உருளைக் கிழங்கு எப்படி சமைத்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். அந்தளவுக்கு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை விட, உருளைக்கிழங்கு நீண்ட காலம் நீடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆனால் இறுதியில், அவை முளைவிட்டு, அவற்றின் புத்துணர்ச்சியையும், சுவையையும் இழக்கின்றன.
அவற்றைச் சரியாகச் சேமிப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரிந்தால், அவை வாரக்கணக்கில் அல்லது சில மாதங்கள் கூட புதியதாக இருக்கும்.
உருளைக்கிழங்கை எப்படி வாங்குவது மற்றும் சேமிப்பது என்பது குறித்து சில குறிப்புகள் இங்கே உள்ளன..
உருளைக்கிழங்கை குளிர்ந்த, நன்கு காற்றோட்டமான இடத்தில் சேமிக்கவும்.
பிரிட்ஜ் போன்ற குளிர்ந்த வெப்பநிலை, உருளைக்கிழங்கின் மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதற்கு காரணமாகிறது, இதனால் இனிப்பு சுவை மற்றும் சமைக்கும் போது நிறமாற்றம் ஏற்படுகிறது.
அதிக வெப்பநிலை அடையும் அல்லது சூரிய ஒளி படும் பகுதிகளில் உருளைக்கிழங்குகளை வைப்பதை தவிர்க்கவும். எப்போதும் குளிர்ந்த இருண்ட பகுதியில் சேமிக்கவும்.
துளையிடப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் காகிதப் பைகளில் உருளைக் கிழங்கை சேமிப்பது அதன் ஆயுளை நீட்டிக்க சிறந்த வழி.
உருளைக்கிழங்கை சேமிப்பதற்கு முன் கழுவ வேண்டாம். ஈரப்பதம் கெடுதலை ஊக்குவிக்கிறது.
உருளைக்கிழங்கின் தோலில் பச்சையாக இருப்பது சோலனைன் என்ற வேதிப்பொருள். உருளைக்கிழங்கு அதிக வெளிச்சத்தில் வைக்கும்போது ஏற்படும் இயற்கையான எதிர்வினை இது. சோலனைன் கசப்பான சுவையை உருவாக்குகிறது மற்றும் அதிக அளவில் சாப்பிட்டால் நோயை உண்டாக்கும்.
முளைவிடுவது’ உருளைக்கிழங்கு வளர முயற்சிக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். உருளைக்கிழங்கை நன்கு காற்றோட்டமான, உலர்ந்த, இருண்ட இடத்தில் சேமித்து வைப்பது முளை விடுவதை குறைக்கும்.
சிறிதளவு பச்சையாக இருந்தால், சமைக்கும் முன் உருளைக்கிழங்கின் தோலின் பச்சைப் பகுதிகளை வெட்டிவிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“