந்த காதல் ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிவது போன்ற பல கதைகளை நாம் சினிமாவில் பார்த்திருப்போம். ஏன்? நேரிலும் கேட்டிருப்போம். ஆனால் போராட்டக் களத்தில் தொலைத்த காதல் மனைவியை 72 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டெடுத்திருக்கிறார் கேரளாவை சேர்ந்த நாராயணன்.

கேரளா மாநிலத்தில் 72 ஆண்டுகள் பிறகு ஒன்று சேர்ந்த தம்பதி

இந்த உணர்ச்சிகரமான காதல் கதையைக் கேட்கும்போது நம் மனதிற்குள் காட்சியாக கடக்கிறது இவர்களின் கற்பனை உருவங்கள்.

– அப்போது வருடம், 1946. அந்த வருடத்தில் சாரதாவிற்கு 14 வயது. இவரின் முறைப் பையன் தான் நாராயணன். நாராயணனுக்கு அதே வருடம் வயது 18. சாரதா தனது வயதுக்கான பருவத்தை அடைய, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க நிச்சயிக்கப்படுகிறது.

இவர்கள் திருமணம் நடந்து முடிந்த சில மாதத்திலேயே கேரளாவில் மிகப் பெரிய போராட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த கவும்பயி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது பல விவசாயிகளைக் கைது செய்ததில் நாராயணனும் கைது செய்யப்பட்டார்.

மாமியாரின் உதவியைப் பெற்று அப்போதைய ஆங்கிலேயே காவல்துறையிடம் இருந்து தப்பித்து தாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தார் சாரதா. பிறந்த வீட்டைச் சாரதா அடைந்திருந்த வேளையில், பிரிட்டிஷ் போலீசார் நாராயணனைக் கைது செய்து ஆயுள் தண்டனை விதித்து வேலூர் சிறையில் அடைத்தது.

அங்கிலேயர்கள் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் தகவல் தெரிவிப்பதே மக்களுக்குக் கடினமாக இருந்து வந்தது. அதிலும், சிறையில் இருந்த நாராயணன் குறித்து எந்தத் தகவலும் அவரது குடும்பத்தினருக்கும் மனைவிக்கும் சென்று சேரவில்லை. இதனால் சாரதாவின் கணவருக்கு என்ன ஆனது? எங்கு இருக்கிறார்? உயிரோடு தான் இருக்கிறாரா? என்ற பல கேள்விகளுக்குப் பதில் அறியாமல் தவித்தனர்.

சிறையில் இருப்பவர் குறித்து எவ்வித தகவலும் வராத நிலையில், குடும்பத்தினர் சாரதாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர். 1954ம் ஆண்டு விடுதலைப் பெற்று சிறையின் வாசம் விட்டு வெளியேறிய நாராயணன், தனது குடும்பத்தின் நிலையை அறிந்து மன வேதனையில் இருந்தார். ஆனால் சில மாதத்திலேயே அவரும் மறுமணம் செய்து கொண்டார்.

இணைந்தவர்களின் வாழ்க்கை ஒரு கால கட்டத்தில் தனித்தனியே இரு வாழ்க்கையாக, இருவருக்கும் குடும்பம் தழைத்தது. வாழ்க்கைத் துணை, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் என வாழ்க்கை அழகாகக் கடக்கிறது. இப்படியாக 72 வருடங்கள் கடக்கிறது.

இத்தனை வருடங்கள் கழித்து, சாரதாவின் மகன் பார்கவன் எதேர்ச்சையாக தன்னுடைய தாயின் முதல் கணவரான நாராயணனின் குடும்பத்தாரைச் சந்தித்துள்ளார். குடும்பங்கள் சிதறிய கதையை அறிந்த இரு வீட்டுப் பிள்ளைகளும் இணைந்து சாராதா- நாராயணனைச் சந்திக்க ஏற்பாடு செய்தனர். பிள்ளைகளின் முயற்சியால் 90 வயது நாராயணன் தனது முதல் மனைவி 86 வயதான சாரதாவைச் சந்தித்தார்.

பல வருடங்களின் பிரிவுக்கு பிறகு ஏற்பட்ட இவர்கள் சந்திப்பில் வார்த்தை தீர்ந்து மௌனம் மட்டுமே நிலைத்தது. அந்த அமைதியிலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பகிர்ந்துகொண்ட புன்னகையில் வெளிப்பட்டது ஆழமான நேசம்.

சாரதாவின் தலையை வருடிக் கொடுத்த நாராயணன், “இந்தப் பிரிவுக்கு நாங்கள் இருவரும் காரணமல்ல. ஒரு குடும்ப நண்பராகச் சாராதா மற்றும் அவரது குடும்பத்தாரை என் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துள்ளேன்” என்றார்.

சூழல்நிலைகளால் பிரிந்தபோதிலும், பல வருடங்கள் பின்பு நிகழ்ந்த இந்த உணர்ச்சிகரமான நிகழ்வால் இரு குடும்பத்தினருக்கு இடையே அழகான உறவு மலர்ந்தது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close