Advertisment

Maha Shivaratri: மகா சிவராத்திரி விரதத்தின் மகிமை தெரியுமா?

maha shivaratri 2019: வெறும் கண்விழித்திருக்கும் ஒருநாளாக இல்லா மல் அதிதீவிர விழிப்புணர்வும், உயிரோட்டமும் உங்களுக்குள் ஊற்றெடுக்கும் நாளாக இது அமைந்திட வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
happy shivratri photo, maha sivaratri 2019, மகா சிவராத்திரி 2019

happy shivratri photo, maha sivaratri 2019, மகா சிவராத்திரி 2019

why do we celebrate maha shivaratri: மகா சிவராத்திரி, சிவ பெருமானின் பக்தர்களுக்கு இன்று முக்கியமான நாள்! இரவு முழுவதும் விழித்திருந்து சிவ நாமத்தை உச்சரித்து ஈசனின் அருளைப் பெறுவார்கள் பக்தர்கள். மற்ற நாட்களை எல்லாம் விட்டு விட்டு, மகா சிவராத்திரியாகிய இன்று மட்டும் ஏன் பக்தர்களை கண் விழித்து, சிவனை வழிப்பட சொல்கிறார்கள் தெரியுமா?

Advertisment

மகாசிவராத்திரி இரவு என்பது நிலவின் சுழற்சிக் கணக்கில், ஒரு மாதத்தின் 14வது நாள், அதாவது அமாவாசைக்கு முந்தின நாள், சிவராத்திரி. இதுதான் அந்த மாதத்திலேயே மிகவும் இருளான நாள். ஒரு வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளில், மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி, மற்ற சிவராத்திரிகளை விட சக்தி வாய்ந்தது. இது தான் மகா சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது.

Maha Shivaratri Importance: மகா சிவராத்திரி என்றால் என்ன?

maha shivaratri vratham, maha sivaratri 2019, மகா சிவராத்திரி 2019

மகா சிவராத்திரி தினத்தன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது. அதனால் அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத் தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் அவருக்குள் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும். பல யோகிகள், முனிவர்கள் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்திருக்கிறார்கள்.

யோகக் கலாச்சாரத்தில் சிவனை கடவுளாகப் பார்ப்பதில்லை. அவரை ஆதியோகியாக, யோகப் பாரம்பரியங்களை நமக்கு வழங்கிய ஆதிகுருவாகவே ஆராதிக்கின்றனர். ‘ஷிவா’ என்றால், ‘எது இல்லையோ, அது’. உங்களில் ‘நான்’ என்ற சுவடின்றி, அங்கே சிவன் குடியிருக்க நீங்கள் வழிசெய்தால், வாழ்வை முற்றிலுமொரு புதிய கோணத்தில், என்றும் இல்லா தெளிவுடன் காணமுடியும்.

வெறும் கண்விழித்திருக்கும் ஒருநாளாக இல்லா மல் அதிதீவிர விழிப்புணர்வும், உயிரோட்டமும் உங்களுக்குள் ஊற்றெடுக்கும் நாளாக இது அமைந்திட வேண்டும். இயற்கையே வழங்கும் இந்த இணையில்லா வரத்தை நீங்கள் பயன்படுத்திக்க வேண்டும் என்பதே சிவராத்திரியின் தாத்பரியம்!

சிவபெருமானை வழிபடுவதில் முக்கியமான, முக்தியைத் தரும் விரதம் மகாசிவராத்திரி விரதம். அன்று இரவு முழுவதும் சிவாலயங்களில் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். பஞ்சாட்சர மந்திரம் ஒலிக்கும். சிவராத்திரி விரதம் இருப்போருக்கு சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையும் அருள்புரிகிறாள்.

சிவபெருமான், லிங்கத்தில் எழுந்தருளி அருள்புரிகின்ற நாளே சிவராத்திரி. பிரம்மதேவனும், திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று தெரிந்து கொள்வதற்காக, ஈசனின் அடி, முடிகளை தேடினர். அவர்கள் இருவருக்கும் எட்டாமல் அண்ணாமலையார் அருள் ஜோதியாக ஒளி வீசிய நாளே சிவராத்திரி என்றும் சொல்லப்படுகிறது.

தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது அதில் இருந்து ஆலகால விஷம் தோன்றியது. அந்த நஞ்சினை பெருமான் உண்டு உலகை காத்து அருளினார். சதுர்த்தசியன்று தேவர்கள் பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி என்று சொல்பவர்களும் உண்டு.

ஒரு காலத்தில் உலகம் அழிந்து யாவும் சிவபெருமானிடம் ஒடுங்கியது. அந்தகாரம் சூழ்ந்த அந்த இருளில் பார்வதி சிவபெருமானை ஆகமங்களில் கூறியுள்ள படி நான்கு காலம் வழிபட்டாள். அவ்வாறு அவளால் வழிபட்டதன் நினைவாக தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த இருளில் பார்வதி தேவி பரமனை நோக்கி இந்நாளில் நான் எவ்வாறு வழிபட்டேனோ அப்படியே வழிபடுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும் இறுதியில் மோட்சமும் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பரமசிவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்பாலித்தார். அதன்படியே அன்று முதல் சிவராத்திரி சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக பதவி கிட்டும். காசியில் முக்தி அடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும், நிறைந்த மங்கல வாழ்வு உண்டாகும் என சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் உள்ள சிவன் படத்திற்கு பூஜை செய்து அருகில் உள்ள சிவன்கோவில்களுக்கு சென்று சிவனை தரிசனம் செய்ய வேண்டும்.

முடியாதவர்கள் சிவாலயங்களுக்கு சென்று நான்கு காலங்களிலும் நடைபெறும் விசேஷ பூஜை அபிஷேகங்களை கண்டு களிக்கலாம். பால், தயிர், நெய், தேன், பூஜை பொருட்களை கொடுக்கலாம். அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். நான்கு சாமப்பூஜைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் நடைபெறும் சிவபூஜையே தலை சிறந்தது.

இது லிங்கோற்பவ காலம். விசுவ ரூபதரிசன நேரம். உருவமற்ற சிவன் உருவம் பெற்று லிங்கோற்பவ மூர்த்தியாக லிங்கத்திலே திருக்காட்சி தரும் புனிதமான நேரம் இதுவே. பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின் முடி, அடிகளை காண முயலும் தோற்றம் அப்போது புலனாகிறது. சிவ தரிசனம் கிடைக்கிறது. மும்மூர்த்திகளும் அங்கே தரிசனம் தருவதால் அவர்களின் பேரருளும் பக்தர்களுக்கு கிடைக்கும்.

சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தை கடைப்பிடிப்பதால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

சிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். மகாசிவராத்திரி விரதத்தை முறைப்படி செய்பவர்கள் முக்தியை எய்துவர். இந்த விரதத்தை 24 ஆண்டுகள் செய்து வர வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் 12 ஆண்டுகளாவது தொடர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். இதனால் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவதுடன், அவர்களின் சந்ததியில், 21 தலைமுறையினருக்கு கூட பலன் கிட்டும்.

ஆன்மீகத்தில் முக்கியத்துவம் பெற்ற சிவராத்திரியின் மகிமைகள் இவை!

 

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment